ஜனவரி, 2014 க்கான தொகுப்பு

பண்டிகை நாட்களில், மாட்டுச்சாணத்துக்கு வரும் கிராக்கி இருக்கிறதே! அப்பப்பா…! கொஞ்சம் நீள அகலமாய் வீடு வாசலும், நீட்டி முழக்குபவராய் வீட்டில் மனைவியும்  வாய்த்தவர்பாடு திண்டாட்டம் தான்! 
‘எப்படியாவது சாணம் கொண்டு வந்தே தீர வேண்டும்’ என்று மனைவி போடும் உத்தரவை உச்சநீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவாகக் கருதி, கணவன்மார் கையில் பக்கெட் உடன் கிளம்புவர். ஆனால் கிடைக்க வேண்டுமே! 
ஊருக்குள் மாடு வைத்திருப்பவர் வீடுகளில் எல்லாம், ரேஷன் கடையில் சீமை எண்ணெய் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர் போல், வரிசையில் குண்டாக்களும், பக்கெட்டுகளும் காத்திருக்கின்றன. 
‘இந்த முறை சீனியாரிட்டி முறையை ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக பாலோ அப் செய்வதாகவும், நம் வரிசைக்கு நாளை மறுநாள் சாயந்திரம் மாடு சாணம் போடும்போது தான் கிடைக்குமாம்’ என்றும், தயங்கித் தயங்கி சொன்னால், எந்த வீட்டில் மனைவி ‘சரி போகட்டும்’ என்று சொல்வார்? 
‘எனக்குத்தெரியாது, சாணியோட தான் வரணும்’ என்று சொல்லும் மனைவியரே  நாட்டில் அதிகம். விளைவு, கால்நடை வைத்திருக்கும் சிலர், மாட்டுச்சாணத்தை தராசு எடைக்கல் வைத்து எடை போட்டுப்பார்க்காத குறையாக, விற்க ஆரம்பித்து விட்டனர். 
‘குட்டு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விலை வைத்து விற்றாலும் வாங்கத்தயார்’ என்கின்றனர், மக்கள். கால்நடைகள் குறைந்து விட்டன. ‘சாணம் தானே, போனால் போகட்டும்’ என்று இலவசமாக விட்டவர்களும் எண்ணிக்கையில் குறைந்து விட்டனர் என்பது தான் இந்த நிலைமைக்கு காரணம்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், சாணத்தை இலவசமாக தருபவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டே தீர வேண்டும். ‘அவர்களுக்காகவாவது ஆண்டுக்கொருமழை அதிகமாகப் பெய்யட்டும்’ என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே! 
ஒரு காலத்தில், ரோட்டிலும், மேய்ச்சல் நிலங்களிலும் கிடக்கும் சாணத்தை எடுத்து வந்து, எரு வரட்டி தட்டி விற்று குடும்பத்தை வளர்த்தவர்கள் உண்டு. அப்படியெல்லாம் கூட நடந்தது என்று யாரேனும் சொன்னால் எதிர்கால தலைமுறைகள் நம்ப மறுக்கவும் கூடும். என்ன செய்வது? 
*
குறிப்பு: இது சொந்த அனுபவம் என்று யாரும் நினைத்திருந்தால், அது சரியல்ல! ‘இரவல் அனுபவமோ’ என்று எண்ணியிருந்தால், அது தவறுமல்ல!
அலுவலகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது காய்கறி விற்பனை பற்றி பேச்சு வந்தது. ‘காய்கறிகளை வீட்டுக்கு வாங்கிச் சென்று சுத்தம் செய்து, நறுக்கி, சமையல் செய்யும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்களுக்கு வசதியாக, நறுக்கிய காய்கறி, நம் ஊரில் விற்கின்றனர்.அதையும், நம்மாட்கள் போட்டி போட்டு வாங்கிச்செல்கின்றனர்’ என்றார்,  நண்பர். 
‘சென்னையில் குழம்பு மட்டும் தயார் செய்து விற்கின்றனர். அதுவும் நம் ஊருக்கு விரைவில் வந்து விடும்’ என்றார். ‘இது அவசர உலகம். ரெடிமேட் ஆக எது கிடைத்தாலும் மக்கள் வாங்கத் தயார் ஆகி விட்டனர்’ என்றார், நண்பர். அது, உண்மை தான். 
பொங்கலுக்கு முதல் நாள் காப்பு கட்டுதல் தமிழர் மரபு. மாவிலை, வேப்பிலை, ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றைக் கொண்டு காப்பு கட்டினால், துஷ்ட சக்திகள் வீட்டை நெருங்காது என்பது ஐதீகம்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வரை காப்பு கட்டுவதற்குரிய இலை, தழைகளை விலை கொடுத்து வாங்குவோர் எவரும் இல்லை. விற்கும் எண்ணமும் எவருக்கும் வரவில்லை. தோட்டம், காடு, பள்ளம், படுகையில் தேடி காப்பு கட்டுவதற்கான இலை தழைகளை,ஆண்கள் சேகரித்து வருவர்.
