புளியைக் கரைக்கும் லட்சியம்!

Posted: 01/10/2014 in அனுபவம், நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , , , ,

‘இரு சக்கர வாகனம் ஓட்டிப்பழகி விட வேண்டும்’ என்பது, என் மனைவியின் நீண்ட நாள் ஆசை, விருப்பம், கனவு, லட்சியம். அதற்கு முதல் இடையூறாக இருப்பது, நம்மைத்தவிர வேறு யாராக இருந்து விட முடியும்?
‘கொஞ்சம் கையில் பணம் தயார் செய்து வைத்துக் கொள்கிறேன், அப்புறமாய் ஓட்டிப் பழகிக் கொண்டு விடலாம், அதுவரை பொறுத்துக்கொள்’ என்று, நையாண்டி செய்தே காலத்தை ஓட்டினேன். மருத்துவச் செலவுக்கெல்லாம் கையில் பணம் வேண்டும்தானே!
‘கட்டிய மனைவி என்ற முறையில் உனக்கு செலவழிப்பது நியாயம். நீ விபத்து ஏற்படுத்தி விட்டாய் என்பதற்காக, ரோட்டில் செல்பவருக்கெல்லாம் நான் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுமே, அதற்குத்தான் யோசிக்கிறேன்’ என்றெல்லாம் என்னால் கடுப்பேற்றப்பட்டதாலோ, என்னவோ, என் மனைவிக்கு, லட்சிய தாகம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.
பல்லாண்டு காலம் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் ஓடி ஓடி, ஓடாய்த் தேய்ந்த டிவிஎஸ் 50, வீட்டில் தனியறையில், ஓய்வில் இருந்தது. அதற்கொரு வாழ்வு கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, என் மனைவியும், மகள்களும், அதை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்ட ஆரம்பித்தனர்.
கிளட்ச், பிரேக் இரண்டையும் பிடித்துக்கொண்டே ஸ்டார்ட் செய்து, அப்படியே ஆக்சிலரேட்டரையும் முறுக்கி, நகர்த்தி, வாசலில் ஓட்ட ஆரம்பித்தனர். ‘சரி, எப்படியோ, ஓட்டிப்பழகினால் சரி’ என்று, நானும் விட்டு விட்டேன். எனக்காக பொறுத்துக் கொண்டதோ என்னவோ, அந்த டிவிஎஸ் 50யும் சில வாரம் அப்படியே பல்லை கடித்துக் கொண்டு வாசலில் ஓடியது. இல்லையில்லை, நகர்ந்தது; ஊறியபடியே சென்றது.
அப்புறம் பாவம், கார்ப்பரேட்டரில் குபுக் குபுக்கென புகை வர ஆரம்பித்து விட்டது. ஸ்டார்ட் செய்தபிறகும், எங்கேயும் நகராமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடித்தது. ‘இதுவும் அப்பாவைப்போலவே இம்சிப்பதாக’ புகார் கூறிக்கொண்டே, மீண்டும் அதே அறையில் கொண்டுபோய் போட்டு விட்டனர். அப்படியும், டூவீலர் ஓட்டும் ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.
யாராவது ரோட்டில் பெண்கள் டூவீலர் ஓட்டிச்செல்வதை பார்த்து விட்டால் போதும், நமக்கு ‘வாழ்த்து’ மழை பொழிய ஆரம்பித்து விடும். ஓட்டிப்பழக்கி விடாதது குற்றமாம். என்ன கொடுமை சாமி!
‘ஏன் திருமணத்துக்கு முன்பே ஓட்டிப் பழகியிருக்க வேண்டியதுதானே’ என்று கேட்டிருக்கலாம்தான். கேட்டால் என்ன பதில் வருமென்று தெரியாதா என்ன? ‘பைக் ஓட்டிப் பழகியிருந்தால், நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்திருப்போமே’ என்று பதில் வரும். இதுபோன்ற கேள்வி பதில்களில், நிறைய முன் அனுபவம் உண்டென்பதால், அப்படி கேட்டுவிட வேண்டுமென்று, இப்போதெல்லாம் நமக்கும் தோன்றுவதே இல்லை.
இப்படியே காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ‘இந்த நிலை மாறும்’ என்பது மாறாத விதியல்லவா? அப்படியொரு மாற்றம், உறவுக்காரப் பெண்கள் இருவரால் வந்து விட்டது. ‘நாங்கள் டூவீலர் ஓட்டிப் பழகப் போகிறோம். லைசென்ஸ் உடன் சேர்ந்து 3500 ரூபாய் தான்’ என்று வீடு தேடி வந்து கொளுத்திப் போட, எங்கள் வீட்டில் ஊசிப்பட்டாசு வெடிக்க ஆரம்பிக்க விட்டது. ‘நானும் பழகப் போகிறேன்’ என்று, மறுநாளே கிளம்பிவிட்டார், மனைவி. மகள்களும், மாமியாரும் (எங்க அம்மாதான்) உசுப்பேற்றி விட, இப்போது பயிற்சி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு தினமும் கொண்டுபோய் விடுவது, நமக்கு பெரும் உத்யோகமாக மாறி விட்டிருக்கிறது. முன்பெல்லாம், மகள்களை பள்ளியில் கொண்டுபோய் விடுவது, அழைத்து வருவது, மனைவியை அலுவலகத்தில் கொண்டுபோய் விடுவது என்ற அளவில் மட்டுமே இருந்த நமது, வீட்டுக்கடமைகளின் எல்லை, இப்போது ‘டிரைவிங்’ பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வரை, விரிவடைந்து விட்டது.
எப்படியும், இன்னும் ஒரு சில நாட்களில் பயிற்சி முடிந்து விடும். அதன்பிறகு, வீட்டு வாசலிலும், வீதியிலும்தான் டூவீலர் ஓட்டியாக வேண்டும். என்ன நடக்குமோ என்பதை நினைத்தால்தான், வயிற்றில் புளியை கரைத்து விட்டதுபோல் இருக்கிறது.
‘முன்பெல்லாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்கு, ஆண்களை மட்டுமே பெண்கள் நம்பியிருந்தனர். பைக் ஓட்டிப் பழகிய பிறகுதான், அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெண்ணடிமைத் தனத்துக்கு உண்மையான முடிவு, பைக் ஓட்டிப்பழகியதில் தான் இருக்கிறது’ என்ற அர்த்தம் வரக்கூடிய கட்டுரையொன்றை, ஆங்கில பத்திரிகையொன்றில் சில ஆண்டுகளுக்கு முன் படித்ததுவேறு, நினைவுக்கு வந்து தொலைக்கிறதே!

