மதுவும், நானும்!

Posted: 24/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்
குறிச்சொற்கள்:, , , , , , , ,
நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி, மது குடிப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும், நம்மைப் போன்றவர்களுக்கு காதில் புகை வரச்செய்வதாகவே இருக்கிறது. காரணம், இது குடிகாரனை கொண்டாடும் உலகம். ஊருக்கு ஊர் இலக்கு நிர்ணயித்து, மது விற்கும் தேசம்.
இங்கு குடிப்பழக்கம் இல்லாதவன், அம்மணமாக அனைவரும் திரியும் ஊரில் கோவணத்துடன் திரிந்து கோமாளிப்பட்டம் வாங்கி விட்டவன். அவன் மீது எல்லோரும் கல் எறியும் கொடுமை, எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில், ‘நான் மது குடிப்பதில்லை’ என்பதைச்சொல்வதற்கு கூனிக்குறுக வேண்டியிருக்கிறது. அப்படிக் குறுகி நிற்பவரை பார்த்து, நண்டு சிண்டுகள் எல்லாம் ஏளனப் பார்வையோடும் எக்காளக்கூச்சலோடும் ஏகடியம் பேசுவதும் நடக்கிறது. என்ன கொடுமையடா சாமி…!

குடிப்பழக்கம் இல்லாத மனிதர்கள் அருகி விட்டார்கள். அவர்களை ஆதரிப்பார் யாருமில்லை. அலுவலகமோ, வீடோ, அவர்களுக்கு மரியாதை சற்று குறைவாகவே இருக்கும். அவர்களிடம் நட்பு நாடி வருபவர்கள் மிகக்குறைவு. அம்மாஞ்சி, சாமியார், புத்தர், புனிதர், மஞ்ச மாக்கான் என்பதாக அவர்களுக்கு ஆங்காங்கே பெயர்கள் நிலைத்திருக்கும். ஆனால், மது குடிப்பவர்களை பாருங்கள்! நட்பு நாடுதல், அவர்களது சர்வதேச கொள்கை. ஆகவே, மது குடிப்பவர்களின் நண்பர் வட்டம், பெரிதாகவே இருக்கும்.

‘மதுவை தொடுவதில்லை’ என்ற என் மன உறுதியின்மீது, அசாத்திய பெருமையும், கர்வமும் எனக்குண்டு. அதை அவ்வப்போது சொல்லி, என்னை நானே பாராட்டிக் கொள்வதும் வழக்கம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெரும் கலவரமே வெடிக்கும்.
”இவுரு பெரிய மகாத்மா காந்தி. குடிக்கல குடிக்கலன்னு பெரும பீத்திக்குறது. ஊருக்குள்ள இவுரு மட்டுந்தான் குடிக்காம இருக்குற மாதிரி பேசுறது. எங்கு மச்சான் குடிக்குறதில்ல, எங்கு மாமன் குடிக்குறதில்ல, அவிய எல்லா இப்புடித்தான் பீத்திக்குறாங்களா,” என்பார், எனதருமை மனைவி.

ஒரு ஃபுல் அடித்தாலும் ஸ்ட்ராங் ஆக நிற்பதே ஆண்மை இலக்கணம் என்பதாக, இக்காலத்தவர் மனதில் விதைக்கப் பட்டு விட்டது. சரக்கடித்து வாந்தி எடுத்த சக ஊழியர், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் தங்கப்பதக்கம் தவற விட்டதைப் போல புலம்பியதை, ஒருமுறை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. தன் பொது வாழ்வில் தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக, வாந்தியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார், அவர்.
வாந்தி வராத நண்பர்களோ, செவ்வாய் கிரகத்துக்கு செலுத்திய ராக்கெட் வெற்றிகரமாகச்செயல்படும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் விஞ்ஞானிகளைப்போல, தமக்குத்தாமே மெச்சிக் கொள்வதும், தட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் அந்தக்காட்சி, அடடா… என்ன கொடுமையடா சாமி…!

மது குடிப்பவர்கள் மூன்று வகை. பொழுதுபோக்குக்கும், பெருமைக்கும் குடிப்பவர்கள் முதல் வகையினர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில், மது விற்பனை இலக்குகளை விஞ்சச்செய்வது இவர்கள் தான்.
குடும்ப பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வழி தெரியாமல் குடிப்பவர்கள் அடுத்த வகையினர். காலை முதல் மாலை வரை உழைத்த களைப்பில் குடிப்பவர்கள், இன்னொரு வகையினர். இம்மூன்று பிரிவிலும் சேராத ‛நோட்டா’ ஓட்டாளர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.

