ஜூன், 2014 க்கான தொகுப்பு

 

பயணங்கள் சுவாரஸ்யம் மிகுந்தவை. அதுவும், தனிமை இணைந்திருக்கும் பயணங்கள், மனதை வருடும் அற்புதத்தருணங்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, வழியெங்கும் மனிதர்களையும், மலைகளையும், மரங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லும் பயணங்கள் தரும் அனுபவம், குதூகலமானது.
அப்படியெல்லாம் ஆழ்ந்து அனுபவித்த காலம், ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதாகவே சமீபத்திய பயணங்கள் எனக்கு உணர்த்துகின்றன. காரணம், மொபைல் போன். பயணிக்கும் அனைவரும், ஊர், உறவுகளுடன் தொடர்பில் இணைந்திருக்க உதவும் மொபைல் போன்கள், தனிமை விரும்பும் பயணிகளை இம்சிப்பதாகவே மாறி விட்டன.
டிரைவர், கண்டக்டருடன் 50 பேர் பயணிக்கும் ஒரு அரசு பஸ்சில், சுமார் 45 பேராவது கையில் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். பாதிப்பேர் பேசிக்கொண்டும், மீதிப்பேர் அதில் விளையாடிக்கொண்டும் பயணிக்கின்றனர். விளையாடுபவர்களால் யாருக்கும் இம்சையில்லை. பேசிக் கொண்டே செல்பவர்களில் பாதிப்பேர், கிசு கிசு குரலில் ரகசியம் பேசுவர். அவர்களையும் விட்டு விடலாம்.
மற்றவர்கள் தான், பிரச்னைக்குரிய வகையினர். தண்டோரா போடாத குறையாக பேசுவது இவர்கள் வழக்கம்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்காமல் பேசிக்கொள்ளும் கலையை இந்தியர்களில் பல பேர் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், கற்றுக் கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது.
‛கேட்பவர்களுக்கு காது கிழிந்தாலும் பரவாயில்லை’ என்று, தொண்டை கிழியப் பேசும் இக்கூட்டம், படுத்தும்பாடு பெரும்பாடு! இவர்களைக் கூட சகித்துக் கொண்டு விடலாம். போன் ஸ்பீக்கரில் பாட்டு போட்டு உயிரை எடுக்கும் கூட்டம் செய்யும் கொடுமை இருக்கிறதே! இவர்களையெல்லாம், குண்டர் சட்டத்தில் போட்டாலும் தகும்.
முன் சீட்டில் இருப்பவர் அஜீத் பாட்டு போட்டால், பின் சீட்டில் இருப்பவர் விஜய் பாட்டு போட்டு விடுவார். இப்படி பஸ்சுக்குள் ஐந்தாறு பேர், ஸ்பீக்கரில் பாட்டு ஒலிபரப்பியபடியே உற்சாகப் பொங்கல் பொங்கியபடி பயணிப்பர். இந்த அழகில், எங்கேயிருக்கிறது தனிமை?

……………..

முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் பற்றிய நகைச்சுவை ஒன்றுண்டு. எதிர்க்கட்சி எம்.பி., ஒருவர், உரத்த குரலில் போன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு எரிச்சலுற்ற சர்ச்சில், ‛அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று கேட்டாராம். அருகில் இருந்தவர், ‛அவர் ஸ்காட்லாந்தில் இருப்பவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்றாராம். ‛சரி பேசட்டும், போனை பயன்படுத்த வேண்டியது தானே’ என்றாராம், சர்ச்சில். நம்மாட்கள் பலர், இத்தகைய நக்கலுக்கு பாத்திரமானவர்களே.

மேற்குலகின் படைக்கலன்கள், நேட்டோ நாடுகளின் தளங்களில் மட்டுமில்லை; அவை அந்தந்த நாடுகளின் பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. தத்தம் நாட்டுப்படை செல்லும் இடங்களுக்கும், செல்ல முடியாத இடங்களுக்கும், இப்படைக்கலன்கள் ஊடுருவி சென்று விடுகின்றன. தம் நாட்டரசு எடுக்கும் முடிவை எதிர்த்து நிற்பவை, புல் பூண்டாக இருந்தாலும், ஈவு இரக்கமற்று சுட்டுத்தள்ளுகின்றன. 

