ஏப்ரல், 2014 க்கான தொகுப்பு

பத்திரிகை, டிவி செய்தியாளர்களிலும் பல டுபாக்கூர்கள் இருக்கின்றனர். அவர்களை எந்நேரமும் கலெக்டர் ஆபீஸ்களிலும், கமிஷனர் ஆபீஸ்களிலும் பார்க்க முடியும். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் எனக் கூறிக்கொண்டு சுற்றித்திரிபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த வகையினரே. அவர்கள் வேலை பார்க்கும் பத்திரிகை, டிவி எதுவென்று யாருக்கும் தெரியாது. இரண்டு, மூன்று செய்தி நிறுவனங்களின் பெயரை மாற்றி மாற்றி கூறுபவர்களும் உண்டு. எதையுமே சொல்ல முடியாமல் வெறும் பிரஸ் ரிப்போர்ட்டர் என்று மட்டும் சொல்லிக் கொள்பவர்களும் இருக்கின்றனர். சரி, அறிமுகத்தை முடித்து, விஷயத்துக்கு வருவோம். டுபாக்கூர்கள் எப்போதுமே தனியாக இருப்பதில்லை. ஒரு கூட்டமாகவே திரிவர். அதுவே தங்களுக்கு பாதுகாப்பு என்பது அவர்களுக்கு தெரியும். கலெக்டர் ஆபீசுக்கு மனு கொடுக்க வருபவர்களை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்பர். ஸ்டில் கேமிரா, வீடியோ கேமிரா, மைக் சகிதம் டுபாக்கூர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே, அப்பப்பா… ஒரிஜினல் செய்தியாளர்களுக்கு கூட அவ்வளவு திறமை போதாது. பேட்டி கொடுத்தவர் மெதுவாக, ‘எந்தெந்த டிவி பேப்பர்லாம் வந்திருக்கீங்க’ என்பார். ‘எல்லா டிவி எல்லா பேப்பர் ரிப்போர்ட்டரும் இருக்கோம்’ என்று கோரஸாக பேசி, கேட்டவரை அமுக்கி விடுவர். அதையும் மீறி குறிப்பிட்ட பேப்பர் அல்லது டிவி செய்தியாளர் வந்திருக்கிறாரா என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்டால், ‘இதோ இவர் தான்’ என்று சக டுபாக்கூரை கையைக்காட்டுவர். அவரும், ‘அதெல்லாம் போட்டுர்லாங்க’ என்று பெருந்தன்மையாக கூறி விடுவார். கடைசியில், டுபாக்கூர்களின் லீடர் வருவார். ‘அண்ணே நாங்க 16 பேர் இருக்கோம். பாத்து செஞ்சுட்டுப் போங்க’ என்பார். பேட்டி கொடுத்தவர் திடுக்கிட்டுப் போவார். மார்க்கெட் நிலவரம் தெரியாமல் மண்டையை சொரிவார். ‘அண்ணே ஏண்ணே யோசிக்கிறீங்க. ஈச் 500 போட்டு குடுங்கண்ணே எல்லா பேப்பர் டிவிலயும் அண்ணன் பேட்டி ஜம்முனு வந்துரும்’ என்பார்.
”இல்ல அமண்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு”
”இருக்குறத கொடுங்கண்ணே”
”இந்தாங்க” என்றபடி தன்னிடம் இருந்த 2500 ரூபாயை கொடுப்பார். கொடுக்கும்போதே சன் டிவியில் பேட்டி கொடுப்பதை பார்ப்பதுபோல கனவு வந்து விடும்.
‘ஆஹா ஆஹா’
கற்பனையிலேயே வீட்டுக்குப் போவார். குடும்பத்துடன் டிவி முன் காத்திருப்பார். பேட்டியும் வராது; செய்தியும் வராது. மறுநாள் காலை விடிந்ததும் ஓடிச்சென்று பேப்பரில் தேடுவார். எதிலும் செய்தி வந்திருக்காது. அப்போது தான் தெரிந்தவர்களிடம் விசாரிக்கத்தோன்றும். டுபாக்கூர்களின் கைவரிசையில் பணத்தை பறிகொடுத்தது கடைசியில் தான் புரியும்.
இப்படியே நாள் முழுவதும் வேட்டை நடத்தும் டுபாக்கூர்கள், ஒரிஜினல் செய்தியாளர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை. ஒரு டுபாக்கூர் இன்னொரு சக டுபாக்கூரை காட்டிக் கொடுக்க மாட்டார். அது தொழில் தர்மம். சக டுபாக்கூர் போலீசில் மாட்டிக் கொண்டால் அனைத்து டுபாக்கூர்களும் திரண்டு வர வேண்டும் என்பது அவர்கள் சங்கத்தில் எழுதப்படாத விதி. அவர்களின் பின்னணியை தோண்டித்துருவினால் இன்னும் பல சுவாரஸ்யங்கள் தெரியவரும். ரியல் எஸ்டேட் புரோக்கர், பஸ்ஸ்டாண்டில் கர்ச்சீப் விற்பவர், கொய்யாப்பழ வியாபாரியெல்லாம் பிரஸ் ரிப்போர்ட்டர் என்று திரிந்து கொண்டிருப்பது பலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கும். அவர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூட இருப்பர். இப்படிப்பட்ட ஆசாமிகளிடம் செய்தியை கொடுத்து விட்டு, ‘எந்த பேப்பர்காரனும் போடவில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பர்கள் நிறையப்பேர் உண்டு. ஆகவே மகாஜனங்களே, பேனா பிடிக்கும் எல்லோரும் செய்தியாளர் அல்ல; மைக் கேமிரா வைத்திருப்பவர் எல்லாம் டிவி, பத்திரிகை ஊழியரும் அல்ல. பணம் கொடுப்பதை எந்த முன்னணி பத்திரிகையும் ஆதரிப்பதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். டுபாக்கூர்கள் தூணிலும் இருப்பர்; துரும்பிலும் இருப்பர் என்பதை அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

