பட்டாசு ஊழல் பராக்…பராக்…!

Posted: 05/10/2014 in அனுபவம், கட்டுரை, தமிழகம்
குறிச்சொற்கள்:, , , ,

தீபாவளி நெருங்கி விட்டது. வீட்டுக்குழந்தைகள் அனைவருக்கும் பட்டாசு ஞாபகமாகவே இருக்கும். ‘எங்க வீட்டில் 5 ஆயிரத்துக்கு பட்டாசு’ என்றொருவன் சொன்னால், அவனை விட அதிக தொகைக்கு நாம் வாங்கி விட வேண்டும் என்று, அப்பாவிடம் அடம் பிடிப்பான் மற்றொருவன். ‘அவங்க வீட்டில் 20 ராக்கெட் வாங்கிட்டாங்க, நாம 25 ராக்கெட்டாவது வாங்கியாக வேண்டும்’ என்று வாண்டு, அழுது கொண்டிருக்கும். சில வீட்டுப் பெரியவர்கள், ‘கேட்குறத வாங்கிக்குடுப்பா’ என்பர். அங்கே இருக்கும் வீட்டம்மா, முடியாது என்று பிரேக் போடுவார்.
சில வீட்டில் மனைவியர், ‘பட்டாசு நிறைய வாங்கலாம்’ என வேண்டுதல் வைத்தால், ‘காசைக் கரியாக்க வேண்டாம்’ என்று பெரியவர்கள் குறுக்கே நிற்பர். இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில், குடும்பத்தலைவர் பட்டாசு வாங்கப் போனால், விலைப்பட்டியலே மயக்கம் தருவதாக இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு விலைப் பட்டியல், ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டே போவதைப் பார்த்தால், மாதச்சம்பளம் வாங்குவோர் எல்லாம் என்னதான் செய்வார்களோ தெரியவில்லை, பாவம்.
பட்டாசு விலை உயர்வுக்கான காரணங்களில் முக்கியமானது லஞ்சம். பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்தில் நடக்கும் விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அதிகாரிகளுக்கு தரப்படும் லஞ்சம் என நீங்கள் நினைத்தால், அது மிக மிகத்தவறு.
விற்பனையாகும் இடத்தில் தரப்படும் லஞ்சம் இருக்கிறதே, அது உற்பத்தியாகும் இடத்தில் தரப்படும் லஞ்சத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம். சந்தேகம் இருந்தால், யாராவது பட்டாசுக் கடை நடத்தியவரை கேட்டுப்பாருங்கள்.
தீபாவளிக்கு பட்டாசுக் கடை வைக்க வேண்டுமெனில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம், அதாங்க லைசென்ஸ் பெற வேண்டும். ‘கலெக்டர் ஆபீசில் இருக்கும் டி.ஆர்.ஓ.,விடம் லைசென்ஸ் வாங்கணும், அவ்வளவுதானே’ என்கிறீர்களா, அது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல.
போலீஸ், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய 3 முக்கிய துறைகளில் இருந்தும் அனுமதி பெற வேண்டும். இது தவிர, நீங்கள் கடை வைக்கப்போகும் இடம் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பின் அதிகாரியிடம் இருந்து, உதாரணத்துக்கு மாநகராட்சி, நகராட்சியாக இருந்தால் கமிஷனர், டவுன் பஞ்சாயத்தாக இருந்தால் செயல் அலுவலர் ஆகியோரிடம் இருந்து, ஆட்சேபம் இல்லா சான்று பெற வேண்டும். இவை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு சென்றால், டி.ஆர்.ஓ.,வின் கீழ் செயல்படும் ஒரு அலுவலர், லைசென்ஸ் கொடுத்து விடுவார்.
இவ்வளவுதாங்க, இதை வாங்கி விட்டால், கடை வைத்து விடலாம். வாங்கியவர்களை கேட்டுப் பாருங்கள், இது, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிய தீவுக்குள் சிறைபட்ட இளவரசியை மீட்டு வரும் அம்புலிமாமா கதைகளைவிட, சுவாரசியமானதாக இருக்கும்.
இந்த ஒவ்வொரு துறைக்கும் குறைந்தது ஏழெட்டு முறை சென்று வர வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மட்டுமல்ல, அவரது டிரைவர், உதவியாளர் வரை லஞ்சம் தர வேண்டியிருக்கும். அது மட்டுமின்றி, சிவகாசியில் இருந்து பட்டாசு லோடு வந்தவுடனேயே, அதாவது கடை திறப்பதற்கு முன்பாகவே, பண்டல் பண்டலாக, பட்டாசு கிப்ட் பாக்ஸ் தண்டம் அழ வேண்டியிருக்கும்.
இந்த நடைமுறைகளை எல்லாம், லஞ்சம் தராமல், கிப்ட் பாக்ஸ் அழாமல், கடந்து வர வேண்டும் என்று யாரேனும் மடையர்கள் நினைத்தால், குறைந்தது 3 மாதம், காலை முதல் மாலை இதே வேலையாக அலைந்து கொண்டிருக்கத் தயாராக இருந்தால் போதும். ‘அப்படி அலைந்தால், லைசென்ஸ் கிடைத்து விடும் அல்லவா’ என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.