மது குடிக்காதவர்கள் இரண்டு வகை. மனைவிக்கு பயந்து குடிக்காதவர்கள் ஒரு வகை. நாட்டில் மெஜாரிட்டியாக இருப்பது இவர்களே. மனசாட்சிக்கு பயந்து குடிக்காதவர்கள் மற்றொரு வகை. இவர்கள், ஊருக்கு ஓரிருவர் இருந்தாலே ஆச்சர்யம். இப்படி மிக மிகச்சிறுபான்மையரில் ஒருவனாக, மனசாட்சிக்கு பயந்து மது குடிக்காத நமக்கு, நாளும் கிழமையும் தவறாமல் கிடைப்பதெல்லாம், அவமரியாதை மட்டுமே.

குடிகாரர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு, ‛இது எங்கள் நாடு, நீயெல்லாம் வேறு எங்காவது ஓடிப்போ’ என்பதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்லும் செயலும். வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பாண்டா கரடிகளின் வரிசையில், அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான எல்லாத்தகுதிகளோடும் இருக்கின்றனர், மது குடிக்காத மாமனிதர்கள்.

காந்திய கொள்கைகளை முன்னெடுப்பதில், மகாத்மா காந்தியும் சரி, அவரது தொண்டர்களும் சரி, தவறி விட்டார்கள் என்றே நான் சொல்வேன். மது குடிக்காதவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பது, கவுரவிப்பது, சால்வை போடுவது, பாராட்டுவது, குடிக்காதவர் மனைவியை கண்டறிந்து பாராட்டுவது, விருது கொடுப்பது, மது குடிக்காத மகனை, நல்வழியில் வளர்த்த பெற்றோரை பாராட்டுவது என ஏதாவது செய்யும் பட்சத்தில்தான், குடிக்காதவர்களுக்கும் சமூகத்தில் கொஞ்சமாவது மரியாதை இருக்கும். எத்தனை காலத்துக்குத்தான், எனக்கு நானே, ‛வாழ்க’ கோஷம் போட்டுக் கொண்டிருப்பது…!

பின்னூட்டங்கள்
  1. வணக்கம்
    ஐயா.

    குடியும் குடித்தனம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தாங்கள்சொல்வது போல இவைகள் எல்லாம் பெருகிவிட்டது… இதில் இருந்து விடுபட்டு இருப்பவர்கள் சிலர்தான்…பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

  2. karanthaijayakumar சொல்கிறார்:

    உண்மையிலேயே நீங்கள் பாராட்டுக்கு உரியவர்
    பாராட்டுக்கள்

    Like

  3. johan paris சொல்கிறார்:

    //வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பாண்டா கரடிகளின் வரிசையில், அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான எல்லாத்தகுதிகளோடும் இருக்கின்றனர், மது குடிக்காத மாமனிதர்கள்.//
    அருமை, அருமை….
    உங்கள் புலம்பல் ரசிக்கும்படியாக உள்ளது. ஏனெனில் நானும் மது அருந்துவதில்லை.
    ஆனால் மது அருந்துவதைத் தம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக வாழ்நாளில் கொண்ட பிரஞ்சு, ஐரோப்பிய மக்களுடன் 30 வருடமாக பழகுகிறேன். என்றுமே அவர்கள் என்னைக் கேலி செய்ததில்லை, ஒதுக்கியதில்லை. அவர்கள் திராட்சை ரசம் (வைன்) பருக, நான் தோடைச் சாறைச் சுவைப்பேன்.என்னை நிர்ப்பந்திப்பதுமில்லை.
    என் தமிழ் நண்பர்களில் குடிப்போரும் உண்டு. குடிப்பதால் அவர்களை என்றும் நான் ஒதுக்குவதில்லை. அதனால் அவர்கள் என்மேல் மரியாதையாகவே உள்ளார்கள்.எப்படிடா? உன்னால் முடிகிறது எனக் கேட்பார்கள். தங்களையிட்டு வெட்கப்படுகிறார்கள். மீள முடியாது தவிக்கிறார்கள்.
    பலர் நோயாளியாகிறார்கள், நல்ல நண்பர்கள் இருவர் 50உடன் வாழ்வை முடித்து விட்டார்கள்.
    பலர் நான் இப்படி ஒரு பிடிப்புடன் வாழ்வதையிட்டு பெருமைப்படுகிறார்கள். வைத்தியர்களிடம் செல்லும்போது,மது, புகையிலை இல்லை என்றதும் , நன்று என்பார்கள்.
    அதனால் இந்தச் சில்லறைகள் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
    தலை நிமிர்ந்து, இறுமாப்புடன் வாழுங்கள்.நாம் எப்படி வாழ்வதென்பதை, நாம் முடிவு செய்வோம்.