தமிழ் கூறும் நல்லுலகில் தவிர்க்க முடியாத வார்த்தைப் பிரயோகமாக மாறி விட்டது, ‘டுபாக்கூர்’. ஆள் முதல் பொருள் வரையிலும், இயற்கை, செயற்கை, தன்மை, முன்னிலை, படர்க்கை என அனைத்து சூழ்நிலைகளிலும், பயன்படுத்தும் வகையில் சேர்ந்து விட்ட அற்புதம். அதை மக்கள் மத்தியில் புழங்கச்செய்த பெருமை, கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு ஆகியோரையே சாரும். இத்தகு பெருமை வாய்ந்த டுபாக்கூரில் பல வகை உண்டு. இது தேர்தல் காலம் என்பதால், நாம் அரசியலுடன் இணைந்த டுபாக்கூர்களை பற்றி விவாதிப்பது பொருத்தமாக இருக்கும்.
ஒரு மாநிலத்தில் செல்வாக்குடன் இருக்கும் கட்சி, அந்த மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுவது வாடிக்கை. அதன் அண்டை மாநிலங்களில் போட்டியிடுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். தங்கள் மாநில மக்கள், பிழைப்புக்காக சென்ற இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருந்தால், அங்கு போட்டியிடுவதைக்கூட சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பிலும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும், பிஜூ ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் சார்பிலும் தமிழகத்தில் வேட்பாளர்கள் களம் இறங்கினால் என்ன அர்த்தம்? இவர்கள், டுபாக்கூர் வேட்பாளர்கள், போட்டியிடுவதே ஏதோ டுபாக்கூர் வேலை செய்வதற்கு மட்டுமே என்று அர்த்தம்.
இத்தகைய டுபாக்கூர்கள், பெரும்பாலும் முதல் ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். தாங்கள் ஏழை எளியோரை பிரதிநிதித்துவம் செய்வதாகவும், முப்பதாண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பதாகவும், ஓட்டை பைக்கும், பழைய கறுப்பு வெள்ளை டிவி மட்டுமே சொத்துக்களாக இருப்பதாகவும் பீலா விடுவர்.
முக்கியமான மேட்டரை கடைசியில் எடுத்து விடுவர். ‘எனக்காக பிரசாரம் செய்வதற்காக எங்கள் கட்சி தலைவர் சிபு சோரன் தமிழகம் வரப்போகிறார்’ என்பர். மம்தா பானர்ஜி, அஜீத் சிங் கட்சிக்காரர்களும் அப்படியே அள்ளி விடுவர். முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் செய்தி போடாமல் இருக்க முடியுமா? எப்படியும் எல்லா பேப்பர்களிலும் செய்தி வந்து விடும். அப்புறமென்ன, டுபாக்கூர் வேட்பாளர் காட்டில் மழை தான்.
அவர் தேர்வு செய்திருக்கும் சின்னம், முன்னணி கட்சியின் சின்னம் போலவே இருந்து விட்டால், ஜாக்பாட் அடித்தது போலாகி விடும். வாபஸ் பெற ஒரு தொகை, வாபஸ் பெறாமல் இருக்க ஒரு தொகை, இவற்றில் எது அதிகமோ அதற்கு ஓகே சொல்லி விடுவார், டுபாக்கூர்.
சரி, இப்படி டுபாக்கூர் வேலை செய்வதற்கு, சுயேச்சையாக மனு தாக்கல் செய்வது தானே? ஏன் பிற மாநில கட்சிகளின் பெயரில் நிற்க வேண்டும்? அங்கேதான் சூட்சுமம் இருக்கிறது. சுயேச்சையாக மனு தாக்கல் செய்தால், ‘தனி நபர் தானே’ என்று, பிற கட்சிகளின் குண்டர்கள் எளிதில் கண்டறிந்து விடுவர். வாபஸ் பெறவில்லையெனில் நையப்புடைக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால், இப்படி பிற மாநிலக் கட்சிகளின் பெயரில் நிற்கும்போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்து விடுகிறது. ‘கட்சி தலைமைல முடிவு பண்ணீட்டாங்க’ என்று எங்கேயோ இருக்கும் சிபு சோரனையும், மம்தா பானர்ஜியையும் காட்டி பேரம் பேசலாம். ‘நம்ம மேல கைய வெச்சா, ஜார்க்கண்ட் சீப் மினிஸ்டரே போன் பண்ணிப் பேசுவாருல்ல’ என்று, ஏப்பை சாப்பைகளிடம் பீலாவும் விடலாம்.
வாபஸ் பேரம் படியவில்லை என்றாலும், பூத் ஏஜண்ட் போடுதல், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு ஏஜண்ட் போடுதல் ஆகியவற்றுக்கு, பெரிய கட்சிகளுக்கு உதவி புரிந்தும் பணம் பார்க்கலாம்.
எப்படியோ தேர்தல் முடிவதற்குள், ஒரு லம்ப் ஆன தொகையை தேற்றி விடுவர். தேர்தலில் கரை கண்ட டுபாக்கூர்கள், எப்படியும் பணம் சம்பாதிப்பர். தேர்தல் காலத்தில் அரசு அதிகாரிகளுடன் ஏற்படும் அறிமுகத்தை வைத்து, தேர்தலுக்குப் பிறகும் பணம் பார்க்கும் டுபாக்கூர் வேட்பாளர்களும் உண்டு.
தொடரும்…

