22/06/2014 க்கான தொகுப்பு

மேற்குலகின் படைக்கலன்கள், நேட்டோ நாடுகளின் தளங்களில் மட்டுமில்லை; அவை அந்தந்த நாடுகளின் பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. தத்தம் நாட்டுப்படை செல்லும் இடங்களுக்கும், செல்ல முடியாத இடங்களுக்கும், இப்படைக்கலன்கள் ஊடுருவி சென்று விடுகின்றன. தம் நாட்டரசு எடுக்கும் முடிவை எதிர்த்து நிற்பவை, புல் பூண்டாக இருந்தாலும், ஈவு இரக்கமற்று சுட்டுத்தள்ளுகின்றன. 

அந்த ‛புண்ணியவான்’களுக்கு, நீதி, நியாயம், தர்மம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஆனாலும், உலகெங்கும் பத்திரிகை தர்மம் பற்றி வகுப்பெடுப்பது அவர்கள் தான். ‛மாறி வரும் உலகை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கு எத்தகையதாக இருக்க வேண்டும்’ என்று, நாடு நாடாகச்சென்று பேருரை நிகழ்த்துவதும் இந்தக்கூட்டமே.
தங்கள் நாட்டு நலன் என்று வரும்போது, தர்மம், நியாயம் எல்லாம் குப்பைக்குப் போய்விடும்.
இந்தப் பேருண்மை உலகுக்கு தெரியவந்து ஆண்டுகள் பலவாகினும், பட்டவர்த்தனமாக அம்பலமானது, வளைகுடாப் போர்களின்போது தான்.
‛எம்பெடட் ஜர்னலிசம்’ என்ற புதிய உத்தியின் மூலம், சதாம் உசேனை எதிர்த்துப் போர் புரிந்த அமெரிக்க பிரிட்டீஷ் படையினருடன், தோளோடு தோள் நின்று, போரிடாமல் போரிட்டனர், மேற்கத்திய செய்தியாளர்கள். இந்த கேடு கெட்ட வேலையின் நோக்கம் பற்றி செல்சியா மேனிங் என்கிற பிராட்லி மேனிங் எழுதியிருக்கும் கட்டுரை, அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்காவின் போர் ஆவணங்களை விக்கி லீக்சுக்கு கொடுத்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மேனிங், எம்பெடட் ஜர்னலிசத்தால் மக்களுக்கு கிடைத்த தகவல்கள் எவ்வளவு பொய்யானவை என்று உடைத்துச்சொல்கிறார். படைகளுடன் செல்லும் செய்தியாளர், ஒரு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அவரது முந்தைய செயல்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
‛போர்க்களத்தில் இருந்து அனுப்பும் செய்திகள், படையினர் நலன் கருதியதாக இருத்தல் அவசியம். மீறினால், செய்தியாளர் வெளியேற்றப்படுவார். மீண்டும் போர்க்களம் செல்ல முடியாது’ என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. ஆகவே, உண்மை நிலைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத தகவல்களே பல நேரங்களில் செய்தியாக வெளியாகின என்று கூறியுள்ளார், மேனிங். உண்மையில் அவர் பாராட்டப்பட வேண்டியவர் தான்.
…..
சதாம் ஆட்சியின் கடைசி நாட்களில் நடந்த சம்பவம் இது. தலைநகர் பாக்தாதை அமெரிக்கப்படைகள் நெருங்கி விட்டனர். அமெரிக்க குண்டு வீச்சில் சதாம் உசேன் படுகாயமுற்றதாகவும், வெளிநாட்டுக்கு ரகசியமாக குடும்பத்துடன் தப்பியோடி விட்டதாகவும், மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அதுவும் பாக்தாத் நகர ஓட்டலில், அந்நாட்டு அரசின் பாதுகாப்பில் இருந்து கொண்டே.