    Like

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. தலை நிமிர்ந்து வாழும் வாழ்க்கையின் அருமையை உணர்ந்தே இருக்கிறேன். நய்யாண்டிகளால் என் உறுதியை குலைத்து விட முடியாது. தங்கள் மேலான கருத்துக்கு நன்றி ஐயா.

      Like

  4. துளசி கோபால் சொல்கிறார்:

    ரொம்பச் சரி.

    விமானப்பயணத்தில் கூட, குடிப்பவர்களுக்கு இருக்கும் மரியாதையும் விமானபணிப்பெண்களின் விருந்தோம்பலும் அதிகம்தான். அக்கூட்டத்தில் நான் ஒரு புழு! குடிக்கத்தண்ணி (வெறும் தண்ணி, ப்ளெய்ன் வாட்டர்!) கூட ரெண்டு முறை கேட்டால்தான் கிடைக்கும்:(

    ஆனாலும்…என் மனசில் ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்யுது! குடி அறியாதவள்:-)

    Like

  5. Ramasamy சொல்கிறார்:

    ஜோகன் அவர்கள் கூறியது போலத்தான் இங்கு அமெரிக்காவிலும். எத்தனையோ பார்டிகளுக்கும்,ஏன் பார்இல் (மதுக்கடை)ல் நடைபெற்ற கம்பெனி வியாபார சந்திப்புகளுக்கும் சென்றிருக்கிறேன். நான் மட்டும் குடிக்காமல் இருந்ததில் ஒரு பிரச்னையும் இல்லை. நீங்கள் கூறுவது தற்க்கால இந்திய/தமிழர் கலாசாரம்.

    Like

  6. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த உளநல வழிகாட்டல்
    தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்.

    குடித்தலை ஒழிக்கப் படிப்போம்

    குடித்தலை ஒழிக்கப் படிப்போம்

    Like

  7. KILLERGEE Devakottai சொல்கிறார்:

    நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில், ‘நான் மது குடிப்பதில்லை’ என்பதைச்சொல்வதற்கு கூனிக்குறுக வேண்டியிருக்கிறது. — மிகமிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா.
    Killergee
    http://www.killergee.blogspot.com

    Like

  8. ootynews சொல்கிறார்:

    உங்கள் வழியில் தான் நானும்… இந்த வழியில் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்….. இந்த வழியில் செல்ல பலரையும் இணைப்போம்….

    Like

  9. chollukireen சொல்கிறார்:

    ஒழிப்பதற்கு வழி இருக்கிரதாகத் தெரியவில்லை. மன உறுதியோடு குடிப்பவர்கள் திருந்தினால் நன்றாக இருக்கும்.. வாழ்த்துகள் உங்களுக்கு. அன்புடன்

    Like

  10. chitrasundar சொல்கிறார்:

    நம் உடல் நலனைப் பேணுவது நமது கடமைதானே. இதில் யாருடைய பாராட்டோ, வாழ்த்தோ வரலையேன்னு ஏன் கவலைப்பட வேண்டும் ? மன உறுதியுடன் இப்படியே இந்த நல்ல வாழ்க்கையைத் தொடருங்கள் !

    Like

  11. Venkat சொல்கிறார்:

    அருமையான பதிவு…..

    //வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பாண்டா கரடிகளின் வரிசையில், அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான எல்லாத்தகுதிகளோடும் இருக்கின்றனர், மது குடிக்காத மாமனிதர்கள். //

    சரியாகச் சொன்னீர்கள் நண்பரே….

    Like

  12. Killergee சொல்கிறார்:

    இதிலிருந்து விடுபட்டு இருப்பவர்கள் சிலர்தான் பேர்தான் இருக்கிறார்கள் நல்ல சமூக சநித்தனையுள்ள பதிவு நன்றி
    அன்புடன்
    கில்லர்ஜி

    http://www.killergee.blogspot.ae/2014/11/blog-post.html

    Like

பின்னூட்டமொன்றை இடுக