வாடகைக்கு குடி வைத்துப்பார்!

Posted: 16/10/2014 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, ,

எந்த வீட்டிலும் வாடகைக்கு குடி வருபவர், சாமான்களை இறக்கி வைத்தவுடன் செய்யும் முதல் வேலை, சுத்தியல் கொண்டு சுவரில் ஆணி அடிப்பதுதான். உழைத்துச் சேமித்த பணத்தில் இடத்தை வாங்கி, மாதக்கணக்கில் அரசுத்துறை அலுவலகங்களுக்கு அலைந்தலைந்து அனுமதி வாங்கி, இன்ஜினியர் முதல் கொத்தனார், சித்தாள் வரை ஏமாந்து, வீடு கட்டிப் பெருமூச்சு விட்டவருக்குத் தெரியும்; அடிக்கப்படும் ஆணி, துளைத்துச்செல்வது, சுவரில் அல்ல; அவரது நெஞ்சில் என்று. இந்த வார்த்தைகளில் இருக்கும் வலியும், வேதனையும் எப்படிப்பட்டதென்று, வீட்டுக்காரர் பதைபதைப்பதை நேரில் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
‘வீட்டை கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்’ என்று பெரியவர்கள் சொல்லி வைத்தது அந்தக்காலம். வீடு கட்டுவதற்கும், கல்யாணம் நடத்தி முடிப்பதற்கும் பட வேண்டிய சிரமங்களை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட வாக்கியம் அது. அதோடு,
‘கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டுப்பார்’ என்பதையும் இப்போது சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு வாடகைக்கு குடியிருப்பவர்கள், பாடாய் படுத்துவது இந்தக்காலம்.
வீட்டு உரிமையாளரை, நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன், ஆனந்தராஜ், பொன்னம்பலம்போல சித்தரிக்கும் சினிமாக்கள் வந்திருக்கின்றன; நகைச்சுவை துணுக்குகளும் வெளியானதுண்டு. வாடகைக்கு குடியிருப்பவர், வீட்டுக்காரரை ஏமாற்றுவது போல் சினிமாக்களும் வந்திருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இருக்கும் பிரச்னைகளை, சினிமாக்காரர்களும், துணுக்கு எழுதுவோரும் தொடுவதேயில்லை.
வீட்டு உரிமையாளர், மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாகவும், தண்ணீர் கட்டணம் தனியாக வசூலிப்பதாகவும் புகார்களும், பத்திரிகை செய்திகளும் வெளியாவதுண்டு. வாடகைக்கு குடியிருப்பவர், வீட்டில் செய்யும் அழிச்சாட்டியங்கள் எங்காவது வெளியில் தெரிகின்றனவா?
வீட்டுக்காரர் குடிப்பழக்கம் இல்லாதவராக இருப்பார். குடி வருபவர் அப்படி இருப்பாரா? தினமும் குடித்து விட்டு வந்து, மனைவி, குழந்தைகளை தாறுமாறாக திட்டித்தீர்ப்பார். சில வீடுகளில் மீன், மாட்டுக்கறி விரும்ப மாட்டார்கள். குடி வரும் குடும்பம், அதை விரும்பிச்சாப்பிடும்.
துணி துவைப்பதாக கூறி, ஏரியாவையே மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்வர். அதுவும் தண்ணீர் பிரச்னை அதிகம் இருக்கும் காலங்களில், ‘வாடகைதான் தருகிறோமே’ என்ற உரிமையில், பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் ஊற்றி துவைத்தெடுக்கும்போது, வீட்டுக்காரர் கண்களிலும், காதுகளிலும் புகை வரும் பாருங்கள். வீட்டுக்காரருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஜென்மப்பகையாக இருக்கும். குடி வருபவர், பக்கத்து வீட்டுக்காரருடன் பூர்வ ஜென்மத்து உறவுபோல பழக ஆரம்பிப்பார்.
வீட்டுக்காரருக்கும், அவரது உறவுக்காரர்களுக்கும் இடையே கோள் மூட்டி விடும் திருப்பணியை சில வாடகை குடித்தனக்காரர்கள் செவ்வனே செய்து விடுவர். வீட்டு உரிமையாளர் பற்றியும், அவரது மனைவி, மக்கள் பற்றியும், வெளியில் தாறுமாறான பிரசாரம் செய்யும் வாடகையாளர்களும் இருக்கின்றனர்.
ஏதோ கணவன், மனைவி, ஒரு குழந்தை என்று நம்பி, வாடகைக்கு வீடு தருவது வீட்டு உரிமையாளருக்கு வழக்கமாக இருக்கும்; இரண்டாம் வாரமே, ஊரில் இருந்து ஒரு படையே வீட்டில் வந்து இறங்கி விடும். அவர்களில் சில பேர், நிரந்தரமாகவே தங்கி விடுவர்.
சமையல் செய்கிறேன் பேர்வழி என்று சுவரெல்லாம் கரிப்பிடிக்க வைப்பர். குழந்தைகள், கிரிக்கெட் விளையாடி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துத் தொலைப்பர். பென்சில், பேனா, ஸ்கெட்ச், க்ரையான் கொண்டெழுதி, அலங்கோலமாய் சுவரை மாற்றி விடுவர். இப்படியெல்லாம், வீட்டுக்காரரை படுத்தியெடுக்கும் வாடகைக்காரர்கள் உண்டு.
குடி வந்த புதிதில் பூனை போல் பதுங்கி விட்டு, நாட்கள் செல்லச்செல்ல, புலியாக பாய்பவர்களும் இருப்பர். ஆரம்பத்தில் உறவு முறை கொண்டாடி, குழம்பும், ரசமும், பொரியலும் பரிமாறி, அடுத்த சில மாதங்களில், குசலம், குடுமிப்பிடியாக உருமாறி, பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று, வீட்டை காலி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
பழைய படம் ஒன்றில், வீட்டு உரிமையாளர் கவுண்டமணி, தன் வீட்டில் குடியிருப்போரை பார்த்துப்பேசுவதாய் வரும், ‘இந்த சிங்காரச் சென்னை மாநகரத்துல…இப்படி ஒரு சிறப்பான வீட்டைக்கட்டி…’ என்றொரு டயலாக் வரும். உண்மையில், ஒவ்வொருவருக்கும், அவரவர் வீடு, சிறப்பான வீடு தான். வாடகைக்கு வருபவருக்கு, அத்தகைய சிறப்பான வீட்டுக்கு வரும்போது, குறைகள் எதுவும் கண்களுக்குத் தெரியாது.
நாட்கள் செல்லச்செல்ல, வீட்டில் இருக்கும் குறைபாடுகள் எல்லாம், பூதாகரமாகத் தெரியும். அப்புறமென்ன, வாடகை பாக்கி, கிடுக்கிப்பிடி, வாய்த்தகராறு, வீட்டைக்காலி செய்வதெல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறி விடும்.
நமக்கு இந்த சப்ஜெக்டில் பேரனுபவம் இருக்கிறது. வாடகைக்கு குடி வைத்து விட்டு, பிறகு அவர்களை காலி செய்த அனுபவம் மட்டுமல்ல; வாடகைக்கு குடியிருந்த அனுபவமும் இருக்கிறது. பட்டிமன்றம் நடத்தினால், வீட்டு உரிமையாளர் தரப்புக்கே என் ஆதரவு. காரணம், வீட்டு உரிமையாளர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள் ஆயிற்றே! ‘வீட்டில் சாப்பாடு கிடைக்கணுமா, வேண்டாமா’ என்ற குரல், உங்களுக்கு கேட்டிருக்க வேண்டுமே!