அந்த ‛புண்ணியவான்’களுக்கு, நீதி, நியாயம், தர்மம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஆனாலும், உலகெங்கும் பத்திரிகை தர்மம் பற்றி வகுப்பெடுப்பது அவர்கள் தான். ‛மாறி வரும் உலகை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கு எத்தகையதாக இருக்க வேண்டும்’ என்று, நாடு நாடாகச்சென்று பேருரை நிகழ்த்துவதும் இந்தக்கூட்டமே.
தங்கள் நாட்டு நலன் என்று வரும்போது, தர்மம், நியாயம் எல்லாம் குப்பைக்குப் போய்விடும்.
இந்தப் பேருண்மை உலகுக்கு தெரியவந்து ஆண்டுகள் பலவாகினும், பட்டவர்த்தனமாக அம்பலமானது, வளைகுடாப் போர்களின்போது தான்.
‛எம்பெடட் ஜர்னலிசம்’ என்ற புதிய உத்தியின் மூலம், சதாம் உசேனை எதிர்த்துப் போர் புரிந்த அமெரிக்க பிரிட்டீஷ் படையினருடன், தோளோடு தோள் நின்று, போரிடாமல் போரிட்டனர், மேற்கத்திய செய்தியாளர்கள். இந்த கேடு கெட்ட வேலையின் நோக்கம் பற்றி செல்சியா மேனிங் என்கிற பிராட்லி மேனிங் எழுதியிருக்கும் கட்டுரை, அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்காவின் போர் ஆவணங்களை விக்கி லீக்சுக்கு கொடுத்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மேனிங், எம்பெடட் ஜர்னலிசத்தால் மக்களுக்கு கிடைத்த தகவல்கள் எவ்வளவு பொய்யானவை என்று உடைத்துச்சொல்கிறார். படைகளுடன் செல்லும் செய்தியாளர், ஒரு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அவரது முந்தைய செயல்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
‛போர்க்களத்தில் இருந்து அனுப்பும் செய்திகள், படையினர் நலன் கருதியதாக இருத்தல் அவசியம். மீறினால், செய்தியாளர் வெளியேற்றப்படுவார். மீண்டும் போர்க்களம் செல்ல முடியாது’ என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. ஆகவே, உண்மை நிலைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத தகவல்களே பல நேரங்களில் செய்தியாக வெளியாகின என்று கூறியுள்ளார், மேனிங். உண்மையில் அவர் பாராட்டப்பட வேண்டியவர் தான்.
…..
சதாம் ஆட்சியின் கடைசி நாட்களில் நடந்த சம்பவம் இது. தலைநகர் பாக்தாதை அமெரிக்கப்படைகள் நெருங்கி விட்டனர். அமெரிக்க குண்டு வீச்சில் சதாம் உசேன் படுகாயமுற்றதாகவும், வெளிநாட்டுக்கு ரகசியமாக குடும்பத்துடன் தப்பியோடி விட்டதாகவும், மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அதுவும் பாக்தாத் நகர ஓட்டலில், அந்நாட்டு அரசின் பாதுகாப்பில் இருந்து கொண்டே.
இப்படிப்பட்ட நிலையில், திடீரென ஒரு நாள், ஈராக் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. ‛அமெரிக்க குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிபர் சதாம் உசேன் பார்வையிட்டார்’ என படக்காட்சியுடன் வெளியானது அந்த செய்தி.
மேற்குலக ஊடகங்களால் அதை தாங்கிக்கொள்ள முடியுமா? செய்தியை ஒளிபரப்பாமல் இருக்கவும் முடியாது. ஈராக் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், சதாம் குடியிருப்புகளை பார்வையிடுகிறார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார். மக்களில் சிலர் ஓடோடி வந்து அவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். சிலர் அவர் கைகளைப் பற்றி முத்தமிடுகிறார்கள். அவர்களுடன் சிரித்துக் கொண்டே பேசும் சதாம் உசேனை கண்ட மேற்குலகம் அதிர்ச்சியில் உறைகிறது.
‛தப்பி ஓடி விட்டார்’ என்று நாம் கூறும் நபர், ஊருக்குள் மக்களுடன் கலந்துரையாடும் காட்சி வெளியானால் எப்படி இருக்கும்? இந்தக்காட்சியை பிபிசி செய்தியாளர் வர்ணித்த விதம் இருக்கிறதே! அது இன்னும் கொடுமையானது. ‛ஏ மேன் அப்பியர்ஸ் டூ பீ சதாம் ஹூசேன், இஸ் வாக்கிங் இன் த ஸ்ட்ரீட்’ என்றார் ராகே ஓமர் என்ற அந்த செய்தியாளர்.
‛சதாம் உசேன் போன்று தோற்றமளிக்கும் ஒருவர் வீதியில் நடந்து செல்கிறார்’ என்று ஆரம்பித்து ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு முறை, ‛த மேன் அப்பியர்ஸ் டு பீ சதாம் உசேன்’ என்றார்.
பாவம், கடைசியில் அந்தக்காட்சிகளகள் உண்மையானவை, அந்த மனிதரும் சதாம் உசேன் தான், அந்தக்காட்சி ஒளிபரப்பாவதற்கு சற்றுமுன்னர் எடுக்கப்பட்ட காட்சிதான் என்பதெல்லாம் பின்னர் நிரூபணம் ஆனது. ஆக உண்மைச்செய்தியை தரவேண்டும் என்ற நோக்கம் எதுவும் மேற்கத்திய ஊடகங்களுக்கு இல்லை என்பதே உண்மை.
இதற்கு சமீபத்திய உதாரணம், உக்ரைனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரைன் அரசுக்கு எதிராக, ஒரு கும்பல் தலைநகரில் போராட்டம் நடத்தியதை, மக்கள் புரட்சி செய்வதாக, மேற்கத்திய ஊடகங்கள், நாளும், பொழுதும் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் ரஷ்யாவுடன் இணைய கருத்து வாக்கெடுப்பு நடத்தியதை, மண் வாரித் தூற்றாத குறையாக, குற்றம் கூறிக் கொண்டிருக்கின்றன.
இப்படியெல்லாம் அக்கிரமம் செய்யும் மேற்கத்திய ஊடகங்கள்தான், பிற நாட்டு அரசுகளுக்கும், ஊடகங்களுக்கும் வண்டி வண்டியாய் அறிவுரைகளை வாரி வழங்குகின்றன. கொடுமை!
……
ஈராக்கில் இப்போது நடந்து வரும் உள்நாட்டுப் போரில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பதென தெரியாமல், ஒபாமா அரசு திணறி வருகிறது. இதை நேர்மையான முறையில் விமர்சனம் செய்வதற்கு, எந்த மேற்கத்திய ஊடகமும் தயாரில்லை.
அரசுக்கு வலித்து விடாதபடி, ஆலோசனைகளை மட்டும் அள்ளி அள்ளி வீசுகின்றனர். பாவம், ஒபாமா. ஆலோசனைக் குப்பைகளில், எந்தக்குப்பை நல்ல குப்பை எனத் தெரியாமல், பரிதவித்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் காது கேட்காதது போலவும், கண்கள் தெரியாதது போலவும் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவரது நிலை, உண்மையிலேயே பரிதாபத்துக்குரியதுதான்.

……

செய்தியாளர் சந்திப்புகளில் டுபாக்கூர் செய்தியாளர்கள் செய்யும் அட்டகாசங்கள் எழுதி மாளாது. அவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம், ‛குண்டக்க மண்டக்க’ ரேஞ்சில் தான் இருக்கும். தம் இருப்பை காட்டிக் கொள்வதற்காக நிறைய கேள்விகள் கேட்பது சில டுபாக்கூர்களின் வழக்கம். ‛முதல் கேள்வி, தங்களுடையதாக இருக்க வேண்டும்’ என்றே பெரும்பாலான டுபாக்கூர்கள் விரும்புவர். 

தமிழக முதல்வரின் செய்தியாளர் சந்திப்புகளில், ‛அம்மா’, ‛அம்மா’ என்று கூவும் கூட்டத்தில் பெரும்பகுதியினர், இத்தகைய செய்தியாளர்களே. எப்படியாவது ஜெயலலிதாவின் கவனத்தை கவர வேண்டும் என்பதே, அந்த கூவுதலின் நோக்கமாக இருக்கும். அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம், ஜால்ரா ஒலி எழுப்புவதாகவே இருக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, செய்தியாளர்களின் கேள்விகளும், அதன் நோக்கங்களும் அத்துபடி. எளிதில் சமாளித்து விடுவார். கோபம் உச்சத்துக்கு சென்றால் மட்டுமே, ‛நீ எந்த பத்திரிகை’ என்று எதிர் கேள்வி கேட்பார்.
எப்போதும், செய்தியாளர்கள் திரிந்து கொண்டிருக்கும் இடம், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் தான். காரணம், காங்கிரஸ் தலைவர்களில் பலர், ஓட்டைவாயர்கள். செய்தி அல்லது வேறு ஏதாவது தேறும் என்ற எண்ணத்தில் அங்கு டுபாக்கூர் செய்தியாளர்கள் முகாமிட்டிருப்பது வழக்கம்.
….
தமிழக காங்கிரஸ் தலைவராக வாசன், மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்தபோது நடந்த சம்பவம், மறக்க முடியாதது. அன்று செய்தியாளர் சந்திப்பு ஆரம்பித்தவுடன் ஒரு டுபாக்கூர் எழுந்தார். ‘சார், காங்கிரஸ்- பாஜ கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி அமையுமா’ என்று கேட்டு விட்டு அமர்ந்து கொண்டார்.
வாசனுக்கு கடும் அதிர்ச்சி. மேசை மீதிருந்த தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு, ‘எந்தெந்த கட்சி’ என்று மீண்டும் கேட்டார். டுபாக்கூர் மீண்டும் அதே கேள்வியை கேட்டார். அங்கிருந்த கட்சிக்காரர்கள் சிலர், ‘என்ன இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி கேட்கிறார்’ என்று மற்ற செய்தியாளர்களிடம் பாய்ந்தனர்.
டுபாக்கூரின் கிறுக்குத்தனங்களை முன்னமே அறிந்திருந்த மற்ற செய்தியாளர்கள், வாசனையும், அங்கிருந்த கட்சி நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தி, செய்தியாளர் சந்திப்பை தொடர வைத்தனர்.
……

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இம்மலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும், ‛நாடு’ எனப்படும் 14 கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும், கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் முதல் ஆயிரத்து 300 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்திருக்கின்றன.