dir=”ltr”><divவீதிக்கு வீதி போலீசாரையும், பறக்கும் படை அதிகாரிகளையும் நிறுத்தி, வாகன சோதனை நடத்துவது, ஆவணம் இல்லாத பணத்தை பறிமுதல் செய்வது, புடவை, வேட்டி, சட்டை, அம்மன் விளக்கு, கொலுசு, மூக்குத்திகளை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது , வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பவர்களை எச்சரிப்பது, முடிந்தால் பிடிப்பது என, தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருப்பது எல்லாமே வெட்டி வேலை என்றே தோன்றுகிறது.
ஆணைய உத்தரவுக்கு பயந்து யாரேனும், பணம் கொடுக்காமல் இருக்கிறார்களா? வாங்காமல் இருக்கிறார்களா? பணம் கொடுப்பதும், வாங்குவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆணையத்தின் ஆட்டம் எல்லாம், தேர்தல் முடியும் வரை தான் என்று, எல்லோருக்கும் தெரியும். அதனால் தான், அதன் உத்தரவுகளை டிவி சேனல்கள் முதல், அரசியல் கட்சிகள், போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் வரை, யாருமே பொருட்படுத்துவதில்லை.
தேர்தல் ஆணையம் பிடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம்’ என்று, முன்பு விஜயகாந்த் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும் சாெல்ல ஆரம்பித்து விட்டார். அதையும் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, பணம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்; பொருள் கொடுப்பவர் கொடுக்கலாம்; வாங்க விருப்பம் உள்ளவர்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று, தானே முன்வந்து அறிவித்து விடுவது தான், ஆணையத்துக்கு கொஞ்சமாவது மரியாதையாக இருக்கும். ‛கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுப்பதே வரும்காலங்களில் சரியான முடிவாக இருக்கும். ஏதோ, அதன் மூலம் நமக்கும் கொஞ்சம் பலன் கிடைத்தது போலவும் இருக்கும்.

