இரு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம். நள்ளிரவு 12 மணி இருக்கும். அலுவலகத்தில் இருந்தேன். இரவுப்பணி போட்டோகிராபர் ஒரு படத்துடன் வந்தார். படத்தில், கோவையில் ஒரு பிரபல தனியார் பள்ளியின் முன், 100க்கும் மேற்பட்டோர், சாலையின் பிளாட்பாரத்தில் படுத்திருந்த காட்சியை பார்த்தேன். சிலர், பாய், தலையணை கூட வைத்திருந்தனர். எல்லாம், பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்குத்தான். அவர்களில் பலர், அன்று காலை முதலே வரிசையில் நிற்பதாகவும், மறுநாள் காலை வரை காத்திருந்தால் தான், விண்ணப்பம் வாங்க முடியும் என்றும், போட்டோகிராபர் தெரிவித்தார்.
அவர்கள் காத்திருப்பது, சேர்க்கைக்கு அல்ல; விண்ணப்பம் வாங்குவதற்கு. விண்ணப்பம் வாங்கினால் மட்டுமே சேர்க்கை உறுதியாகி விடாது. அப்படியிருந்தும், அவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். கோவையில் வேறு சில பள்ளிகளிலும், இதேபோன்று பெற்றோர் காத்திருப்பது போன்ற படங்கள், பத்திரிகைகளில் வெளியாவதுண்டு. சென்னை, சேலத்திலும் கூட, இப்படி பள்ளிகளில், பெற்றோர் காத்திருக்கும் படங்களை பார்த்திருக்கிறேன்.
இதில் யாரை குறை சொல்வது? பிளாட்பாரத்தில் இரவு வேளையிலும் படுத்திருப்பவர்களையா, அப்படியெல்லாம் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகிறார்கள் என்பதை அறிந்தும், மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாத பள்ளி நிர்வாகத்தினரையா?
சில தனியார் பள்ளிகள், தங்கள் கேட் முன், பிளாட்பாரத்தில் பெற்றோர் காத்திருப்பதை, தங்களுக்கு கிடைக்கும் பாரத ரத்னா விருதுபோல கருதிக் கொள்கின்றன போலும். எனவேதான், ஆண்டுக்கு ஆண்டு, இது தொடர்கதையாகிக்கொண்டே இருக்கிறது.
தன் சுய மரியாதையை இழந்து, பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் தந்தைக்குத்தான் விண்ணப்பம் என்று, பள்ளி நிர்வாகத்தினர் அறிவிக்காத குறையாக இருக்கிறது, அவர்களது செயல்பாடு. ‛நாங்களா, பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் காத்திருக்கச் சொன்னோம். அவர்களாக படுத்தால், நாங்கள் எப்படி பொறுப்பாவோம்’ என்பது, இத்தகைய பள்ளி நிர்வாகத்தினரின் கருத்தாக இருக்கிறது; நிச்சயம் அப்படித்தான் பேசுவர்.
ஆனால், அவர்கள் நினைத்தால், இப்படி இரவு வேளையில் காத்திருப்பதற்கு, ஒரு மாற்று ஏற்பாடை செய்து விட முடியும். ‛எங்களிடம் இருக்கும் இடங்கள் இவ்வளவு தான், இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். நேர்முகத்தேர்வில் குழந்தை வெற்றி பெற்றால் சேர்க்கை; இல்லையெனில் கிடையாது’ என்று அறிவித்து விடலாமே!
அவ்வாறு செய்யாமல், ‛குறிப்பிட்ட தேதியில் மட்டுமே விண்ணப்ப விற்பனை, குறைந்த இடங்களே உள்ளன’ என்று அறிவிப்பதுதான், இப்படி இரவு நேரத்திலும், பெற்றோர் காத்திருப்பதற்கு காரணமாகி விடுகின்றன. இப்படி பெற்றோர் காத்திருந்து விண்ணப்பம் பெறும் இழிநிலையை தடுக்கும் பொறுப்பு, அரசு அதிகாரிகளுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரும் இதை கண்டுகொள்வதே இல்லை. காத்திருக்கும் பெற்றோருக்கும், காரணமான பள்ளிகளுக்கும், கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கும் கல்விக்கடவுள் தான் பாடம் புகட்ட வேண்டும்.
இங்கு பெற்றோர்களே குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள்.
ஏன் வேறு பள்ளிகளில் சேர்த்தால் அவர்களின் பிள்ளைகள் படிக்க மாட்டார்களா?
அல்லது வாழ்க்கையில் தான் முன்னேறாமல் போய்விடுவார்களா?
ஐயா நானும் ஒரு ஆசிரியர். மாணவர்களைச் சேர்ப்பதற்கு நாங்கள் வீடு வீடாக சென்று
வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஆனால் இவர்களோ , இரவு முழுவதும் காத்திருக்கிறார்கள் விண்ணப்பங்கள் வாங்க.
பிள்ளைகளின் படிப்பையும், தங்களின் கௌரவத்தையும் ஒன்றாகஇணைப்தால் ஏற்படுகின்ற பிரச்சினை இது
LikeLike
ஆம் ஐயா, தாங்கள் கூறுவது உண்மை தான். சில வீடுகளில் நான் பார்த்ததுண்டு. விண்ணப்பம் வாங்காமல் வந்தால் வீட்டில் வசைமொழிகளை எதி்ர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பயந்து, பிளாட்பாரத்தில் படுத்திருந்த கணவர்களையும் அறிவேன். பெற்றோர் மனநிலையும் மாற வேண்டும். வருகைக்கும், தங்கள் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா.
LikeLike
அருமையான பதிவு நானும் ஓர் ஆசிரியைதான். என் குழந்தைகள் இருவரும் நான் வேலை செய்த தனியார் பள்ளியில் தான் படித்தார்கள் இருவரும் இன்ரு இரண்டிரண்டு முதுகலைப் பட்டங்களுடனும் தங்கப்பதக்கங்களுடனும் சிறந்த ஆசிரியைகளாக பணிசெய்து வருகிறார்கள் என்பதை மிக மிகப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் படிப்பு என்பது பிரபலமான பள்ளியில் மட்டும் இல்லை, நமது கடின உழைப்பிலும் உள்ளது. பாராட்டுக்கள்
LikeLike
மகிழ்ச்சி மேடம். படிப்பென்பது, பள்ளியில் இருந்து வருவதை காட்டிலும் படிப்பவர் முயற்சியினால் வருவதே அதிகம் என்பதே என் எண்ணமும். அதையே தாங்களும் கூறியிருக்கிறீர்கள் மேடம். வருகைக்கு நன்றி மேடம்.
LikeLike