19/04/2014 க்கான தொகுப்பு

தமிழக அரசியல்வாதிகளில் அற்புதமான தமிழ் உச்சரிப்பும், மெச்சத்தகுந்த
மொழிநடையும் கொண்டவர் மத்திய அமைச்சர் சிதம்பரம். அவரது ஆங்கிலத் திறமும் அப்படித்தான். தான் சொல்லவரும் கருத்தை, கச்சிதமான வார்த்தைகளில் வடிக்கும் அவரது அழகே தனி.
தான் போட்டியிடாமல், தன் மகனை தேர்தல் களத்தில் அவர் இறக்கியபோது, குரங்கு குட்டியை விட்டு குளத்தை ஆழம் பார்க்கும் என்பார்களே, அதுதான் நினைவுக்கு வந்தது. புறமுதுகிட்டு ஓடுதல் என்பதற்கு இந்தாண்டின் மிகச்சிறந்த உதாரணம் இதுதான்.
செட்டிநாட்டுப் பெருமை, ஹார்வார்டு படிப்பு, சுப்ரீம் கோர்ட் வக்கீல், நிதியமைச்சர் பதவி எல்லாம் இருந்து என்ன பயன்?
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே, அது போலத்தான் இந்த தேர்தல் சிதம்பரத்துக்கு அமைந்து விட்டது. பாவம். அவரை ‘ரீகவுன்டிங் மினிஸ்டர்’ என்று தொடர்ந்து கிண்டல் செய்வதன் மூலம் நிதானம் இழக்கச்செய்யும் முயற்சி ஏறக்குறைய வெற்றி அடைந்து விட்டது என்றே கூற வேண்டும்.
பட்ஜெட் உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டுவது சிதம்பரத்தின் வழக்கம். அவருக்குச் சொல்லவும் நம்மிடம் சில குறட்பாக்கள் இருக்கின்றன.
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை.

முன் ஜென்ம வினை!

Posted: 19/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , ,

பல தமிழ் சினிமாக்களில் கண்ட காட்சி தான் இது. ஹீரோ, எப்போதோ செய்த தவறுக்காக, திருந்தி நல்லவனாக வாழும் காலத்தில் போலீசாரால் கைது செய்யப்படுவான். செல்வகணபதி விவகாரத்தில் அதுதான் நடந்திருக்கிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருந்த செல்வகணபதி, கட்சித்தலைமையின் புறக்கணிப்பால் மனம் உடைந்து தி.மு.க.,வில் சேர்ந்தார். அங்கு அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. கோஷ்டிப்பூசல்களை கடந்து தலைமையிடம் நற்பெயர் பெற்று எம்.பி., பதவியும் பெற்றார். என்ன பயன்? முன் ஜென்ம வினை, பதவியை காலி செய்து விட்டது.

வணக்கம், பதிவுலக சொந்தங்களே!
தேர்தல் காலம்; அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் என்பதால் வலைப்பக்கம் வர முடியவில்லை. தொகுதிப்பக்கம் வராத எம்.பி., எம்.எல்.ஏ.,க்களையே மன்னித்து, மாலை மரியாதை செய்தனுப்பும் பாரம்பரியம் கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், என்னையும் மகிழ்வுடன் ஏற்கும் என்று மனதார நம்புகிறேன். பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அரசியல் தவிர்த்த பதிவுகள் போடுவது தெய்வ குற்றம் என்றஞ்சி, என் திருப்பணியை தொடர்கின்றேன். நன்றி!

குறிப்பு: நான், மோடி, ராகுல் ஆதரவாளர் அல்ல; அம்மா கட்சியும் அல்ல; அய்யன் வள்ளுவர் கட்சியும் அல்ல.
நடுநிலை என்றெல்லாம் பொய் சொல்ல விருப்பமில்லாத விமர்சகன் என்றே நீங்கள் கருதும்படி வேண்டுகிறேன்.