காட்டில் இயற்கை சூழலில் வளரும் விலங்குகளுக்கும், சர்க்கஸ் கூடாரங்களில் வளர்ந்து பழகிய விலங்குகளுக்கும், அடிப்படையில் சில வேற்றுமைகள் உண்டு. முன்னது, தன் இரையை தானே தேடிக்கொள்ளும் இயல்புடன் இருக்கும். பின்னது, யாராவது கொண்டு வந்து கறித்துண்டுகளை போடுவார்களா என காத்துக்கொண்டிருக்கும். கூட்டணி அரசியலுக்கு பழகிய அரசியல் கட்சிகள், சர்க்கஸ் விலங்குகளைப்போல. தங்கள் சுயம் இழந்து, பிரம்படிக்கும், சவுக்கடிக்கும் பயந்து வாழும் அரசியல் விலங்குகள் அவர்கள். வேட்டையாடி உண்ணும் இயற்கையை மறந்து விட்ட விலங்கின் இழிநிலை அவர்களை பீடித்திருக்கிறது. நோய் முற்றிய நிலையில் எப்படியேனும் உயிர் பிழைத்திருக்க வேண்டி, கசப்பு மருந்தை கண்களை மூடிக்கொண்டு குடிப்பவரைப்போல, காத்திருந்தும் கறித்துண்டு கிடைக்காமல் போன கிழட்டு சிங்கங்கள் சில, இத்தேர்தலில் வேட்டைக்கு களம் புகுந்திருக்கின்றன. காங்கிரஸ் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கட்சிப்பெயரில் அழைக்கப்படும் இவர்கள், கூட்டணிப்புதைகுழியில் தானே தேடிச்சென்று விழுந்த வீரர்கள். மீட்பர்கள் யாருமில்லை என்பதெல்லாம் அந்த மரமண்டைகளுக்கு மெல்ல மெல்லத்தான் உறைத்திருக்கிறது. இப்போது வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. காட்டின் இயல்பை மறந்த சர்க்கஸ் சிங்கங்கள், ‘நானும் ரவுடி தான்’ என்று கூவிக் கொண்டு திரிகின்றன. ‘கறித்துண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தயிர் சாதமாவது தேறும்’ என்ற எண்ணம் கூட அவற்றின் மனதில் இருக்கக்கூடும். பாவம், கிழட்டு சிங்கங்கள்!

 
 