……………
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம், வாடகைக்கு குடியிருந்தது. குடும்பத்தில் கடைசி மகன், பத்தாம் வகுப்பு படித்திருந்தான். அவன் வீட்டில் சும்மா இருப்பதால், உதவி செய்வதாக எண்ணி, தன் சீட்டு வசூல் வேலைக்கு அமர்த்திக் கொண்டார், வீட்டு உரிமையாளர். தினமும் மாலை வேலைகளில், வாடிக்கையாளர் வீடுகளுக்கு நேரில் சென்று, சீட்டுப் பணம் வசூலிப்பது, வீட்டு உரிமையாளர் சொல்லும் வேலைகளை செய்வது, அவனுக்கு அன்றாட வேலையானது.
இரண்டாண்டுகள் கடந்தன. வாடகைக்கு குடியிருப்பவருக்கு, வீட்டு உரிமையாளர் மேல் ஏதோ அதிருப்தி. ‘வேலைக்குப் போக வேண்டாம்’ என்று மகனிடம் சொல்லி விட்டார். வீட்டு உரிமையாளரும், சரியென்று ஒப்புக்கொண்டார். ‘வேறு பையனை வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். வாடிக்கையாளர் வீடுகளை மட்டும் காட்டி விடு’ என்றார். பையனும் சரியென்றான்.
அவன் அப்பா, ‘அதெல்லாம் தேவையில்லை’ என்று கூறி விட்டார்.
இங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது.
வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவருக்கும் வாக்குவாதம்.
‘‘வேலைக்கு வரலைன்னா, பொறுப்பு ஒப்படைக்கணுமா, வேண்டாமா’’
வீட்டுக்காரர் ஆவேசமாக கேட்டார்.
‘‘ஆமா, பெரிய கவர்னர் உத்யோகம். பொறுப்பு ஒப்படைச்சாத்தான் அடுத்தவரு வந்து பதவியேத்துக்குவாரா?’’
இது வாடகைக்கு இருப்பவரின் பதில் கேள்வி.
வீட்டுக்காரருக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வேடிக்கை பார்த்த சில பேர், சூழ்நிலை தெரியாமல் சிரித்துத் தொலைத்து விட்டனர். அவ்வளவுதான். வீட்டுக்காரர் சொல்லி விட்டார்.
‘‘எங்க வீட்டுல இருந்துட்டு, என்னைவே கிண்டல் பண்றீங்களா? மொதல்ல வீட்டைக்காலி பண்ணுங்க’’
வாடகை பார்ட்டியின் மனைவியும், மகளும் எவ்வளவோ பேசியும், வீட்டுக்காரர் இறங்கி வர மறுத்து விட்டார்.
‘‘என்னப்பாத்து, கவர்னர் உத்யோகமான்னு கேட்டவங்களை எங்க வீட்டுல எப்படி குடி வைக்க முடியும்? காலி பண்ணிட்டு வேற வேலையப்பாருங்க’’
இது என் கண் முன்னால் நடந்த சம்பவம்.
…….