குளிர்ச்சியான தட்பவெப்பமும், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களும், மனதுக்கும், கண்களுக்கும், விருந்து படைப்பவை. இம்மலைக்கு செல்லும் பாதை, 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அவற்றில் சில அபாயகரமானவை. 

இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், சோழர் காலத்தை சேர்ந்தது. புலவர்களால் பாடப்பெற்றது. கொல்லிமலையும் சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மலையே. இதை ஆண்ட வல் வில் ஓரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது வீரமும், கொல்லிமலையின் இயற்கை வளமும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத கோவில்களும், ஆசிரமங்களும், மூலிகை சிகிச்சை மையங்களும் நிறைய இருக்கின்றன.
கொல்லி மலையின் ரகசியங்களில் முக்கியமானது, கொல்லிப்பாவை. சித்தர்கள் தவம் செய்யும்போது இடையூறு செய்த அரக்கர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கை இப்பகுதி மலை மக்களிடம் இருக்கிறது.
இங்குள்ள வனம், அடர்த்தி குறைந்தது. காட்டுப் பன்றியும் குரங்குகளும் மட்டுமே பிரதான விலங்குகள். கரடி இருந்ததாக ஓரிருவர் கூறியதுண்டு. ‛கொல்லிமலை சிங்கம்’ என்றொரு சினிமா கூட சமீபத்தில் வந்தது. அதைப்பார்க்கும் யாராவது கொல்லிமலையில் நிறைய சிங்கங்கள் திரிவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்
கொல்லிமலையின் முக்கிய கிராமமான செம்மேட்டில், வல் வில் ஓரியின் சிலை இருக்கிறது. ‛இந்த சிலைக்கு மாலை போட்டால் பதவி பறிபோய்விடும்’ என்றொரு மூட நம்பிக்கை எப்படியோ பரவி விட்டது. அதனால், கொல்லிமலையில் வல் வில் ஓரி விழாவுக்கு சென்றாலும், சிலைக்கு மாலை போடாமல் பயந்தடித்து ஓடுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஒரு சில கலெக்டர்களும், அவ்வாறே ஓடியதை கண்டிருக்கின்றேன். இத்தனைக்கும், அது ஒன்றும் பழங்கால சிலை கூட அல்ல, சில தலைமுறைகளுக்கு முன் நிறுவப்பட்டதே..
கொல்லிமலையின் மிகப்பெரும் ரகசியம், சித்தர்கள் வாழ்ந்ததாக கூறுவது. ‘இப்போதும் வாழ்கிறார்கள், சாதாரண மனிதர்கள் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைய உலவுகின்றன. அதை அங்கு வசிக்கும் மலை மக்கள் பலர் நம்புகின்றனர்.
இங்குள்ள சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றால், நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். முன்பெல்லாம் சரியான படி வசதியின்றி மக்கள் சிரமப்பட்டனர் இப்போது பிரமாதமான படிகள் அமைக்கப்பட்டு விட்டன.
கலெக்டராக சுந்தரமூர்த்தியும் அவரை தொடர்ந்து சகாயமும் இருந்தபோது கொல்லிமலை மேம்பாட்டுக்காக பெருமுயற்சி எடுத்தனர். ஏரி கூட அமைக்கப் பட்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் அல்லாமல், நெரிசலற்ற, அமைதியான மலை வாழிடம் இது. தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. சேலம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கொல்லிமலையில் பாக்சைட் மணல் எடுக்க அனுமதி வழங்கியதுதான் அதன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமைந்து விட்டது. அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு பல இடங்களில் மலை முகடுகளை மொட்டையாக்கி விட்டார்கள். சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக நிலைமை மோசமாகாமல் தவிர்க்கப் பட்டிருக்கிறது.
கொல்லிமலையில் இருந்த வன அதிகாரி ஒருவர், ஒரு நாள் போனில் அழைத்தார். ‘சார், மலைக்கு போட்டோகிராபரோட வரமுடியுமா’ என்றார். சென்றோம். அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அடர்ந்த காப்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
‘பாருங்க சார்’ என்று அவர் காட்டிய இடத்தில், ஆழமான குழி இருந்தது. மூன்றடி விட்டம் கொண்ட அந்த குழியின் ஆழம் 20 அடி இருக்கும். அதேபோன்ற குழிகள் வனத்துக்குள் இன்னும் பல இடங்களிலும் இருந்தன. எல்லாம், மலையில் இருக்கும் கனிம வளத்தை கண்டறிவதற்கான சட்ட விரோத முயற்சியின் அடையாளங்கள்.
‘எனக்கு முன்னாடி அதிகாரிங்க சப்போர்ட்ல இப்படி செஞ்சிட்டாங்க சார். இதை கண்டுபிடிச்சு ரிப்போர்ட் செஞ்ச சில வாரத்துல என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார்.
கொல்லிமலையில் ரகசியங்கள் ஏராளம். கொல்லிப்பாவையும், சித்தர்களும் தவிர்த்த ரகசியங்களில், பாக்சைட் மணல் எடுப்பவர்களின் மாயமந்திர அதிகாரம் முக்கியமானது.

 