திருப்பூர் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கம்யூனிஸ்டுகள் சார்பில் சுப்பராயன். ஆனாலும் திமுக, அதிமுக இடையில் தான் போட்டி நிலவுகிறது. 
அதிமுக வேட்பாளர் பெண், நகராட்சி தலைவர் வேறு. திமுக வேட்பாளர் அரசியலுக்கு தொடர்பில்லாத டாக்டர். தேமுதிக சார்பில் தினேஷ் குமார் கடும் போட்டியை ஏற்படுத்தினாலும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.  காங்கிரஸ், கம்யூ வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுக்களை பிளந்து விடுவர். 
‘திருப்பூர் எங்கள் கோட்டை’ என்று பீற்றிக்கொள்ளும் செஞ்சட்டையினருக்கும், காவிக்கட்சியினருக்கும் என்ன கிடைக்கும், எத்தனை கிடைக்கும் என்பது மே 16ல் தெரிந்து விடும்.
 ***
பொள்ளாச்சி தொகுதியில் மும்முனைப்போட்டி. அதிமுக சார்பில் புதுமுகம் மகேந்திரன், அம்மாவை நம்பி இரட்டை இலையை நம்பி களம் இறங்கியுள்ளார். திமுக சார்பில் மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, தன் பணபலத்தை நம்பி நிற்கிறார். 
தாமரை சின்னத்தில் நிற்கும் கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன், ஜாதி, கூட்டணி பலத்தை நம்பி இருக்கிறார். எனக்கும் பொள்ளாச்சி தொகுதியில் தான் ஓட்டு. தாழ்த்தப்பட்டவர்கள் கூட தாமரைக்கு ஓட்டு கேட்டு வீட்டுக்கு வந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. 
இந்த முறையும் ஜெயிக்காவிட்டால் ஈஸ்வரன் கட்சியை கலைத்து விட்டு தொழிலை பார்க்க போய்விடலாம். ஆனால் பொள்ளாச்சியில் வெற்றிக்கனி அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது என்றே தோன்றுகிறது.
 ***
கோவை தொகுதியில் ஐந்து முனைப் போட்டி. காங்கிரஸ் சார்பில் மாஜி அமைச்சர் பிரபு, மார்க்சிஸ்ட் சார்பில் சிட்டிங் எம்பி நடராஜன் களத்தில் இருந்தாலும் முக்கிய போட்டி அதிமுகவின் நாகராஜூவுக்கும் பாஜவின் ராதாகிருஷ்ணனுக்கும் தான். 
திமுக வேட்பாளர் கணேஷ் குமாரும் களத்தில் இருக்கிறார். சொதப்பலான தேர்வு. ஆம் ஆத்மி, பெயரளவுக்கு போட்டியிடுகிறது. மோடி, ஜெ., கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வாசன் என எல்லா தலைவர்களும் வந்து சென்று விட்டனர். புதுமுக வாக்காளர்கள் பலரும் இம்முறை பாஜவுக்கு ஓட்டளிக்க விரும்புவதை உணர முடிகிறது. 
ஒருவேளை பாஜ வெற்றி பெற்றால் அதற்கு மோடி அலை தான் காரணமாக இருக்கும். சில ஆயிரம் ஓட்டுகளில் தோற்றுப்போனால், அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சம்பாதித்து வைத்திருக்கும் வெறுப்பும், வேட்பாளர் தேர்வில் சறுக்கிய பாஜ தலைமையும் தான் காரணமாக இருக்கக்கூடும்.
 ***

தேர்தல் 1 

Posted: 21/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , , , , ,
 
 

அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு எல்லா காலங்களிலும் சரியாக இருந்து விடாது. இரண்டும் இரண்டும் சேர்ந்து இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ ஆகிவிடவும் வாய்ப்புண்டு. 

நான்கு என்ற கணக்கு சரியென்றால், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடும். ஆனால் அந்தக்கூட்டணியின் தலைவர்களே அதை ஏற்க மாட்டார்கள். ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் ஓட்டுகள் மாறி விழ வாய்ப்பில்லை. ஆனால் இக்கட்சியினர் ஓட்டு பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. கூட்டணியால் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் பயன் மிகக்குறைவு என்று கருதித்தான் டாக்டர் ராமதாஸ், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.  
வழக்கமாக வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் கட்சியில் இம்முறை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம், கட்சிக்கு கணக்கு காட்டவே பிரசாரம் என்பதாக தகவல். 
பாஜவுக்கு கன்னியாகுமரியும் சிவகங்கையும் வாய்ப்புள்ள தொகுதிகள். கோவை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பாமகவுக்கு தர்மபுரி தேறினாலே ஜாக்பாட் அடித்தது போல எண்ணிக்கொள்ளலாம். வைகோவுக்கு இந்த முறை இரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கல்வித்தந்தைகள் தேற வாய்ப்பில்லை. 
அதிமுகவுக்கு மைனஸ் நிறைய இருந்தாலும் ஓட்டு பிரிவதால் லாபம் கிடைக்கும். திமுகவுக்கு, முதலுக்கு மோசம் வராது போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இருப்பதை காண்பிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் முக்கிய அம்சம், முதலிடம், இரண்டாமிடத்தை மட்டுமே சந்தித்து வந்த திமுகவும், அதிமுகவும் மூன்றாமிடம், நான்காமிடத்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது தான். 
ரொம்பவும் மொக்கையான பிரசாரம் அம்மாவுடையது எனில், சுவாரஸ்யமான பிரசாரம் விஜயகாந்துடையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 
”நான் என்ன பேசீட்டிருந்தேன், மறந்து போச்சு,” என்பதிலிருந்து, வானதி சீனிவாசனை, ”யாரு இவங்க எங்கயோ பாத்த மாதிரி இருக்குதேன்னு கேட்டேன்,” என மைக்கில் சொன்னது, ”உங்கள் வாக்காளர் யார்” என கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்டது என, கேப்டன் காமெடியில் சக்கைப்போடு போடுகிறார்.
 