‘சரி, லைசென்ஸ் வாங்குவதற்கு வேறு வழியே இல்லையா’ என்பது தானே சந்தேகம்? வழி இருக்கிறது. இதற்கென ஊருக்கு ஊர் அரசு அங்கீகாரம் பெற்ற லஞ்ச புரோக்கர்கள் இருக்கின்றனர். அவர்களை அணுகினால், ஆடாமல், அசையாமல், அலைச்சல் இல்லாமல், இருந்த இடத்திலேயே லைசென்ஸ் வாங்கி விட முடியும். அதற்கு அவர்கள் சொல்லும் சேவைக்கட்டணம், ரஜினியின் சிவாஜி படத்தை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். பல பேர், அதைக் கேட்டவுடனேயே பட்டாசு வியாபாரம் செய்யும் எண்ணத்தை கைவிட்டு விடுவர்.
‘ஏதோ, சீசன் வியாபாரம், கொஞ்சம் காசு பார்க்கலாம்’ என்று பட்டாசு விற்க நினைத்து, சிவகாசியில் போய் பட்டாசு வாங்கி வந்து விட்டு, லைசென்ஸ்க்கு மனு கொடுத்த அப்பாவிகள் இருக்கிறார்களே, அவர்கள் படும் அவதியும், பாடும் புலம்பலையும் கேட்டுப்பாருங்கள்.
தீபாவளிக்கு முதல் நாள் இரவு வரை, லைசென்ஸ் கையில் கிடைக்காது. லஞ்சமும், கிப்ட் பாக்சும் பறிப்பதற்கான எளிய வழிமுறை, லைசென்ஸ் தராமல் இழுத்தடிப்பதுதானே!
லஞ்சம் கை மாறாமல், கடை திறக்கும் தைரியம் யாருக்கும் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, புரோக்கர்களுடையது. ‘சார், லைசென்ஸ் கையில வாங்காம கடை போட்டீங்க, அப்புறம் பிரச்னைதான், மொத்த பட்டாசையும் போலீஸ் வந்து அள்ளிட்டுப் போயிடுவாங்க’ என்று புரோக்கர்கள் அச்சுறுத்துவர். பெரும்பாலான அரசுத்துறை ஊழியர்களும், இதே டயலாக்கை, ஏற்ற இறக்கத்துடன் பேசி வைப்பர்.
‘லஞ்சம் கொடுத்தவர்களுக்கு லைசென்ஸ் முன்னதாகவே கிடைத்து விடுமா’ என்றெல்லாம் கேட்டு விடவேண்டாம். கிடைக்காது, தரப்படாது. காரணத்தில்தான் இருக்கிறது, அரசு ஊழியர்களின் புத்திசாலித்தனம். ஏதாவது வெடி விபத்து நேரிட்டால், லைசென்ஸ் கொடுத்த அதிகாரிகளுக்கு பிரச்னை வந்து விடுமே? அப்படி நேரிட்டால், லைசென்ஸ் தரவில்லை என்று சமாளித்து விடலாம் அல்லவா?
அதாவது, தீபாவளிக்கு முதல் நாள் மதியத்துக்கு மேல்தான், லைசென்ஸ் வழங்கும் வேலை நடக்கும். பெரும்பாலானவர்களுக்கு முதல்நாள் இரவு, பட்டாசு விற்பனை முடிந்தநிலையில்தான் லைசென்ஸ் கிடைக்கும். டி.ஆர்.ஓ., ஆபீசில் வேலை பார்க்கும் அலுவலர் ஒருவர், ‘முக்கியமான பேப்பர்’ எல்லாம் வாங்கிக் கொண்டு, ‘பிழைத்துப் போகட்டும்’ என்று பெருந்தன்மையாக லைசென்ஸ் கொடுப்பார்.
லஞ்சத்தை முன்னதாகவே கொடுத்தவர்கள், லைசென்ஸ் கையில் கிடைக்காதபோதே, தைரியமாக கடை துவக்கி விடுவர். பட்டாசுக் கடை நடத்த ஆயிரத்து எட்டு விதிமுறைகள் இருக்கின்றன. அவை பற்றி எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்காது. ஆனாலும், அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. காரணம், சம்பந்தப்பட்ட புரோக்கர், அனைத்து அரசு துறையினர் வசமும், பெயர், விவரம் சொல்லியிருப்பார்.
லஞ்சம் தராத, நெளிவு சுளிவுகளை அறியாத ஓரிரு ஏமாளிகள் இருக்கிறார்களே, அவர்களுக்குத்தான் இந்த விதிமுறைகள் எல்லாம். அவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
‘யாருக்குமே லைசென்ஸ் தரவில்லை, எப்படி அவன் மட்டும் கடை போடுகிறான்’ என்று போவோர், வருவோரிடம் எல்லாம் வெட்டி விசாரணை செய்வர். ‘சரி நாமும் கடை போடலாம்’ என்று போட்டால், போலீஸ் வந்து பட்டாசை அள்ளிச்சென்று விடும். அப்புறம், ஆயுசுக்கும் பட்டாசுக்கடை நடத்தும் எண்ணமே அவர்களுக்கு வராது.
தற்போதைய நிலையில், நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பட்டாசின் விலையிலும், குறைந்தது 25 சதவீதம் வரை லஞ்சமாகவே தரப்பட்டிருக்கும். ஆகவே, சிவகாசிக்காரர்கள் விலையை தாறுமாறாக ஏற்றி விட்டார்கள் என்று யாரேனும் சொன்னால், அது உண்மையல்ல; பொய்யின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