அன்று காலை 6 மணிக்கெல்லாம் காவல் நிலையம் பரபரப்பாகி விட்டது. போலீசார் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் கைவிரல் ரேகை எடுக்கும் தடய அறிவியல் நிபுணரை போனில் பிடித்து உடனடியாக வருமாறு வேண்டிக்கொண்டிருந்தார். இன்னொருவர், மோப்பநாய் பிரிவினரை கையோடு அழைத்து வர ஜீப் டிரைவரை விரட்டிக் கொண்டிருந்தார்.
விசாரணைக்காக விரைந்து வரும் மைக் 10, மைக் 11 ஆகியோருக்கு காபி, டிபன் ஏற்பாடு செய்யும்படி எஸ்ஐக்கு உத்தரவுகள் ஏற்கனவே வந்து விட்டன. நகரின் பிரபல ஓட்டலுக்கு ஆள் அனுப்பியாகி விட்டது. குற்றப்பிரிவு போலீசார் பாவம், குற்றவாளிகளைப் போல் பம்மிப் பதுங்கியபடி இருந்தனர். எல்லாவற்றுக்கும் காரணம், முதல் நாள் இரவில் நடந்த திருட்டு சம்பவங்கள் தான். திருட்டென்றால் சாதா திருட்டல்ல; இது ஸ்பெஷல் திருட்டு.
‘நகரில் நான்கு வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் வக்கீல் அலுவலகங்களில் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. பீரோவும் உடைக்கப்பட்டிருக்கிறது. என்னவெல்லாம் திருட்டு போயிருக்கின்றன என்று சம்மந்தப்பட்ட வக்கீல்கள் வந்தால்தான் தெரியும்’ என்றார், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர். குற்றப்பிரிவு போலீஸார் வசமாக சிக்கியிருப்பதை எண்ணியெண்ணி பூரித்துக்கொண்டிருந்தார் அவர்.
எனக்கு பெருத்த சந்தேகம். ”சார்! வக்கீலுங்க ஆபீசுல என்ன பணம், நகையா வெச்சுருக்கப் போறாங்க? இதுக்கு ஏன் சார் இவ்வளவு பரபரப்பு?” என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.
அவர் வக்கீல்களுடன் அதிக சகவாசம் வைத்திருப்பவர். ”சார்! வக்கீல் ஆபீஸ்ல விலை மதிப்புள்ள பொருள் இருக்காதா? என்ன நடக்கப் போகுதுன்னு வேடிக்கையப் பாருங்க சார் நீங்க”
எனக்கும் அவர் சொல்வதில் விஷயம் இருப்பதுபோல் தோன்றியது. காத்திருந்தேன். சிறிது நேரத்திலேயே நான்கைந்து வக்கீல்கள் பதட்டத்துடன் ஓடி வந்தனர். பார்த்தால் பேயறைந்தவர்கள் போல் இருந்தனர். கடைசியாக வந்த ஒருவரை நிறுத்தி, ‘என்ன சார், என்ன திருட்டு போச்சு’ என்றேன். அவரோ, ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!’ என்று கூவியபடியே இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஓடினார்.
சில வினாடிகளிலேயே அவர்கள் சங்க தலைவரும் வந்து விட்டார். அவரிடமும் கேட்டேன். ”நெறய வேல்யபிள் ஐட்டம்ஸ் போயிட்டதா அட்வகேட்ஸ் போன் பண்ணாங்க, இருங்க இன்ஸ்பெக்டர பாத்துட்டு வரேன்,” என்று சொல்லி விட்டுப் போனார். எனக்கு மண்டை காய்ந்தது. வக்கீல் அலுவலகங்களில் அப்படியென்ன விலை மதிப்புள்ள பொருள் இருக்கப் போகிறது?
அதற்குள் எஸ்பி, கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் வந்து விட்டனர். கை ரேகை நிபுணரும், மோப்ப நாய்ப்படையினரும் வந்து விட்டனர். ‘திருடர்களை உடனடியாக பிடித்தாக வேண்டும்’ என்று எஸ்பி உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். வேதனை தோய்ந்த முகத்துடன் இருந்த வக்கீல்கள், அவரை சுற்றிக்கொண்டு முறையிட்டனர்.
அப்போதும், ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்’ என்று அந்த வக்கீல் புலம்புவது காதில் விழுந்தது. ”எங்க இத்தனை வருஷ உழைப்பெல்லாம் வீணாப்போச்சுங்க சார்! எப்புடியாச்சும் கண்டுபுடிங்க சார்!” என்றொரு வக்கீல் நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தார். ”புடிச்சுர்லாம் விடுங்க,” என்று அவரை சமாதானப்படுத்த முயன்றார் எஸ்பி. போகவே மனம் இல்லாமல் புறப்பட்டனர்.
போகும்போதும் கூட அந்த வக்கீல் என்னைப் பார்த்து, ‘ஹெவி லாஸ், ஹெவி லாஸ்’ என்று கூவிக்கொண்டே போனார். என்னால் அந்த சஸ்பென்ஸை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நேராக எஸ்பியிடம் போனேன்.
”சார்! என்ன ஹெவி லாஸ், ஹெவி லாஸ்னு சொல்லிட்டுப் போறாங்க?” ”அதுவா? ஆமாமா, அது உண்மையாவே ஹெவி லாஸ் தானே!”
”சார், காத்தால இருந்து ஹெவி லாஸ் புராணம் கேட்டாச்சு, விஷயத்தச் சொல்லுங்க சார்”
”சார் கிரிமினல் கேஸ் நடத்துற வக்கீலுங்க சிலர் ஜாமீன் எடுக்குறதுக்காக பர்மனன்ட்டா பத்து பதினைஞ்சு ரேஷன் கார்டு வெச்சுருப்பாங்க. தேவைக்குத் தகுந்த மாரி ரேஷன் கார்ட யூஸ் பண்ணுவாங்க. இந்த நாலு வக்கீலு ஆபீஸ்லயும் சேந்து மொத்தமா 27 ரேஷன் கார்ட எவனே திருடீட்டுப் போயிட்டான். இப்ப கார்டு இல்லீனா, ஜாமீன் எடுக்க முடியாது. பொழப்பு சுத்தமா ஓடாது. கார்டுக்காரனுக்கு மாசமாசம் பணம் தரணும். திருட்டு போயிடுச்சுன்னு சொல்லவும் முடியாது. இவ்வளவு பிரச்னை வரும்னா அப்றம் அது ஹெவி லாஸ் தானே,” என்றார் எஸ்பி.
எனக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. ஸ்டேஷனை விட்டு புறப்பட்டேன். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து சிரித்தார்.
”வக்கீல் ஆபீஸ்ல என்ன இருக்கப் போகுதுன்னு கேட்டீங்ளே சார்! இப்ப புரிஞ்சுதா என்ன மேட்டர்னு”
”ஆமாமா சார்! ஹெவி லாஸ் தான்,” என்றேன் நானும்.
காவல் நிலையத்தை கடந்து வந்தபோது பாதிக்கப்பட்ட வக்கீல்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். ”எவனோ விஷயம் தெரிஞ்ச ஒர்த்தன் தான் இத செஞ்சிருக்கனும்,” என்றார் ஒருவர். ”ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!” என மீண்டும் அதே குரலில், அதே புலம்பல்! ‘ஐயோ பாவம்’ என நினைத்துக்கொண்டேன்.

