21/04/2014 க்கான தொகுப்பு

 
 
திருப்பூர் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கம்யூனிஸ்டுகள் சார்பில் சுப்பராயன். ஆனாலும் திமுக, அதிமுக இடையில் தான் போட்டி நிலவுகிறது. 
அதிமுக வேட்பாளர் பெண், நகராட்சி தலைவர் வேறு. திமுக வேட்பாளர் அரசியலுக்கு தொடர்பில்லாத டாக்டர். தேமுதிக சார்பில் தினேஷ் குமார் கடும் போட்டியை ஏற்படுத்தினாலும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.  காங்கிரஸ், கம்யூ வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுக்களை பிளந்து விடுவர். 
‘திருப்பூர் எங்கள் கோட்டை’ என்று பீற்றிக்கொள்ளும் செஞ்சட்டையினருக்கும், காவிக்கட்சியினருக்கும் என்ன கிடைக்கும், எத்தனை கிடைக்கும் என்பது மே 16ல் தெரிந்து விடும்.
 ***
பொள்ளாச்சி தொகுதியில் மும்முனைப்போட்டி. அதிமுக சார்பில் புதுமுகம் மகேந்திரன், அம்மாவை நம்பி இரட்டை இலையை நம்பி களம் இறங்கியுள்ளார். திமுக சார்பில் மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, தன் பணபலத்தை நம்பி நிற்கிறார். 
தாமரை சின்னத்தில் நிற்கும் கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன், ஜாதி, கூட்டணி பலத்தை நம்பி இருக்கிறார். எனக்கும் பொள்ளாச்சி தொகுதியில் தான் ஓட்டு. தாழ்த்தப்பட்டவர்கள் கூட தாமரைக்கு ஓட்டு கேட்டு வீட்டுக்கு வந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. 
இந்த முறையும் ஜெயிக்காவிட்டால் ஈஸ்வரன் கட்சியை கலைத்து விட்டு தொழிலை பார்க்க போய்விடலாம். ஆனால் பொள்ளாச்சியில் வெற்றிக்கனி அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது என்றே தோன்றுகிறது.
 ***
கோவை தொகுதியில் ஐந்து முனைப் போட்டி. காங்கிரஸ் சார்பில் மாஜி அமைச்சர் பிரபு, மார்க்சிஸ்ட் சார்பில் சிட்டிங் எம்பி நடராஜன் களத்தில் இருந்தாலும் முக்கிய போட்டி அதிமுகவின் நாகராஜூவுக்கும் பாஜவின் ராதாகிருஷ்ணனுக்கும் தான். 
திமுக வேட்பாளர் கணேஷ் குமாரும் களத்தில் இருக்கிறார். சொதப்பலான தேர்வு. ஆம் ஆத்மி, பெயரளவுக்கு போட்டியிடுகிறது. மோடி, ஜெ., கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வாசன் என எல்லா தலைவர்களும் வந்து சென்று விட்டனர். புதுமுக வாக்காளர்கள் பலரும் இம்முறை பாஜவுக்கு ஓட்டளிக்க விரும்புவதை உணர முடிகிறது. 
ஒருவேளை பாஜ வெற்றி பெற்றால் அதற்கு மோடி அலை தான் காரணமாக இருக்கும். சில ஆயிரம் ஓட்டுகளில் தோற்றுப்போனால், அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சம்பாதித்து வைத்திருக்கும் வெறுப்பும், வேட்பாளர் தேர்வில் சறுக்கிய பாஜ தலைமையும் தான் காரணமாக இருக்கக்கூடும்.
 ***

தேர்தல் 1 

Posted: 21/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , , , , ,
 
 

அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு எல்லா காலங்களிலும் சரியாக இருந்து விடாது. இரண்டும் இரண்டும் சேர்ந்து இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ ஆகிவிடவும் வாய்ப்புண்டு. 

நான்கு என்ற கணக்கு சரியென்றால், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடும். ஆனால் அந்தக்கூட்டணியின் தலைவர்களே அதை ஏற்க மாட்டார்கள். ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் ஓட்டுகள் மாறி விழ வாய்ப்பில்லை. ஆனால் இக்கட்சியினர் ஓட்டு பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. கூட்டணியால் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் பயன் மிகக்குறைவு என்று கருதித்தான் டாக்டர் ராமதாஸ், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.  
வழக்கமாக வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் கட்சியில் இம்முறை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம், கட்சிக்கு கணக்கு காட்டவே பிரசாரம் என்பதாக தகவல். 
பாஜவுக்கு கன்னியாகுமரியும் சிவகங்கையும் வாய்ப்புள்ள தொகுதிகள். கோவை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பாமகவுக்கு தர்மபுரி தேறினாலே ஜாக்பாட் அடித்தது போல எண்ணிக்கொள்ளலாம். வைகோவுக்கு இந்த முறை இரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கல்வித்தந்தைகள் தேற வாய்ப்பில்லை. 
அதிமுகவுக்கு மைனஸ் நிறைய இருந்தாலும் ஓட்டு பிரிவதால் லாபம் கிடைக்கும். திமுகவுக்கு, முதலுக்கு மோசம் வராது போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இருப்பதை காண்பிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் முக்கிய அம்சம், முதலிடம், இரண்டாமிடத்தை மட்டுமே சந்தித்து வந்த திமுகவும், அதிமுகவும் மூன்றாமிடம், நான்காமிடத்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது தான். 
ரொம்பவும் மொக்கையான பிரசாரம் அம்மாவுடையது எனில், சுவாரஸ்யமான பிரசாரம் விஜயகாந்துடையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 
”நான் என்ன பேசீட்டிருந்தேன், மறந்து போச்சு,” என்பதிலிருந்து, வானதி சீனிவாசனை, ”யாரு இவங்க எங்கயோ பாத்த மாதிரி இருக்குதேன்னு கேட்டேன்,” என மைக்கில் சொன்னது, ”உங்கள் வாக்காளர் யார்” என கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்டது என, கேப்டன் காமெடியில் சக்கைப்போடு போடுகிறார்.