இது, 2000ம் ஆண்டில் நடந்த சம்பவம். பணி முடிந்து வீடு திரும்பும்போது போலீஸ் ஸ்டேஷன் சென்று, ‛ஏதாவது செய்தி போடும்படியான சம்பவங்கள் உண்டா’ என விசாரித்துச்செல்வது வாடிக்கை. அன்றும் அப்படித்தான், நானும் நண்பரும், ஸ்டேஷனுக்கு சென்றோம். ஏட்டையா ஒருவருக்கு, எஸ்.ஐ., உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். ‛‛யோவ், இன்ஸ்பெட்டுரு வெட்டியே தீரணுங்கிறாரு, ஏதோ ஒண்ணு ஏற்பாடு பண்ணுய்யா, கலரு கருப்பு குட்டியா இருக்கணும், நீ பாட்டுக்கு வெள்ள, செம்மி எதையாது புடிச்சுட்டு வந்துறாத’’
உத்தரவை கச்சிதமாக கவ்விக் கொண்டிருந்த ஏட்டையா, ‛‛அய்யா, என்ன ரேட்டுக்குள்றன்னு சொல்லீட்டிங்னா வசதியா இருக்கும்,’’ என்றார். ‛‛யோவ், பணம் ரைட்டர் தருவார்யா! இன்ஸ்பெட்ரே ஒரு ஆயிரத்தி ஐநூறுக்குள்ற பாருங்கன்னாரு… அஞ்சு பத்து எச்சானாலும் நானே தாரேன்,’’ என்றார். பக்கத்தில் இருந்த ரைட்டர், ‛‛குட்டியப் பாத்துட்டுத்தான் பணம் தர முடியும்,’’ என்று கறாராக பேசினார்.
‛‛பணம் கையில இல்லாமப்போயி, எங்க குட்டி வாங்கறது’’ என, தனக்குத்தானே ஆரம்பித்தார், ஏட்டையா.
புலம்பிய ஏட்டையாவை மடக்கி, என்ன ஏதென்று விசாரித்தோம்.
‛‛சார்… பொழப்பில்லாம திரிறாங்க சார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கெரகம் புடிச்சுருக்குன்னு எவனோ கெளப்பி உட்டுட்டாம் போலருக்குது. அத நம்பீட்டு இன்ஸ்பெட்டுரு, எஸ்ஐ ரெண்டுபேரும் சேந்துட்டு, கெடா வெட்டி ரத்தப்பலி குடுக்கனும்னு ஆட்டம் போடறாங்க சார்… இதுக்கு அந்த கோமாளி வேற சப்போட்டு’’
பொரிந்து தள்ளினார் ஏட்டு.
‛‛இவ்வளவு தானா…? நீங்க சத்தம் போடறத பாத்தா, ஏதாச்சும் பெரீ பிரச்சனையோ நெனச்சேன்,’’ என்றேன், நான்.
‛‛சார் அவன் வெட்டித்தொலைட்டும், குட்டி வேணும்னா காசு தரணுமா வேண்டாமா…? போலீஸ்காரனுக்கு எவனாது கடனுக்கு கெடாய் தருவானா? நாமென்ன டிராமா கம்புனியா நடத்துறம், முடிஞ்சதும் அப்பிடியெ கொண்டுட்டுப் போய் உடறக்கு. நாம வெட்டறக்கு கேக்குறம், காசு குடுத்து கேக்குறது தான மொற,’’ என்றார், ஏட்டையா.
எனக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டியது போல இருந்தது. வண்டியை மீண்டும் ஆபீசுக்கு விட்டேன்.
‘போலீஸ் ஸ்டேஷன்ல வசூல் கொறஞ்சு போனதாலயும், அடிக்கடி அசம்பாவிதம் நடக்குறதாலயும், பயந்து போன போலீஸ்காரங்க மலையாள மாந்ரீகர்கிட்ட குறி கேட்டு கெடா வெட்டப்போறாங்க… இதற்கான ஏற்பாடு, இன்ஸ்பெக்டர் தலைமையில, எஸ்ஐ மேற்பார்வையில ஏட்டுகள் செய்றாங்க’ என்று செய்தி தயார் செய்து தலைமை அலுவலகம் அனுப்பிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன்.
வீடு செல்லும் வழியில் மீண்டும் ஸ்டேஷன், அதே ஏட்டய்யா, அதே புலம்பல்…
‛‛என்ன சார், பிரச்னை சால்வ்டா’’
‛‛எங்க சாவுது, நம்மளத்தான் சாவடிக்குறாங்க’’
‛‛என்ன சார் லேட்டஸ்ட்…’’
‛‛சந்தைக்குப் போய் கெடாய் வாங்கறதாமா… ஊருக்குள்ள வாங்குனா குட்டி வெல அதிகம், சந்தைல பாருங்க கமி வெலைக்கு கெடைக்கும்னு இன்ஸ்பெட்டுரு சொல்றாரு… நாளைக்கு ரெண்டு பேரு சந்தைக்குப்போறோம்,’’ என்றார், ஏட்டையா.
எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ‛ஆகா, இன்ஸ்பெக்டரு வசமா சிக்கீருக்காரு, நாளைக்குப் பேப்பர்ல நியூஸ் வரட்டும் அப்பத்தான் நம்பல்லா யாருன்னு அவருக்குத்தெரியும்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். நாளைக்கு முழுக்க நம்பளப்பத்தி தானே பேசியாகனும்…
வீட்டுக்குப்போகும்போது போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தை பார்த்தேன்.
‛வேண்டாம் என்னை விட்டுடு’ என்று கெஞ்சுவதைப்போல் மரங்கள் அசைந்தன. மனசுக்குள் சிரித்தபடி வண்டியை ஓட்டினேன். வீட்டில் இரவு தூக்கமே வரவில்லை. ஒட்டு மொத்தமாக மாவட்ட போலீஸையே கதறடிக்கப் போகும் செய்தியை கொடுத்திருக்கிறோம். எப்படி தூக்கம் வரும். புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.
மணி அதிகாலை மூன்றரை ஆனது. ‛இந்நேரம் பார்சல் வேன் வந்திருக்கும்’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டே ஏஜெண்டுக்கு போன் போட்டேன்.
‛‛சார், பேப்பர் வந்துடுச்சா’’
‛‛வந்திடுச்சுங் சார்’’
‛‛அதுல, நம்பூரு போலீஸ் ஸ்டேஷன்ல கெடா வெட்டுனு ஏதாச்சு நியூஸ் வந்துருக்கானு பாருங்க’’
‛‛அப்புடி எதையும் காணமே சார்’’
‛‛நல்லா பாத்திட்டீங்களா’’
‛‛ பாத்துட்டன் சார், இல்லியே…’’
அதிர்ச்சியாக இருந்தது. செய்தியை கவனிக்காமல் விட்டிருப்பார்களோ?
போன் செய்து வேறு சொன்னோமே…?
துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.
எப்போது ஒன்பதரை மணி ஆகுமென காத்திருந்து பொறுப்பாசிரியருக்கு போன் செய்தேன்.
‛‛சார், வணக்கம்…’’
‛‛என்னபா…’’
‛‛சார், நேத்திக்கு நைட்டு குடுத்த ஒரு முக்கியமான நியூஸ் வரலைங் சார்’’
‛‛ஓ, முக்கியம் முக்கியமில்லைங்கிறதெல்லாம் நீங்களே முடிவு பண்றீங்களா’’
‛‛அப்டியில்லைங் சார், இது கொஞ்சம் நல்ல நியூசு’’
‛‛ யோவ், நல்ல நியூசா, இல்லையாங்கிறதெல்லாம் நாங்க முடிவு பண்ணுவோம்… அப்புறம் நீ குடுக்குற எல்லா நியூசும் பேப்பர்ல வரும்னு எதிர்பாக்குறது தப்பு. தகுதியான நியூசா இருந்தா, தானே பேப்பர்ல வரும்; போனெல்லாம் பண்ணத்தேவையில்லை’’
போனை வைத்து விட்டார் பொறுப்பாசிரியர்.
அவர் என் மேல் அன்புடையவர்தான். அன்று ஏனோ அப்படி கறாராக பேசிவிட்டார்.
எனக்கு, ‛ஏண்டா போன் செய்தோம்’ என்று ஆகி விட்டது. தொங்கிய முகத்தோடு அலுவலகம் புறப்பட்டேன். வழியில் போலீஸ் ஸ்டேஷனை கடந்து வந்தேன். உள்ளே போகப்பிடிக்கவில்லை. மரங்களும், கட்டடமும், என்னை பார்த்து கைகொட்டிச்சிரிப்பது போலிருந்தது. வெட்கம் பிடுங்கித்தின்றது.
ஆபீசில் நுழைந்தால், மண்டை காய்ந்தது. நமக்கு ஆகாத நான்கைந்து பேரும் கூடிப்பேசுகையில் எல்லாம், நம்மைப்பற்றி பேசுவதாகவே தோன்றியது. போதாக்குறையாக, ஏஜெண்ட் வேறு போன் போட்டு, அந்த நியூஸ் ஏன் வரவில்லையென்று குசலம் விசாரித்தார். எல்லாம் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய் இருந்தனர்.
‛விடுங்க, ஒரு கம்ப்ளைண்ட் வேணா போலீஸ்ல குடுத்துருவோம்’ என்று நக்கல் வேறு.
மதியம் சாப்பிடச்சென்றபோதும், திரும்ப வந்தபோதும், போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பவேயில்லை. இரவும் அப்படியே சென்று விட்டேன். வெறுப்பிலேயே இரு நாட்கள் கடந்தன.
