28/04/2014 க்கான தொகுப்பு

பத்திரிகை, டிவி செய்தியாளர்களிலும் பல டுபாக்கூர்கள் இருக்கின்றனர். அவர்களை எந்நேரமும் கலெக்டர் ஆபீஸ்களிலும், கமிஷனர் ஆபீஸ்களிலும் பார்க்க முடியும். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் எனக் கூறிக்கொண்டு சுற்றித்திரிபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த வகையினரே. அவர்கள் வேலை பார்க்கும் பத்திரிகை, டிவி எதுவென்று யாருக்கும் தெரியாது. இரண்டு, மூன்று செய்தி நிறுவனங்களின் பெயரை மாற்றி மாற்றி கூறுபவர்களும் உண்டு. எதையுமே சொல்ல முடியாமல் வெறும் பிரஸ் ரிப்போர்ட்டர் என்று மட்டும் சொல்லிக் கொள்பவர்களும் இருக்கின்றனர். சரி, அறிமுகத்தை முடித்து, விஷயத்துக்கு வருவோம். டுபாக்கூர்கள் எப்போதுமே தனியாக இருப்பதில்லை. ஒரு கூட்டமாகவே திரிவர். அதுவே தங்களுக்கு பாதுகாப்பு என்பது அவர்களுக்கு தெரியும். கலெக்டர் ஆபீசுக்கு மனு கொடுக்க வருபவர்களை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்பர். ஸ்டில் கேமிரா, வீடியோ கேமிரா, மைக் சகிதம் டுபாக்கூர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே, அப்பப்பா… ஒரிஜினல் செய்தியாளர்களுக்கு கூட அவ்வளவு திறமை போதாது. பேட்டி கொடுத்தவர் மெதுவாக, ‘எந்தெந்த டிவி பேப்பர்லாம் வந்திருக்கீங்க’ என்பார். ‘எல்லா டிவி எல்லா பேப்பர் ரிப்போர்ட்டரும் இருக்கோம்’ என்று கோரஸாக பேசி, கேட்டவரை அமுக்கி விடுவர். அதையும் மீறி குறிப்பிட்ட பேப்பர் அல்லது டிவி செய்தியாளர் வந்திருக்கிறாரா என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்டால், ‘இதோ இவர் தான்’ என்று சக டுபாக்கூரை கையைக்காட்டுவர். அவரும், ‘அதெல்லாம் போட்டுர்லாங்க’ என்று பெருந்தன்மையாக கூறி விடுவார். கடைசியில், டுபாக்கூர்களின் லீடர் வருவார். ‘அண்ணே நாங்க 16 பேர் இருக்கோம். பாத்து செஞ்சுட்டுப் போங்க’ என்பார். பேட்டி கொடுத்தவர் திடுக்கிட்டுப் போவார். மார்க்கெட் நிலவரம் தெரியாமல் மண்டையை சொரிவார். ‘அண்ணே ஏண்ணே யோசிக்கிறீங்க. ஈச் 500 போட்டு குடுங்கண்ணே எல்லா பேப்பர் டிவிலயும் அண்ணன் பேட்டி ஜம்முனு வந்துரும்’ என்பார்.
”இல்ல அமண்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு”
”இருக்குறத கொடுங்கண்ணே”
”இந்தாங்க” என்றபடி தன்னிடம் இருந்த 2500 ரூபாயை கொடுப்பார். கொடுக்கும்போதே சன் டிவியில் பேட்டி கொடுப்பதை பார்ப்பதுபோல கனவு வந்து விடும்.
‘ஆஹா ஆஹா’
கற்பனையிலேயே வீட்டுக்குப் போவார். குடும்பத்துடன் டிவி முன் காத்திருப்பார். பேட்டியும் வராது; செய்தியும் வராது. மறுநாள் காலை விடிந்ததும் ஓடிச்சென்று பேப்பரில் தேடுவார். எதிலும் செய்தி வந்திருக்காது. அப்போது தான் தெரிந்தவர்களிடம் விசாரிக்கத்தோன்றும். டுபாக்கூர்களின் கைவரிசையில் பணத்தை பறிகொடுத்தது கடைசியில் தான் புரியும்.
இப்படியே நாள் முழுவதும் வேட்டை நடத்தும் டுபாக்கூர்கள், ஒரிஜினல் செய்தியாளர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை. ஒரு டுபாக்கூர் இன்னொரு சக டுபாக்கூரை காட்டிக் கொடுக்க மாட்டார். அது தொழில் தர்மம். சக டுபாக்கூர் போலீசில் மாட்டிக் கொண்டால் அனைத்து டுபாக்கூர்களும் திரண்டு வர வேண்டும் என்பது அவர்கள் சங்கத்தில் எழுதப்படாத விதி. அவர்களின் பின்னணியை தோண்டித்துருவினால் இன்னும் பல சுவாரஸ்யங்கள் தெரியவரும். ரியல் எஸ்டேட் புரோக்கர், பஸ்ஸ்டாண்டில் கர்ச்சீப் விற்பவர், கொய்யாப்பழ வியாபாரியெல்லாம் பிரஸ் ரிப்போர்ட்டர் என்று திரிந்து கொண்டிருப்பது பலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கும். அவர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூட இருப்பர். இப்படிப்பட்ட ஆசாமிகளிடம் செய்தியை கொடுத்து விட்டு, ‘எந்த பேப்பர்காரனும் போடவில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பர்கள் நிறையப்பேர் உண்டு. ஆகவே மகாஜனங்களே, பேனா பிடிக்கும் எல்லோரும் செய்தியாளர் அல்ல; மைக் கேமிரா வைத்திருப்பவர் எல்லாம் டிவி, பத்திரிகை ஊழியரும் அல்ல. பணம் கொடுப்பதை எந்த முன்னணி பத்திரிகையும் ஆதரிப்பதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். டுபாக்கூர்கள் தூணிலும் இருப்பர்; துரும்பிலும் இருப்பர் என்பதை அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.