 

தமிழக அரசியல்வாதிகளில் அற்புதமான தமிழ் உச்சரிப்பும், மெச்சத்தகுந்த
மொழிநடையும் கொண்டவர் மத்திய அமைச்சர் சிதம்பரம். அவரது ஆங்கிலத் திறமும் அப்படித்தான். தான் சொல்லவரும் கருத்தை, கச்சிதமான வார்த்தைகளில் வடிக்கும் அவரது அழகே தனி.
தான் போட்டியிடாமல், தன் மகனை தேர்தல் களத்தில் அவர் இறக்கியபோது, குரங்கு குட்டியை விட்டு குளத்தை ஆழம் பார்க்கும் என்பார்களே, அதுதான் நினைவுக்கு வந்தது. புறமுதுகிட்டு ஓடுதல் என்பதற்கு இந்தாண்டின் மிகச்சிறந்த உதாரணம் இதுதான்.
செட்டிநாட்டுப் பெருமை, ஹார்வார்டு படிப்பு, சுப்ரீம் கோர்ட் வக்கீல், நிதியமைச்சர் பதவி எல்லாம் இருந்து என்ன பயன்?
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே, அது போலத்தான் இந்த தேர்தல் சிதம்பரத்துக்கு அமைந்து விட்டது. பாவம். அவரை ‘ரீகவுன்டிங் மினிஸ்டர்’ என்று தொடர்ந்து கிண்டல் செய்வதன் மூலம் நிதானம் இழக்கச்செய்யும் முயற்சி ஏறக்குறைய வெற்றி அடைந்து விட்டது என்றே கூற வேண்டும்.
பட்ஜெட் உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டுவது சிதம்பரத்தின் வழக்கம். அவருக்குச் சொல்லவும் நம்மிடம் சில குறட்பாக்கள் இருக்கின்றன.
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை.

முன் ஜென்ம வினை!

Posted: 19/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , ,

பல தமிழ் சினிமாக்களில் கண்ட காட்சி தான் இது. ஹீரோ, எப்போதோ செய்த தவறுக்காக, திருந்தி நல்லவனாக வாழும் காலத்தில் போலீசாரால் கைது செய்யப்படுவான். செல்வகணபதி விவகாரத்தில் அதுதான் நடந்திருக்கிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருந்த செல்வகணபதி, கட்சித்தலைமையின் புறக்கணிப்பால் மனம் உடைந்து தி.மு.க.,வில் சேர்ந்தார். அங்கு அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. கோஷ்டிப்பூசல்களை கடந்து தலைமையிடம் நற்பெயர் பெற்று எம்.பி., பதவியும் பெற்றார். என்ன பயன்? முன் ஜென்ம வினை, பதவியை காலி செய்து விட்டது.

வணக்கம், பதிவுலக சொந்தங்களே!
தேர்தல் காலம்; அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் என்பதால் வலைப்பக்கம் வர முடியவில்லை. தொகுதிப்பக்கம் வராத எம்.பி., எம்.எல்.ஏ.,க்களையே மன்னித்து, மாலை மரியாதை செய்தனுப்பும் பாரம்பரியம் கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், என்னையும் மகிழ்வுடன் ஏற்கும் என்று மனதார நம்புகிறேன். பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அரசியல் தவிர்த்த பதிவுகள் போடுவது தெய்வ குற்றம் என்றஞ்சி, என் திருப்பணியை தொடர்கின்றேன். நன்றி!

குறிப்பு: நான், மோடி, ராகுல் ஆதரவாளர் அல்ல; அம்மா கட்சியும் அல்ல; அய்யன் வள்ளுவர் கட்சியும் அல்ல.
நடுநிலை என்றெல்லாம் பொய் சொல்ல விருப்பமில்லாத விமர்சகன் என்றே நீங்கள் கருதும்படி வேண்டுகிறேன்.