24/09/2014 க்கான தொகுப்பு

சிறுவனாக இருக்கும்போது, யாராவது நாயை அழைத்துக் கொண்டு ‘வாக்கிங்’ போவதைப்பார்த்தால், சிரிப்பாக இருக்கும். ‘வீட்டில் வேலை எதுவுமின்றி, நாய் மேய்க்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்வேன். ‘ஊரார் உறவுகள் மத்தியில் பெருமை பேசவும், பந்தா காண்பிக்கவும் நாய் மேய்க்கின்றனர்’ என்பதே, அவர்களைப்பற்றிய என் எண்ணமாக இருந்தது. அப்படி நினைப்பதற்கு காரணங்கள் இருந்தன. எங்கள் வீட்டிலும் நாய் வளர்த்தோம். ஆனாலும், நாங்கள் ஒரு நாளும், வீதி வீதியாக நாயை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றதில்லை.
ஆகவே, நாயை பிடித்துக் கொண்டு செல்பவர்கள் எல்லாம், பந்தா பேர்வழிகள் என்பதாகவே, என் மனதில் வெகு காலமாய் பதிந்து விட்டது. சரி, தலைவலியும், பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே, அப்படியொரு பிரச்னை எனக்கும் வந்தது.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ‘டாமி’யை கருணைக்கொலை செய்தபின், ‘நாயெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று, வீட்டுச் செயற்குழு தீர்மானம் நிறைவேறியிருந்தது.
ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகள், தன் பள்ளித்தோழி வீட்டில் இருந்து, நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டாள். பொதுக்குழு தலைவர் என்ற முறையில், நாயெல்லாம் வேண்டாம் என்று, என் கருத்தை தெரிவித்தேன். அய்யாவும் அப்படியே சொன்னார். அம்மா மட்டும், பேத்திகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். அம்மா வரட்டும் என்றனர், மகள்கள் இருவரும். அம்மாவின் அதிகாரம் அறிந்த பிள்ளைகள்.
‘நாய் வீட்டில் அசுத்தம் செய்யும், நம் வீடென்றால் சுத்தம் செய்து விடலாம். பக்கத்து வீட்டின் முன் செய்துவிட்டால், அவர்கள் சண்டைக்கு வருவர்’ என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். ‘அம்மா வந்தவுடன் காட்டிவிட்டு, அப்புறம் கொண்டு போய் விட்டு விடுகிறேன்’ என்றனர், மகள்கள் இருவரும்.
அம்மா வந்தார். நாய்க்குட்டியை பார்த்தவுடன், ‘சீனு’ என்று பெயர் சூட்டி விட்டார். ஆக, வழக்கு, வாதம், எதிர்வாதம், தீர்ப்பு என எதற்குமே இடமில்லாத வகையில், அன்றே நாய்க்குட்டி வீட்டில் குடியேறி விட்டது. சொன்னபடியே, சில நாட்கள் நாய்க்குட்டியை பார்த்துப் பார்த்து பராமரித்த அக்காவும், தங்கையும், அதன்பிறகு எங்கள் பக்கம் தள்ளி விட்டனர்.
என்னைப்போலவே, முதலில் நாய்க்குட்டிக்கு ஆட்சேபம் தெரிவித்த அய்யாவும், நாளடைவில் சமாதானம் ஆகி விட்டார். அதன் உணவு, பராமரிப்பு எல்லாம் அவர் சார்ந்த துறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. உடன் விளையாடுவது மட்டுமே, பேத்திகள் வேலையாக இருந்தது.
நாய்க்குட்டி ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால்கூட, அய்யாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘நாய்க்குட்டி சோறே திங்கவில்லை’ என்று, வழியில் செல்வோர், வருவோரிடம் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுவார். இரவுப்பணி முடிந்து, 2 மணிக்கு வீட்டுக்குப்போனால், விழித்திருந்து, ‘நாய்க்குட்டி சாப்பிடவே இல்லை. ஊசி போடறவுனை வரச்சொல்லப்பா’ என்பார்.
இப்படியாக, நாய்க்குட்டி வளர ஆரம்பித்தது. அதை குறித்த நேரத்துக்கு வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். அக்காவும், தங்கையும், சில நாட்கள் அழைத்துச் சென்றனர்.
அக்கா வளர்ந்த பெண் என்பதால், நாய் இழுத்தாலும் பிடித்துக் கொள்வாள். தங்கை அழைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்தால், உள்ளுக்குள் பயமாக இருக்கும். சாலையில் செல்லும் வாகனங்கள் மீது இழுத்துச் சென்று தள்ளி விடுமே என்பதுதான் பயத்துக்கு காரணம்.