பின்னூட்டங்கள்
 1. Rajarajeswari jaghamani சொல்கிறார்:

  ஏழரை வருடங்களாக குடி இருந்தவர் உரிமையாளர்மீது நீதிமன்றத்தில் பொய்வழக்குப்போட்டு கோர்ட்டுக்கு வாய்தா வாங்கி வாங்கி இழுத்தடித்தார்..

  அத்தனை வருடங்களும் சொத்துவரிகட்டி , தண்ணீர் வரிகட்டி , கடன் வாங்கி கட்டடம் கட்டியதற்கு வங்கி வட்டியும் கட்டி நொந்துபோனோம்.

  கடைசியில் ஏழரை ஆண்டு வாடகை கேட்க்கூடாது என்று இரண்டு இரண்டு பக்க வக்கீல்களும் கோர்ட்டுக்கு வெளியில் சமரசம் செய்து சாவி வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது..

  சட்டம் வாடகைக்குக்குடி இருப்பவர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறதாம்.

  இப்பொழுது வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கும் கௌதம் குப்தா ருசி கண்ட பூனையாக உரிமையாள்ர் மீது வழக்குப்போட காத்திருப்பார்.. வாடகை , வரி எதுவும் செலுத்தாமல் கடை நடத்திக்கொள்ளலாமே..!

  பெரும்பாலும் பகடி கொடுத்துத்தான் குடி இருப்பவரை காலி செய்யவைக்கவேண்டுமாம்..

  Liked by 1 person

 2. karanthaijayakumar சொல்கிறார்:

  உண்மைதான் நண்பரே
  குடிவருபவர் நல்ல மனிதராக இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை
  இல்லையென்றால் பிரச்சினையினை பேரம் பேசி வாங்கிய கதைதான்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s