இனிய காலைப்பொழுது. அலுவலகத்தில் பத்திரிகை படித்தபடி நாட்டு நடப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
விளம்பரம் வாங்கும் பிரதிநிதி ஒருவர், வேகவேகமாக வந்தார். ”ஏங்க நம்மகிட்ட ஒர்த்தன் மாட்டிருக்காய்ங்க. ஆளு, கொஞ்சம் அரை மண்டைங்க. அவன் ஏதோ ஒரு பூஜை பண்றானாம். வெளம்பரம் நெறய தாரன்னு சொல்றாங்க. அவனுக்கு கொஞ்சம் பப்ளிசிட்டி ஆகுற மாரி நியூஸ் போடணுமாம்,” என்றார்.
”சரி, போட்டு விடுவோம்,” என்று கூறி விட்டேன்.
”என்ன பூஜ பண்றானாம்,” என்றார், போட்டோக்காரர்.
”ஏதோ கோமாதா பூஜையாம், 108 மாடு வெச்சு பண்ணப்போறானாம். அதுல கலந்துகிட்டு பூஜை பண்ணா தொழில் டெவலப் ஆகும், குடும்பம் டெவலப் ஆகும். நெனச்ச காரியம் நடக்கும்னு ஏகப்பட்டது சொல்ராங்க,” என்றார், விளம்பரம்.
எனக்கு சிரிப்பு. போட்டோக்காரருக்கு கடுப்பும் சேர்ந்து வந்தது.
”யோவ், யாருய்யா அவன்! ஜோசியம் பாக்குறவனா”
”இல்லீங்க, அவன் ஏதோ மளிகைக்கடை வெச்சுருக்கானாம்”
”பொட்டலம் மடிக்குறத உட்டுட்டு ஏய்யா கோமாதா போமாதான்னுட்டு உயிர எடுக்குறானுக”
”எப்புடியோ போகட்டுங்க, நமக்கு வெளம்பரம் தாரங்குறான்”
”சரி விடுங்க, செய்தி போட்டுறலாம்,” என்று கூறி விட்டேன்.
நாட்கள் கடந்தன. மளிகை கடைக்காரனை தொடர்ந்து சில முறை சந்தித்து வந்தார் விளம்பரம்.
”ஏங்க, அவன் செய்தி போட்டீங்கன்னாத்தான் வெளம்பரம் தருவேன்னு சொல்றாங்க”
”அவனய எழுதித்தரச் சொல்லி வாங்கீட்டு வாய்யா, போட்டுறலாம்,” என்றார், போட்டோக்காரர்.
”இல்லிங்க, அவன் நம்மளவே நேர்ல போய் பாத்து போட்டோ எல்லாம் எடுத்து நியூஸ் போடணுங்கிறாங்க”
அதோடு விட்டாரா, விளம்பர பிரிவில் வேறு சொல்லி விட்டார். அங்கிருந்தும் ஃபோனுக்கு மேல் ஃபோன் வர ஆரம்பித்தது.
‘சரி, போய்த்தான் வருவோமே’ என்று ஒரு சுபயோக சுபதினத்தில் புறப்பட்டோம்.
அது ஒரு குக்கிராமம். நூற்றுக்கும் குறைவான வீடுகளே இருந்தன. கோவிலும் அவ்வளவு பிரமாதமில்லை. ஒரு இருபது சென்ட் ஏரியாவுக்குள் இருக்கும்.
மளிகைக்கடை பார்ட்டி, வெள்ளை உடையில் தங்கப்பல் தெரிய கும்பிடு போட்டார்.
‘ஊர் மக்கள் எல்லோரும் தோஷம் பிடித்து, ராகு தலம், கேது தலம், சுக்கிர தலம், காளஹஸ்தி, திருநள்ளார் என ஊர் ஊராக அலைகின்றனரே’ என்று அவருக்கு அவ்வளவு வேதனை. இத்தனை தோஷத்தையும் ஒரே இடத்தில் கழித்து புதைத்து விட்டால் என்னவென்று ஒரு யோசனை. இந்தக்காரியத்தை செய்து, ஊருலகத்தை உய்விக்க, உன்னை விட்டால் ஆளில்லையென அதிகாலை கனவில் வந்து அப்பன் முருகன் வேறு சொல்லி விட்டார். அப்புறமென்ன ஒரு நல்ல நாளில் வேலையை தொடங்கி விட்டார் எங்கள் அண்ணன்’ என்று திருவாய் மலர்ந்தார், ஒரு எடுபிடி.
கோவிலுக்குள் மராமத்து வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. போட்டோக்காரர் வேலையை தொடங்கினார்.
”கோவில் பற்றி எழுத ஏதாவது தல வரலாறு புக் இருக்குதா,” என்று கேட்டதற்கு, ”இனிமே தான் ரெடி பண்றதா அண்ணன் சொன்னாருங்க,” என்றார், எடுபிடி.
விளம்பரக்காரர் வற்புறுத்தவே, மீண்டும் மளிகைக்கடை ஆசாமியிடம் போனோம்.
”அண்ணா, செய்தி போடுறதுக்கு நம்ம கோவில் தல வரலாறு டீட்டெய்ல் வேணும்னு ரிப்போர்ட்டர் கேட்குறார்னா” என்றதும், அவர் அசராமல் சொன்னார்.
”தல வரலாறு புக்கு அல்லாரும் கேக்குறாங் கண்ணு. நம்முளுக்கு தான் நேரமில்ல. பேப்பர்ல போடத்தான கேக்குற. பகல்பூரா மேஞ்ச மாடு பொழுதான ஊட்டுல பால் கறக்குல. என்னானு போய் பாத்தா, அது, தானே ஒரு எடத்துல பால் கறக்குது. அந்தெடத்துல தோண்டிப்பாத்தா ஒரு சிவலிங்கம் இக்குது. அந்த லிங்கம்தே நம்மு கோவில் சாமி,” என்றார், தங்கப்பல்.
”அந்தமாரி நல்ல நல்ல கதையெல்லாம் தெரிஞ்சுதுன்னா நீயே எழுதிக்க கண்ணு”
ஆத்திரமாக இருந்தது; சிரிப்பும் வந்தது.
”யோவ், என்னய்யா? உட்டா நம்மளவ தல வரலாறு எழுத வெச்சுருவாம்போல,” என்று, விளம்பரக்காரரை கலாய்த்தார் போட்டோக்காரர்.
ஒரு வழியாய் கோமாதா பூஜை நடந்தேறியது. வசூல் நல்லபடியாக இருந்தது. ருசி கண்ட மளிகைக்கடை ஆசாமி, அடுத்த புராஜக்டை ஆரம்பித்தார். நாக சர்ப்ப தோஷத்தால் அவதிப்படும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் தேடித்தருவது அவரது திட்டம்.
‘108 மாடுகள வெச்சு கோமாதா பூஜ பண்ணமாரி, 108 நாகப்பாம்புகள வெச்சு நாக சர்ப்ப தோஷம் நீக்க யாகம் நடத்துறம். கல்யாணம் ஆகாதவுங்க, கொழந்த இல்லாதவுங்க, தொழில் பாதிச்சவுங்க, குடும்பத்துல கொழப்பங்குறவுங்க, எல்லொரும் இதுல கலந்துக்கலாம். தனியா வந்த ஒரு கட்டணம். குடும்பத்துடன் வந்தால் தனி கட்டணம். சிறுவர்களுக்கு இலவசம்’ என்பது மளிகைக்கடை ஆசாமியின் திட்டம்.
தலைக்கு 500 என்றும், குடும்பத்துக்கு ஆயிரம் என்றும் தோஷ நிவர்த்தி யாக டிக்கெட் விற்பனை தூள் கிளப்பியது. முந்தைய திட்டத்தை காட்டிலும் அதிகப்படியான முனைப்புடனும், எடுபிடிகளுடனும் களம் இறங்கினார். வேலூரோ, கடலூரோ நேரில் சென்று, நாகப்பாம்புகளுக்கும் ஏற்பாடு செய்து விட்டார்.
இரு நாட்களுக்கு முன்பே பாம்புகள் கொண்டு வரப்பட்ட தகவல் பரவியதும், போலீஸ் போட்டு கட்டுப்படுத்தும் அளவுக்கு கூட்டம் திரண்டு விட்டது. பூஜை நாளன்று அக்கம் பக்க கிராமங்கள், நகரங்கள் மட்டுமல்ல, ஐந்தாறு மாவட்டங்களில் இதே பேச்சுத்தான்.
அந்தளவுக்கு, பத்திரிகை, உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தியும், விளம்பரமுமாய் ஆக்கிரமித்திருந்தார் மளிகைக்கடை. இது தவிர பல மாவட்டங்களில் பிளக்ஸ் போர்டுகள் மூலைக்கு மூலை முளைத்திருந்தன. அரசு பஸ், தனியார் பஸ் பேதமின்றி எல்லாவற்றிலும் நாக சர்ப்ப தோஷ புராண போர்டுகள் இருந்தன.
இப்படி ஒரு வழியாக நாக சர்ப்ப தோஷ யாகம் வெற்றிகரமாக நடந்தேறியது. ஊரில் இருக்கும் அத்தனை பேரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு, மளிகைக்கடை பார்ட்டி வசூலை வாரிக்குவித்து விட்டார்.