ஆதலால், இப்போதெல்லாம், தினமும் நான்கு வேளைக்கு குறையாமல், நாயை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை, நம்மிடம் வந்து சேர்ந்து விட்டது. நாம் இல்லையென்றால், வீட்டம்மா அழைத்துச் செல்ல வேண்டும். நம்மை நாயுடன் தெருவில் பார்க்கும் பல பேர் விசாரித்து விட்டார்கள். என்ன நாய் மேய்க்கிறாப்புலயா என்று. நமக்குத்தெரியாதா, கேள்வியின் நோக்கம் என்னவென்று?

ஆடு, மாடுகளுக்கு நோய் தாக்கினால், தொலைக்காட்சியில் காட்டுகின்றனர், பத்திரிகையில் செய்தி வெளியிடுகின்றனர். கலெக்டரிடம் மனு கொடுக்கின்றனர். கால்நடைத்துறையினரும் பரபரக்கின்றனர்.
வன விலங்குகளுக்கு நோய் தாக்கினாலோ, யாரேனும் அடித்துக் கொன்று விட்டாலோ கூட, அப்படித்தான் உலகமே பதைபதைக்கிறது.
ஆனால், நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அப்படியொன்றும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்வதில்லை. பாசத்துடன் நாய் வளர்ப்பவர்களை தவிர, வேறு யாரும் நாய்களுக்கு வரும் நோயைப் பற்றியெல்லாம் கவலைப்படவே தயாரில்லை.
எங்கள் வீட்டில் கடந்த இரு வாரங்களாக நாய்க்குட்டிக்கு உடல்நலம் கெட்டு விட்டது. மூன்று வெவ்வேறு டாக்டர்கள், கம்பவுண்டர்களிடம் காட்டி, ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்து, எதுவும் கேட்கவில்லை. கடைசியில், மாரியம்மன், தீர்த்தம், திருநீறு தான், நாய்க்குட்டியை காப்பாற்றியது.
அய்யா வேண்டிக் கொண்டபடி, மாரியம்மனுக்கு நாய் பொம்மை செய்து வைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். எங்கள் வீடு மட்டுமில்லை. ஊரில் பல இடங்களில் நாய்கள் நோய்வாய்ப்பட்டு விட்டன. எல்லாம் வயிற்றுப்போக்கு, வாந்தி தான். கவனிப்பில்லாத நாய்கள் செத்துப்போனதும் நடந்திருக்கிறது.
விசாரித்தால், இங்கு மட்டுமில்லை. மாவட்டத்தில் பல இடங்களில் இப்போது ஏதோ ஒரு வகை நோய் பரவுவதாக கூறுகின்றனர். ஆனாலும், கால்நடைத்துறையினர் யாரும், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, ஆடு, மாடு, எருமை இறந்துபோனால், பிரச்னை. விவசாயிகள் போர்க்கொடி உயர்த்துவர், சட்டசபையில், பார்லிமெண்டில் கூட பேசுவர், கணக்கெடுத்து நிவாரணம் தர வேண்டியிருக்கும். கால்நடைகள், நாட்டின் வளம் என்பர். நாய்களுக்கு அப்படியில்லை தானே?.
ஒரு வகையில், கால்நடைகளுக்கு இருக்கும் பொருளாதார முக்கியத்துவம் நாய்களுக்கு இல்லை என்பதும் உண்மையே. ஆனால், நாய்களால் தான், குடும்பத்தினரின் பொருளாதாரம் காப்பாற்றப்படுகிறது என்பதை, பாதிக்கப்படும் வரை, யாரும் ஒப்புக் கொள்வதே இல்லை.
நாய் இல்லாத வீடுகள், எந்தவித பாதுகாப்பும் இல்லாத வீடுகள். அங்கு திருடர்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட முடியும். நாய் இருக்கும் வீடுகளில் அப்படி நுழைந்து விட முடியுமா? அப்படியெனில், வீட்டின் செல்வத்தை காக்கும் நாய்களும் இந்த நாட்டின் செல்வம் தானே? ஆக, நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அது நாட்டுப்பிரச்னை என்றல்லவா ஆகிறது?
நாய்கள் இல்லாத உலகத்தை எண்ணிப்பாருங்கள்… முடியுமா என்ன? அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் என்ன ஆகும்? எந்த வீட்டிலும், பணம், பொருள் பாதுகாப்பாக இருக்க முடியாது. கொள்ளையர் கொட்டம் அதிகரித்து விடும். ஆகவே மக்களே, நாய் நன்றியுள்ள விலங்கு என்று பாடப்புத்தகங்களில் எழுதி, பள்ளிக்குழந்தைகள் சொல்லிக்கிழித்ததெல்லாம் போதும்; நாய்க்கு நோயென்றால், நடவடிக்கை உடனே எடுங்கள். அது, நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லது.