மூன்றாம் நாள் அதிகாலை 4 மணியிருக்கும், ஏஜெண்ட் போன் செய்தார்.
‛‛சார், அந்த நியூஸ போட்டுட்டாங்க சார்’’
பாதி தூக்கத்திலும் நினைவு இருந்தது.
‛‛போலீஸ்காரங்க கெடாவெட்டுற நியூஸா’’
‛‛ஆமா சார், மொதப்பக்கத்துல வந்துருக்குது’’
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
முதல் பக்கத்திலா…? எதையாவது எக்ஸ்ட்ரா பிட் சேர்த்து நம்மை மாட்டி விட்டிருப்பாங்களோ…?
அவசரம் அவசரமா சட்டையை மாட்டிக்கொண்டு, வண்டியை கிளப்பி, பஸ்ஸ்டாண்டு்க்கு சென்றேன்.
செய்தியில் பிரச்னையில்லை. ஆனால் கொடுத்து மூன்று நாட்கள் ஆகி விட்டதே…?
கெடாய் வெட்டினார்களோ, இல்லையோ…? என்ன நடந்தது என்றே விசாரிக்கவில்லையே?
ஸ்டேஷன் வழியாக சென்றபோது, வேறொரு ஏட்டு வழிமறித்தார்.
‛‛என்ன சார், ஸ்டேஷன் பக்கமே காணம், இங்க ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்குது, என்ன ரிப்போர்ட்டரு நீங்கெல்லாம்’’
‛‛அப்ப ஏதோ நடந்திருக்குது, என்னனு சொல்லுங்க’’
‛‛கெடா வெட்டு, பிரியாணி, விருந்து… எதுமே தெரியாதா உங்களுக்கு…?’’
‛‛சார், ஊருக்கு போயிட்டனா, அதான் ஸ்டேஷன் வரலை’’
‛‛இனிமே பாருங்க, நம்ம லிமிட்ல கொலை, கொள்ளை எதுமே நடக்காது. ஸ்டேஷனை சுத்தி, ரத்தக்குறி காட்டீருக்கமே’’
எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. காட்டிக் கொள்ளாமல் கிளம்பினேன்.
ஆபீசுக்கு வந்தபோது, வஞ்சப்புகழ்ச்சி நண்பர்கள் கூட்டம், கூடிப்பேசி கும்மியடிக்க தயாராக இருந்தனர்.
ஆனாலும் நம்மகிட்ட முடியுமா…?
நண்பர் ஆரம்பித்தார்
‛‛நியூஸ் வந்துடுச்சுபோல…,’’
‛‛ஆமாமா, காலைலயே டிஎஸ்பி போன்ல பொலம்பித்தள்ளீட்டாரு, எஸ்பி செம டோஸ் விட்டாராமா’’
இப்படியொரு பிட்டைப் போட்டு விட்டு, பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்.
மீண்டும் நண்பர் ஆரம்பித்தார்.
‛‛அவிங்க கெடாய் வெட்டிட்டாங்களாமே’’
‛‛ஆமா, நேத்துத்தான் வெட்டுனாங்களாம்’’
‛‛உங்ககிட்ட சொல்லாம வெட்டிட்டாங்களோ’’
‛‛சொன்னாங்க, சொன்னாங்க…’’
‛‛ஆபீஸ்ல நியூஸ் போடுறம்னு சொன்னாங்ளா’’
‛‛ஆமாமா, எங்கிட்ட கேட்டாங்க… மொதப் பக்கத்துல போடட்டுமானு கேட்டாங்க… நாந்தான் , தாராளமா போடுங்கன்னு சொன்னேன்,’’
‛‛கெடா வெட்டுனதையும் சேத்து போட்டுருக்கலாமே’’
‛‛இல்ல, அதப் போட்டா நியூஸ் வெயிட் இல்லாமப் போய்டும்னு ஆபீஸ்ல சொல்லிட்டாங்க’’
அதற்கு மேல் என்னாலும், முடியவில்லை. எவ்வளவு நேரம்தான், வலிக்காததுபோலவே நடிப்பது…?
அவசரமாக வேலை இருப்பதாக, வண்டியை எடுத்துக் கொண்டு தப்பித்து விட்டேன்.
போலீஸ் ஸ்டேஷனில் கெடா வெட்டு!
Posted: 12/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, police stories, tamil, tamil news
பின்னூட்டங்கள்
நேரில் காட்சிகள் தெரிந்தன….
LikeLike
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, தனபாலன் சார்
LikeLike
காவல்துறையே கடா வெட்டில் இறங்கினால்
இப்படி ஒரு செய்தியை நினைத்துக் பார்க்கவே இயலவில்லை நண்பரே
LikeLike
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா. போலீஸ் ஸ்டேஷன்களில் இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் நடப்பது வழக்கம் ஐயா. திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க, மை பாேட்டுப் பார்க்கும் போலீசார் கூட இருக்கிறார்கள், ஐயா..
LikeLike