ஊருக்குள் மட்டுமல்ல, மாவட்டத்திலேயே ஒரு விஐபி அந்தஸ்து வந்து விட்டது அவருக்கு. பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பது, பில் பணம் வாங்க வரும்போது, ‘செய்தி செரியா வருலியே’ என்று டபாய்ப்பது எல்லாம் அவருக்கு அத்துபடி ஆகிவிட்டது.
இருக்குமிடம் தெரியாமல் இருந்த ஆளும் கோவிலும், இப்படி மாய மந்திரம் செய்ததுபோல் விஐபி அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டால் என்ன நடக்கும்? திடீர் திடீரென கலெக்டரும், எஸ்.பி.,யும், டி.ஐ.ஜி.,யும் இன்னும் பிற அதிகாரிகளும், அவர்களது மனைவிமாரும் வந்து போனால் எப்படியிருக்கும்? உள்ளூர் போலீசாருக்கும், மணியகாரருக்கும் தாவு தீர்ந்து விட்டது. எல்லோரும் காத்திருந்தனர். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சந்தர்ப்பமும் விரைவிலேயே வந்தது.
முந்தைய இரு யாகங்களில் கிடைத்த லாபத்தைக் காட்டிலும், பல மடங்கு சம்பாதிப்பதே இம்முறை மளிகைக்கடை பார்ட்டியின் லட்சியமாக இருந்தது. ‘நல்ல யோசனை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள்’ என்று அறிவிக்காத குறையாக, அடிப்பொடிகளை ஊருக்குள் ஏவிவிட்டார்.
அவருக்கு நல்ல யோசனை சொல்லிவிட்டால், ஆயிரம் பொற்காசுகள் தனக்கே கிடைக்கும் என்றெண்ணிய எங்கள் விளம்பரம் என்னிடம் ஓடோடி வந்தார். ‛‛ஏங்க, ஏதாச்சும் ஐடியா குடுங்க,’’ என்றார்.
நானும் மூளையை கசக்கி, சாறுபிழிந்து வடிகட்டி, அவருக்கு யோசனை கூறினேன்.
‛‛இப்ப மனுஷன் பயப்படுறதே சாவு வந்துடும்னு நெனச்சுத்தான். அதுனால சாவு வராம தடுக்கனும்னா, ஒரு யாகம் செஞ்சு எமதர்மராஜனை கூல் பண்ணனும். எமனோட வாகனம் எருமை. ஒரு 108 எருமை மாட்ட வச்சு பிரம்மாண்டமா எமதர்ம ராஜ ஹோமம் நடத்தச்சொல்லுங்க. இந்த யாகத்துல கலந்துட்டா எமனோட கருணைப்பார்வை வந்துடும். ஆயுசு கெட்டியாகும்னு அடிச்சு விடச்சொல்லுங்க,’’ என்று நானும் சிரிக்காமல் அள்ளி விட்டேன்.
அலுவலகத்தில் இருந்த ஐந்தாறு பேரும், ‛சூப்பர் ஐடியாங்க’ என்று, கரகோஷம் எழுப்பாத குறையாக, விளம்பரத்தை உசுப்ப ஆரம்பித்தனர்.
நான் சொன்னதை மீண்டும் ஒருமுறை கவனமாக கேட்ட விளம்பரம், ‛‛ஐடியா நல்லாத்தாங்க இருக்கு. ஆனா சொன்னம்னா, நக்கல் பண்றதா நெனப்பான்னு பயமாருக்குங்க,’’ என்றார்.
‛‛ஐடியா கேட்டிங்க, சொல்லிட்டன். அதுக்கப்புறம் உங்கபாடு, அவம்பாடு, எருமைங்கபாடு,’’ என்றேன், நான்.
‛‛சரிங்க, அவங்கிட்ட கொஞ்சம் பணம் வர வேண்டீருக்கு. வாங்கீட்டு, அப்றமாக ஐடியாவ சொல்லுவோம்,’’ என்றார், விளம்பரம்.
அவர், நமது யோசனையை சொன்னாரா என தெரியவில்லை. அடுத்த சில மாதங்களில், 108 யானை, 108 குதிரை, 108 மாடுகளை வைத்து மூன்று நாட்கள் மெகா யாகம் நடத்தும் திட்டத்துக்கான அறிவிப்பை, தேசிய நெடுஞ்சாலை தாபா ஓட்டலில், ‛சரக்கு’ பார்ட்டியுடன் கூடிய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் மளிகைக்கடை.
ஆர்வக்கோளாறில் ஒரு நிருபர், அசுவமேத யாகம் நடக்கப்போவதாக செய்தி போட்டு விட, அது மளிகைக்கடை பார்ட்டிக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. ‘ஆஹா, குடுக்குற காசுக்கு மேல கூவுறாங்க’ என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம். அதேபோல் இன்னொரு முறை செய்தி போட்டாக வேண்டும் என்று பயங்கர இம்சை. வேண்டா வெறுப்பாக எல்லோரும் மீண்டும் செய்தி வெளியிட்டனர். விளம்பரம் வாங்கியாக வேண்டுமே!
ஒரு நாள் அலுவலக விளம்பரம் போனில் பேசினார். ”ஏங்க, நம்ம கோவில் தலைவரு பேசனுங்றாரு, பேசுங்க” என்று கொடுத்து விட்டார். நேரடியாகவே மேட்டருக்கு வந்தார் மளிகைக்கடை.
”இந்த சன் டிவில சென்னை சில்க்ஸ் கம்பெனிக்காரங்க, நெறய விளம்பரம் தாராங்க. இப்ப நம்ம நிகழ்ச்சிக்கு அவுங்ககிட்ட ஸ்பான்சர் வாங்கனும். வேனும்னா அவன் சென்னை சில்க்ஸ் வழங்கும் கோமாதா பூஜைன்னு விளம்பரம் பண்ணிகிட்டு. நமக்குத்தேவை விளம்பரம். அதை அவன் எப்புடியோ பண்ணட்டும். கொஞ்சம் யாராச்சு தெரிஞ்ச ஆளிருந்தா ஏற்பாடு பண்ணு,” என்று கேட்டுக்கொண்டார்.
நானும், ‘சரி பார்க்கலாம்’ என்று கூறி வைத்தேன். அதன்பிறகு என்ன நடந்ததோ, அவரும் கேட்கவில்லை; நானும் பேசவில்லை.
மளிகைக்கடை ஆசாமி, யாகம் நடத்தி வசூலை அள்ளியது ஊருக்குள் பல பேருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டிருந்தது. விரோதிகள் நிறைய உருவாகி விட்டனர். அரசு ஆபீஸ்களில் மொட்டையாகவும், நெட்டையாகவும், பேருடனும் பெட்டிசன்கள் குவிந்தன. அவ்வளவுதான். ஊரில் இருக்கும் அத்தனை தோஷமும் அவருக்கு வந்து விட்டதுபோல, பிரச்னைகள் மணிக்கொன்றாகவும், திசைக்கொன்றாகவும் முளைத்தன.
அரசுத்துறைகளில் யாகம் நடத்த அனுமதி பெறுவதே குதிரைக் கொம்பாகிப் போனது. அனுமதி உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால், யாகம் நடக்குமோ, நடக்காதோ என்கிற நிலை. இதற்கே பெரும் தொகை செலவாகி விட்டது.
லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை. போட்ட காசை எடுத்தாக வேண்டுமே!
மளிகைக்கடையாரும் ஓடியாடி வேலை பார்த்தார். எதிர் பிரசாரமும் அதிகமாகி விட்டதால், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. யாகசாலைகள் வெறிச்சோடின.
யானைகள், நான்கோ, ஐந்தோ தான் கிடைத்தன; அதுவும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளோடு!
யாகம் நடத்த வந்த புரோகிதர்கள், காலை முதல் மாலை வரை காலாட்டியும் ஈயோட்டியும் காலத்தைக் கடத்தினர். அவர்கள் ஒய்யாரமாய் படுத்துறங்கும் படம் கூட பத்திரிகையில் வெளியாகி மளிகைக்கடை ஆசாமியின் வயிற்றெரிச்சலை வாரிக்கொண்டது. போட்ட பணம் வசூல் ஆகவில்லை. பல பேருக்கு பணம் பாக்கி. முந்தைய யாகங்களில் சம்பாதித்த பணமெல்லாம் போய்விட்டதாக, பாக்கி கேட்டு வருபவர்களிடம் புலம்ப ஆரம்பித்தார், மளிகைக்கடை.
‛சிவன் பேரை சொல்லி ஏமாற்றி சம்பாதித்த காசு, அப்படித்தான் போகும்’ என்று ஊருக்குள் எல்லோரும் பேச ஆரம்பித்தனர். ‛தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று, அதோடு யாகம் நடத்தும் எண்ணத்தை கைவிட்டு, பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கிறார், மளிகைக்கடை.