இப்படிப்பட்ட நிலையில், திடீரென ஒரு நாள், ஈராக் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. ‛அமெரிக்க குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிபர் சதாம் உசேன் பார்வையிட்டார்’ என படக்காட்சியுடன் வெளியானது அந்த செய்தி.
மேற்குலக ஊடகங்களால் அதை தாங்கிக்கொள்ள முடியுமா? செய்தியை ஒளிபரப்பாமல் இருக்கவும் முடியாது. ஈராக் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், சதாம் குடியிருப்புகளை பார்வையிடுகிறார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார். மக்களில் சிலர் ஓடோடி வந்து அவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். சிலர் அவர் கைகளைப் பற்றி முத்தமிடுகிறார்கள். அவர்களுடன் சிரித்துக் கொண்டே பேசும் சதாம் உசேனை கண்ட மேற்குலகம் அதிர்ச்சியில் உறைகிறது.
‛தப்பி ஓடி விட்டார்’ என்று நாம் கூறும் நபர், ஊருக்குள் மக்களுடன் கலந்துரையாடும் காட்சி வெளியானால் எப்படி இருக்கும்? இந்தக்காட்சியை பிபிசி செய்தியாளர் வர்ணித்த விதம் இருக்கிறதே! அது இன்னும் கொடுமையானது. ‛ஏ மேன் அப்பியர்ஸ் டூ பீ சதாம் ஹூசேன், இஸ் வாக்கிங் இன் த ஸ்ட்ரீட்’ என்றார் ராகே ஓமர் என்ற அந்த செய்தியாளர்.
‛சதாம் உசேன் போன்று தோற்றமளிக்கும் ஒருவர் வீதியில் நடந்து செல்கிறார்’ என்று ஆரம்பித்து ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு முறை, ‛த மேன் அப்பியர்ஸ் டு பீ சதாம் உசேன்’ என்றார்.
பாவம், கடைசியில் அந்தக்காட்சிகளகள் உண்மையானவை, அந்த மனிதரும் சதாம் உசேன் தான், அந்தக்காட்சி ஒளிபரப்பாவதற்கு சற்றுமுன்னர் எடுக்கப்பட்ட காட்சிதான் என்பதெல்லாம் பின்னர் நிரூபணம் ஆனது. ஆக உண்மைச்செய்தியை தரவேண்டும் என்ற நோக்கம் எதுவும் மேற்கத்திய ஊடகங்களுக்கு இல்லை என்பதே உண்மை.
இதற்கு சமீபத்திய உதாரணம், உக்ரைனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரைன் அரசுக்கு எதிராக, ஒரு கும்பல் தலைநகரில் போராட்டம் நடத்தியதை, மக்கள் புரட்சி செய்வதாக, மேற்கத்திய ஊடகங்கள், நாளும், பொழுதும் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் ரஷ்யாவுடன் இணைய கருத்து வாக்கெடுப்பு நடத்தியதை, மண் வாரித் தூற்றாத குறையாக, குற்றம் கூறிக் கொண்டிருக்கின்றன.
இப்படியெல்லாம் அக்கிரமம் செய்யும் மேற்கத்திய ஊடகங்கள்தான், பிற நாட்டு அரசுகளுக்கும், ஊடகங்களுக்கும் வண்டி வண்டியாய் அறிவுரைகளை வாரி வழங்குகின்றன. கொடுமை!
……
ஈராக்கில் இப்போது நடந்து வரும் உள்நாட்டுப் போரில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பதென தெரியாமல், ஒபாமா அரசு திணறி வருகிறது. இதை நேர்மையான முறையில் விமர்சனம் செய்வதற்கு, எந்த மேற்கத்திய ஊடகமும் தயாரில்லை.
அரசுக்கு வலித்து விடாதபடி, ஆலோசனைகளை மட்டும் அள்ளி அள்ளி வீசுகின்றனர். பாவம், ஒபாமா. ஆலோசனைக் குப்பைகளில், எந்தக்குப்பை நல்ல குப்பை எனத் தெரியாமல், பரிதவித்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் காது கேட்காதது போலவும், கண்கள் தெரியாதது போலவும் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவரது நிலை, உண்மையிலேயே பரிதாபத்துக்குரியதுதான்.