Advertisements
பின்னூட்டங்கள்
  1. karanthaijayakumar சொல்கிறார்:

    கவலை வேண்டாம் நண்பரே
    பெண்கள் திறம்பட வாகனத்தை இயக்கும் வல்லமை பெற்றவ்ர்கள்தான்
    மிதமான வேகத்தில் சென்றால் பிரச்சினை என்பது இல்லையே

    Like

  2. jerald சொல்கிறார்:

    சார் வாங்கின தீபாவளி போனஸ்கு அடிபோட்டுடாங்க பேசாம ஒரு ஸ்கூட்டி வங்கி குடுத்துடுங்க ..இல்லன உங்களுக்கு தினமும் வெடி வைக்கப்படும்

    Like

  3. ranjani135 சொல்கிறார்:

    பயந்ததுபோல் இல்லாமல், மனைவி வெகு நன்றாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டுகிறார் என்று வெகு விரைவில் உங்களிடமிருந்து ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்!

    Like

  4. chitrasundar சொல்கிறார்:

    கவலைய விடுங்க, இனி ஜவுளிக் கடை வாசலில் காத்திருக்க வேண்டாம், நகைக் கடை பில்லைப் பார்த்து வாய்பிளக்க வேண்டாம்,…… இப்படி நிறைய ‘வேண்டாம்’கள் உங்களைத் தேடி வரும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s