தீதும் நன்றும்…!

Posted: 06/06/2014 in கட்டுரை
குறிச்சொற்கள்:, , , , , ,

இன்பமும் துன்பமும் நாமாக தேடிக்கொள்பவையே என்று நான் நெடுநாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன், அந்த சம்பவம் நடக்கும் வரை. அது நடந்து விட்ட பிறகுதான், ‛நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்ப துன்பங்கள் நம்மைத்தேடி வந்தே தீரும்’ என்பது, எனக்கு தீர்மானமாகப் புலப்பட்டது.
வாழ்க்கை தத்துவத்தை, கத்தியின்றி ரத்தமின்றி எனக்கு உணர்த்திய சம்பவம் அது. ஏறக்குறைய, போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதற்கு இணையான சம்பவமாக அதைக்கூறி விடலாம். பணி நிமித்தமாக அரசு பேருந்தில் சேலம் நோக்கி பயணித்தபோது நடந்த சம்பவம் அது.
இப்படி, சம்பவம், சம்பவம் என்று வாக்கியத்துக்கு வாக்கியம் நான் வேதனையோடு குறிப்பிடுகிற அந்த சம்பவத்தின் நாயகனுக்கு ஒரு 45 வயதிருக்கும். எப்போதும் பளிச்சென உடை அணிந்து, கூடவே ரே பன் கண்ணாடியும் அணிந்திருப்பார். தலை வழுக்கையாதலால், அவரை பார்த்தாலே ஏதோ ஒரு அறிவுஜீவிக்களை இருப்பதுபோல் தோன்றும்.
சரி போகட்டும். சமூக அவலங்களுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பது அவருக்கு வழக்கம். எங்கும் எப்போதும், நீதி, நேர்மை, நியாயம், சத்தியம், தர்மம், இன்னபிறவெல்லாம் நிலைபெற வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவர். அப்பேர்ப்பட்டவர் ஒரு நாள் நான் பயணித்த அதே பேருந்தில் ஏறினார். அவரிடம் பேசியவகையில், எனக்கு முன் அனுபவம் கொஞ்சம் உண்டு. கேட்பவர் காதில் ரத்தமே வடிந்தாலும், சத்தியத்தின் தத்துவத்தை உரத்துச் சொல்லும் பண்பு நலன்களை நிறையவே கொண்டிருப்பவர் அவர்.
ஆகவே, அவர் பேருந்தில் ஏறியதுமே, எனக்குள் ஏதோ பட்சி சொல்வதைப் போல் இருந்தபடியால், இருக்கையில் கொஞ்சம் பதுங்கினாற்போல் அமர்ந்து கொண்டேன். அதிலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, போனையும் எடுத்து காதருகே வைத்துக் கொண்டேன்
ஒரு வழியாக பேருந்து புறப்பட்டது. நம்மவர் கடைசி சீட்டில் அமர்ந்தபடி பக்கத்தில் இருந்த பயணியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ‛தப்பித்து விட்டோம்’ எனத்தோன்றியது. பேருந்து புறப்பட்டதும் கொஞ்சம் நிம்மதி வந்தது. பேருந்து சிறிது தூரம் சென்றிருக்கும். பின் சீட்டில் இருப்பவர் என் முதுகில் தட்டினார்.
‛‛சார், உங்கள அவுரு கூப்புடுறாரு’’
எனக்கு பகீரென்றது. திரும்பிப் பார்த்தேன். நம்மவர் அட்டகாசமாய் சிரித்தபடி கையைக் காட்டினார்.
‛‛ரிப்போர்ட்டர் சார்! வாங்க, இங்க எடம் இருக்கு, பேசீட்டே போலாம் வாங்க’’
எனக்கு உதறலாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவரை காட்டி, ‛சார் பிரண்டு இருக்காப்ல சார்’ என்றேன்.
‛‛உங்ககிட்ட நெறய பேசணும் ஒரு நாளைக்கு உங்க ஆபீஸ் வரட்டுமா’’
‛‛தாராளமா வாங்க சார்! ஒரு போன் பண்ணீட்டு வாங்க’’
அத்துடன் உரையாடல் முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, ‛நண்பர்’ என நான் குறிப்பிட்ட பக்கத்து சீட் ஆசாமி, என்னைப் பார்த்து சிரித்தார். எனக்கு தர்மசங்கடம் தான். ஆனால் தப்பிக்க வேறு
வழியில்லையே!
பேருந்து வேகம் பிடித்துச் சென்று கொண்டிருந்தது. வீடியோவில் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கர்ணகடூரமாக இருந்த ஒலி அமைப்பு, படம் பார்க்கவும், பாடல் கேட்கவும் சகிக்க முடியாததாக இருந்தது. மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை கொண்ட எனக்கே, அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தர்மம் நியாயத்தை இரு கண்களாக பாவிக்கும் நம்மவர் சும்மா இருப்பாரா?
‛‛கண்டக்டர்! என்ன பாட்டு இது? காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்குது. நல்ல கேசட் இருந்தா போடுங்க, இல்லன்னா ஆஃப் பண்ணுங்க! சகிக்க முடியல,’’ என்றார்.