……

செய்தியாளர் சந்திப்புகளில் டுபாக்கூர் செய்தியாளர்கள் செய்யும் அட்டகாசங்கள் எழுதி மாளாது. அவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம், ‛குண்டக்க மண்டக்க’ ரேஞ்சில் தான் இருக்கும். தம் இருப்பை காட்டிக் கொள்வதற்காக நிறைய கேள்விகள் கேட்பது சில டுபாக்கூர்களின் வழக்கம். ‛முதல் கேள்வி, தங்களுடையதாக இருக்க வேண்டும்’ என்றே பெரும்பாலான டுபாக்கூர்கள் விரும்புவர். 

தமிழக முதல்வரின் செய்தியாளர் சந்திப்புகளில், ‛அம்மா’, ‛அம்மா’ என்று கூவும் கூட்டத்தில் பெரும்பகுதியினர், இத்தகைய செய்தியாளர்களே. எப்படியாவது ஜெயலலிதாவின் கவனத்தை கவர வேண்டும் என்பதே, அந்த கூவுதலின் நோக்கமாக இருக்கும். அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம், ஜால்ரா ஒலி எழுப்புவதாகவே இருக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, செய்தியாளர்களின் கேள்விகளும், அதன் நோக்கங்களும் அத்துபடி. எளிதில் சமாளித்து விடுவார். கோபம் உச்சத்துக்கு சென்றால் மட்டுமே, ‛நீ எந்த பத்திரிகை’ என்று எதிர் கேள்வி கேட்பார்.
எப்போதும், செய்தியாளர்கள் திரிந்து கொண்டிருக்கும் இடம், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் தான். காரணம், காங்கிரஸ் தலைவர்களில் பலர், ஓட்டைவாயர்கள். செய்தி அல்லது வேறு ஏதாவது தேறும் என்ற எண்ணத்தில் அங்கு டுபாக்கூர் செய்தியாளர்கள் முகாமிட்டிருப்பது வழக்கம்.
….
தமிழக காங்கிரஸ் தலைவராக வாசன், மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்தபோது நடந்த சம்பவம், மறக்க முடியாதது. அன்று செய்தியாளர் சந்திப்பு ஆரம்பித்தவுடன் ஒரு டுபாக்கூர் எழுந்தார். ‘சார், காங்கிரஸ்- பாஜ கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி அமையுமா’ என்று கேட்டு விட்டு அமர்ந்து கொண்டார்.
வாசனுக்கு கடும் அதிர்ச்சி. மேசை மீதிருந்த தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு, ‘எந்தெந்த கட்சி’ என்று மீண்டும் கேட்டார். டுபாக்கூர் மீண்டும் அதே கேள்வியை கேட்டார். அங்கிருந்த கட்சிக்காரர்கள் சிலர், ‘என்ன இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி கேட்கிறார்’ என்று மற்ற செய்தியாளர்களிடம் பாய்ந்தனர்.
டுபாக்கூரின் கிறுக்குத்தனங்களை முன்னமே அறிந்திருந்த மற்ற செய்தியாளர்கள், வாசனையும், அங்கிருந்த கட்சி நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தி, செய்தியாளர் சந்திப்பை தொடர வைத்தனர்.
……

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இம்மலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும், ‛நாடு’ எனப்படும் 14 கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும், கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் முதல் ஆயிரத்து 300 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்திருக்கின்றன.

குளிர்ச்சியான தட்பவெப்பமும், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களும், மனதுக்கும், கண்களுக்கும், விருந்து படைப்பவை. இம்மலைக்கு செல்லும் பாதை, 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அவற்றில் சில அபாயகரமானவை. 

இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், சோழர் காலத்தை சேர்ந்தது. புலவர்களால் பாடப்பெற்றது. கொல்லிமலையும் சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மலையே. இதை ஆண்ட வல் வில் ஓரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது வீரமும், கொல்லிமலையின் இயற்கை வளமும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத கோவில்களும், ஆசிரமங்களும், மூலிகை சிகிச்சை மையங்களும் நிறைய இருக்கின்றன.
கொல்லி மலையின் ரகசியங்களில் முக்கியமானது, கொல்லிப்பாவை. சித்தர்கள் தவம் செய்யும்போது இடையூறு செய்த அரக்கர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கை இப்பகுதி மலை மக்களிடம் இருக்கிறது.
இங்குள்ள வனம், அடர்த்தி குறைந்தது. காட்டுப் பன்றியும் குரங்குகளும் மட்டுமே பிரதான விலங்குகள். கரடி இருந்ததாக ஓரிருவர் கூறியதுண்டு. ‛கொல்லிமலை சிங்கம்’ என்றொரு சினிமா கூட சமீபத்தில் வந்தது. அதைப்பார்க்கும் யாராவது கொல்லிமலையில் நிறைய சிங்கங்கள் திரிவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்
கொல்லிமலையின் முக்கிய கிராமமான செம்மேட்டில், வல் வில் ஓரியின் சிலை இருக்கிறது. ‛இந்த சிலைக்கு மாலை போட்டால் பதவி பறிபோய்விடும்’ என்றொரு மூட நம்பிக்கை எப்படியோ பரவி விட்டது. அதனால், கொல்லிமலையில் வல் வில் ஓரி விழாவுக்கு சென்றாலும், சிலைக்கு மாலை போடாமல் பயந்தடித்து ஓடுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஒரு சில கலெக்டர்களும், அவ்வாறே ஓடியதை கண்டிருக்கின்றேன். இத்தனைக்கும், அது ஒன்றும் பழங்கால சிலை கூட அல்ல, சில தலைமுறைகளுக்கு முன் நிறுவப்பட்டதே..
கொல்லிமலையின் மிகப்பெரும் ரகசியம், சித்தர்கள் வாழ்ந்ததாக கூறுவது. ‘இப்போதும் வாழ்கிறார்கள், சாதாரண மனிதர்கள் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைய உலவுகின்றன. அதை அங்கு வசிக்கும் மலை மக்கள் பலர் நம்புகின்றனர்.
இங்குள்ள சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றால், நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். முன்பெல்லாம் சரியான படி வசதியின்றி மக்கள் சிரமப்பட்டனர் இப்போது பிரமாதமான படிகள் அமைக்கப்பட்டு விட்டன.
கலெக்டராக சுந்தரமூர்த்தியும் அவரை தொடர்ந்து சகாயமும் இருந்தபோது கொல்லிமலை மேம்பாட்டுக்காக பெருமுயற்சி எடுத்தனர். ஏரி கூட அமைக்கப் பட்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் அல்லாமல், நெரிசலற்ற, அமைதியான மலை வாழிடம் இது. தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. சேலம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கொல்லிமலையில் பாக்சைட் மணல் எடுக்க அனுமதி வழங்கியதுதான் அதன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமைந்து விட்டது. அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு பல இடங்களில் மலை முகடுகளை மொட்டையாக்கி விட்டார்கள். சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக நிலைமை மோசமாகாமல் தவிர்க்கப் பட்டிருக்கிறது.
கொல்லிமலையில் இருந்த வன அதிகாரி ஒருவர், ஒரு நாள் போனில் அழைத்தார். ‘சார், மலைக்கு போட்டோகிராபரோட வரமுடியுமா’ என்றார். சென்றோம். அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அடர்ந்த காப்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
‘பாருங்க சார்’ என்று அவர் காட்டிய இடத்தில், ஆழமான குழி இருந்தது. மூன்றடி விட்டம் கொண்ட அந்த குழியின் ஆழம் 20 அடி இருக்கும். அதேபோன்ற குழிகள் வனத்துக்குள் இன்னும் பல இடங்களிலும் இருந்தன. எல்லாம், மலையில் இருக்கும் கனிம வளத்தை கண்டறிவதற்கான சட்ட விரோத முயற்சியின் அடையாளங்கள்.
‘எனக்கு முன்னாடி அதிகாரிங்க சப்போர்ட்ல இப்படி செஞ்சிட்டாங்க சார். இதை கண்டுபிடிச்சு ரிப்போர்ட் செஞ்ச சில வாரத்துல என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார்.
கொல்லிமலையில் ரகசியங்கள் ஏராளம். கொல்லிப்பாவையும், சித்தர்களும் தவிர்த்த ரகசியங்களில், பாக்சைட் மணல் எடுப்பவர்களின் மாயமந்திர அதிகாரம் முக்கியமானது.