06/05/2014 க்கான தொகுப்பு

கடந்த பொதுத்தேர்தல் நடந்தபோது, சேலத்தில் வசித்தோம். வீட்டுக்கு வீடு, ஓட்டுக்கு ஓட்டு கணக்குப்போட்டு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர், ஒரு கட்சியினர். நான் பத்திரிகைக்காரன் என்பதால், என் வீட்டில் கொடுப்பதற்கு அவர்களுக்கு தயக்கம். ‛கொடுத்தால், வாங்கிக் கொள்வார்களா, வாங்கினால், பத்திரிகையில் செய்தி போட்டு விடுவார்களோ’ என்றெல்லாம் கட்சியினருக்கு சந்தேகம்.
அக்கம் பக்கத்து காம்பவுண்ட் வீடுகளில் எல்லாம் பணம் பட்டுவாடா நடந்து விட்டது. நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில், எங்கள் வீட்டிலும், எதிரில் இரு வீடுகளிலும் மட்டுமே பணம் தர வேண்டியது பாக்கி. கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ‛விசாரித்து வையுங்கள், நாளை வந்து பணம் தருகிறோம்’ என்று எதிர்வீட்டில் உத்தரவாதம் வேறு அளித்துச் சென்று விட்டனர்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய என்னிடம் எதிர்வீட்டுப் பெண்மணி, ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாமா’ என்றார். ‛எங்களுக்கு வேண்டாம், நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன்.
‛நீங்க வாங்காமல், நாங்க மட்டும் எப்படி வாங்குவது’ என்று அவர் சங்கோஜப்பட்டார். நம்மை மிகவும் ‛சீப்’பாக எடைபோட்டு விடுவார்களோ என்றும், இவர்களால் நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்றும், அவர் கவலைப்படுவது, பேச்சில் தெரிந்தது.
‛நாங்கள் தேர்தல் நாளில் கோவை சென்று விடுவோம், அதனால் பணம் வாங்கினாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லை. எனவே எங்களைப்பற்றி கவலையின்றி, பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன். அந்த பதிலில் அவர் சமாதானமாகி விட்டார். எதிரில் இருக்கும் இரு வீட்டினரும் பணம் வாங்கிக் கொள்ள முடிவானது.
ஆனால், பணம் கொடுப்பதாக சொன்ன கட்சியினர்தான், வரவே இல்லை. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு முடிவதற்கு சிறிது நேரம் வரை காத்திருந்தும், பணம் வராமல்போனதால், எதிர் வீட்டினருக்கு கடும் கோபம். பணம் தருவதாக ஏமாற்றிய கட்சியினருக்கு ஓட்டுப் போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஓட்டுப் போட்டு, பழி தீர்த்தனர். கூட்டணிக் கட்சியினரை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசியும் தோற்றுப்போனார், தங்கபாலு!

‘யுனிகோடு’ இத்தனை கழுத்தறுப்பாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. 18 ஆண்டாக, ஒரு முறையில் தட்டச்சி விட்டு, இப்போது வலைப்பதிவுக்கென புதிய முறைப்படி தட்டச்சுவது மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. ஸ்ரீலிபி எழுத்துருக்களை, மாடுலர் கீபோர்டில் தட்டச்சித்தான் எனக்குப் பழக்கம். அதில், ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பெல்லாம், பிரச்னையே இல்லை. முதலில், கொம்பை தட்டச்சி, பிறகு அதற்குரிய எழுத்தை தட்டச்சினால் போதும். அதாவது, நாம் எழுதுவதைப்போல.

ஆனால், இந்த யுனிகோடு முறைக்கு வந்தபிறகு, எழுத்தை முதலில் தட்டச்சிவிட்டு, பிறகு கொம்பையும், துணைக்காலையும் தட்டச்ச வேண்டியிருக்கிறது. அலுவலகத்தில் அப்படியும், வெளியில் இப்படியும், என்று இரு வேறு முறைப்படி தட்டச்சுவதில் தான், எத்தனை இம்சை…!
மற்றொரு பிரச்னை, வலைப்பக்கத்தில், யுனிகோடு பயன்படுத்தி, நான் சரியாகவே தட்டச்சிய வார்த்தைகளில், கொம்பு முன்பின் மாறி, பிழையுடன் இருப்பதாக, நண்பர்கள் கூறியதுதான். என் வலைப்பக்கத்தில், எழுத்துப்பிழைகளை காணோம். ஆனால், வேறு சில நண்பர்களின் கம்ப்யூட்டர்களில் பார்த்தபோது, கொம்புகள், இடவலமாக மாறியுள்ளன. ஆகவே, பிழைகள் வந்து விடுகின்றன. இந்த பிரச்னைக்கு யாராவது, நண்பர்கள் தீர்வு சொன்னால், தன்யன் ஆவேன்.