அவர் கூறியதை கண்டக்டர் கண்டுகொள்ளவே இல்லை ஒரு முறை, முறைத்து விட்டுப் போய்விட்டார். வீடியோ பிளேயர் அதே நாராச ஒளிபரப்பை தொடர்ந்து கொண்டிருந்தது. ‛தான் சொல்வதை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றபோது நம்மவருக்கு கோபம் வந்து விட்டது.
‛‛என்ன கண்டக்டர்! சொல்லீட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க, இந்த பாட்டு போடலீன்னு யார் அழுதா’’
அதைக்கேட்டதும், கண்டக்டருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‛‛யோவ் நீ என்ன பெரிய இவனா? இஷ்டம் இருந்தா வா, இல்லீனா பஸ்ச நிறுத்தறேன், எறங்கி நடையக்கட்டு, சும்ம நய் நய்னு நொட்ட சொல்லீட்டு’’
அவ்வளவுதான். பயணிகள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். நம்மவர் விடவில்லை.
‛‛சார், நான் என்ன கேட்டேன்னு இப்டி மரியாதையில்லாம பேசுறீங்க? ஆர்டிஓகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணீருவேன் தெரீமா? சவுண்ட் சிஸ்டம் சகிக்கலன்னு சொன்னா தப்பா?’’
‛‛யோவ், கெவுர்மென்ட் பஸ்சுனு தெரிஞ்சுதானே ஏர்னே? பெரீய ஆர்டிஓகிட்ட சொல்லுவன், ஆட்டுக்குட்டிகிட்ட சொல்லுவேங்கிற? சொல்லுய்யா! எவன் கேக்குறான்னு பாப்போம்’’
கண்டக்டரின் தாறுமாறான பேச்சில் பேஜாரான நம்மவர், உதவிக்கு ஆள் தேட ஆரம்பித்தார்.
‛‛ஏப்பா, இந்தாளு பண்றது சரியா, கேளுங்கப்பா,’’ என்று வேண்டுகோள் வைத்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. பக்கத்தில் இருந்த பயணிகள் கூட, அவரிடம் இருந்து தள்ளி உட்கார்ந்து கொண்டனர். அப்போதுதான் நம்மவருக்கு என் ஞாபகம் வந்து விட்டது.
‛‛சார், ரிப்போட்டர் சார்! இந்த அயோக்கியத்தனத்தப் பத்தி உங்க பத்திரிகைல எழுதுங்க சார். நீங்கதான் சார் இதெல்லா தட்டிக்கேக்கணும்’’
அவ்வளவுதான்! கண்டக்டரின் கோபப்பார்வை என் மீது திரும்பியது.
‛‛யாருய்யா அவன் தட்டிக்கேக்குறவன்,’’ என்றபடி வேகவேகமாக என் அருகில் வந்தார்.
‛‛யோவ்! நீ என்ன அந்த சொட்டையனுக்கு சப்போட்டா? நீயே ஓசி கிராக்கி! மொதல்ல நீங்கெல்லா காசு குடுத்து டிக்கெட் வாங்கி பஸ்சுல போங்க! அப்புறம் நாயதர்மம் பேசுலாம்,’’ என்று ஆரம்பித்தார்.
நம்மவரோ, ‛‛சார், நீங்க பத்திரிகைல இந்த அராஜகத்தப்பத்தி, எழுதுங்க சார், அப்பத்தான், இவனுங்களுக்கு புத்தி வரும்,’’ என்று, எடுத்துக் கொடுத்தார். ‛எங்கண்ணன வந்து அடிடா பாக்குலாம்’ என்று உசுப்பி விட்டு வடிவேலுவை ரவுடிகளிடம் உதை வாங்க வைக்கும் அள்ளக்கை அரசியல்வாதிகள்போல இருந்தது அவரது பேச்சு.
பத்திரிகை செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்க்கு, கண்டக்டர்கள் மத்தியில் இருக்கும் ‛மரியாதையை’ பற்றி எனக்கு முன்பே தெரியும்தான். ஆனால் இப்படி பலர் முன்னிலையில் மானம் கப்பலேறும் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை.
கண்டக்டரின் வசவுகள் எல்லையற்றதாக இருந்தன. எங்கள் இருவரையும் பஸ்சை விட்டு இறக்கி விடுவதே அவரது லட்சியமாக இருந்தது. விஷயம் புரியாத நம்மவரோ, ‛‛நீ முடிந்தால் இறக்கி விடு,’’ என்று சவால் வேறு விட்டார். இதற்காகவே காத்திருந்த கண்டக்டரும், விசில் அடித்து பேருந்தை நிறுத்தி விட்டார்.
அப்புறமென்ன, அவர் இறங்க, பின்தொடர்ந்து நானும் இறங்க, அடுத்த பேருந்து பிடித்து அலுவலகம் போய்ச்சேரும்போது அரை மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது.
பேருந்தில் இருந்து இறங்கி நடந்தபோது அவர் பேசினார் பாருங்கள் ஒரு வசனம், அது சினிமா காமெடி காட்சி வசனங்களுக்கு ஒப்பானது.
‛‛சார், என்னால உங்களுக்கு வீண் சிரமம். ஆனாலும் உங்கள மாதிரி ஒர்த்தரால தான், இந்த அநியாயத்த தட்டிக்கேக்க முடியும்னு உறுதியா நம்புறேன் சார். அவன் எனக்கு சவால் விட்டதா நெனக்கல சார், ஒரு நியாயத்துக்கு பாடுபடுற ரிப்போர்ட்டருக்கு சவால் விட்டதா தான் நெனைக்குறன் சார்,’’ என்றார்.
அவர் பேசப்பேச, ‛நல்ல வேளையாக உடம்பு புண்ணாகாமல் தப்பித்து விட்டோம் போலிருக்கிறதே’ என்று எனக்கு, அந்த துன்பத்துக்கு மத்தியிலும், பெருமகிழ்ச்சி வந்துவிட்டது.
அந்த சம்பவத்துக்குப் பிறகும், அவரை சில முறை வழியில் பார்க்க நேரிட்டது. மாட்டிக்கொள்வதற்கு எனக்கென்ன பைத்தியமா?