பின்னூட்டங்கள்
 1. me-too சொல்கிறார்:

  Unmai.

  Like

 2. ranjani135 சொல்கிறார்:

  பட்டாசு ஊழல் தீபாவளிக்கு முன்பே உங்கள் தளத்தில் வெடித்துவிட்டதே! குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் பட்டாசு வாங்குவது நின்றுவிட்டது.

  எந்த தமிழ் பத்திரிகையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

  Like

  • வாருங்கள் மேடம். லஞ்சம் மட்டும் இல்லையென்றால், பட்டாசு விலை எல்லாம், பாதிக்கும் கீழே குறைந்து விடும் மேடம். உங்கள் கேள்விக்கான பதில், லோகநாதன் சாருக்கு அளித்த பதிலில் இருக்கிறது மேடம். உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் மேடம். தங்கள் வருகைக்கு நன்றி

   Like

 3. vmloganathan சொல்கிறார்:

  மிக்க நன்றி ஐயா. உண்மையை உரக்க சொன்னமைக்கு..

  Like

 4. chitrasundar சொல்கிறார்:

  எங்கும் அலையாமல் இனி நினைத்த மாத்திரத்தில், கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சு, பட்டாசுக் கடையை ஆரம்பிக்க, நீங்கள் கொடுத்த தீபாவளி டிப்ஸ் உதவும்.

  வீட்டிலும், பள்ளியிலும் இப்போதே ஆரம்பித்தால்தான் ஓரளவாவது ஊழல் இல்லாத நம்ம ஊரை பதினைந்து இருபது வருடங்கள் கழித்துப் பார்க்க முடியும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s