ஆண்கள் இல்லாத வீடுகளுக்கு, உறவுக்காரர்கள் வந்து காப்பு கட்டி விடுவர். இதுதான் அப்போதைய நடைமுறை. ஆனால், இப்போது நடப்பதென்ன? காப்பு கட்டும் நாளில்  இலை,தழைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. வீதிக்கு வீதி, பொது இடங்களில், காடு மேடுகளில் எல்லாம் இருக்கும் வேப்ப மரத்துக்கு அவ்வளவு கிராக்கி.
‘வேப்பிலை கொத்து ஐந்து ரூபாய்’ என்பதை மறு பேச்சு பேசாமல் வாங்கிச்செல்கின்றனர், மக்கள். இலவசமாகவே ஊருக்குள் கிடைத்தாலும், அதை தேடிச்சென்று சேகரிக்கவோ, மரம் ஏறி பறிக்கவோ யாரும் தயாரில்லை. கேட்கும் காசைக் கொடுத்து வியாபாரியிடம் வாங்கிச் செல்லவே பலரும் விரும்புகின்றனர். இந்த அவசரத்தை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் நாட்டில் ஆயிரமாயிரம் பேர் காத்துக்கிடக்கின்றனரே!
காப்பு கட்டும் தினமான திங்கட்கிழமை அதிகாலை முதலே ஆரம்பமாகி விட்டது, சூப்பர் வியாபாரம்! சாலையோரங்களில் எல்லாம் சைக்கிள்களிலும், கூடைகளிலும் வைத்து விற்பனை கனஜோராக நடந்தது. வேப்பிலைக்கொத்து ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை,ஆவாரம் பூ, பூளைப்பூ, மாவிலை எல்லாம் சேர்ந்த கட்டு, பத்து, இருபது, முப்பது என்று கொத்துக்கு தகுந்தபடி விலை.
வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, பொது இடங்களில் கூட வளர்ந்து நிற்கும் வேப்ப மரத்தின் இலையைப் பறித்து, கட்டுக்கட்டினால், அதையும் விற்று காசாக்க முடியும் என்று காட்டி விட்டனர், தமிழர்கள்! என்ன செய்வது? அவசரஉலகம்; ஐயோ பாவம்! 
இந்த வருசமும், மெட்ராஸ்ல புக்கு கண்காட்சி ஆரம்பிச்சுட்டாங்க. ஏதோ பொருட்காட்சிக்கு போற மாதிரி மக்களும் கூட்டங்கூட்டமா போறாங்க!
அஞ்சு லட்சம் தலைப்பு, பத்து லட்சம் தலைப்புன்னு ஆளாளுக்கு பீதி கெளப்புறாங்க. 
‘எல்லாரும் புக்கு நெறய வாங்கணும், வாசிப்பு பழக்கம் அதிகரிக்கணும்’னு அள்ளி விடுறாங்க. இந்தக்கூட்டத்துல எழுத்தாளர்களுக்குள்ள எந்த  வித்தியாசமும் காணோம்.
சங்க எலக்கியம், சமகால எலக்கியம், சாக்கடை எலக்கியம்னு எல்லாமே ஒரே ஜோதில ஐக்கியம் ஆயிடுது. தேவாரம், திருப்புகழ் விக்குற கடையிலயே, எலக்கியம்னு சொல்லி கண்ட கருமத்தையும் விக்குறாங்க. அவங்களப் பொறுத்த வரைக்கும் இது ஒரு ஏவாரம்.
அதுவுமில்லாம கண்காட்சில, புக்கு வெலை தாறுமாறா ஏறிப்போச்சுன்னு ஒரே புகாரா இருக்கு. அட்டைய கொஞ்சம் கெட்டியாவோ, பளபளன்னோ போட்டு 500 ரூவா, 1000 ரூவான்னு தீட்டறாங்க.  இதுல, 2 லட்சம் சேல்ஸ்னு ஒருத்தர் ஸ்டேட்டஸ் வேற.
அதுலயும், இந்த சின்னப்பசங்களுக்கான புக்கெல்லாம் அநியாய வெலை. எப்புடியும் பெத்தவங்க வாங்கித் தொலைப்பாங்கன்னு தானே எண்ணம்!  மொத்தத்துல புக்கு கண்காட்சிங்குறது, ஒரு நூதனமான கொள்ளை.
புக்கு வாங்குறவுங்களுக்கு, அறிவாளிங்குற மெதப்பு தனக்குத்தானே வாரதாலயும், தலைக்கு பின்னால ஆறு இஞ்சி விட்டத்துல, தானே ஒளிவட்டம் கெளம்புறதாலயும்,  பணத்த பறிகொடுத்த யாருமே,   அதப்பத்தி பெருசா எடுத்துக்குறதில்ல. 
மத்த மேட்டர்ல எல்லாம் ஒருத்தர ஒருத்தர் கால் வாரி கவுத்து, மண்ண வாரித்தூத்துற தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைங்களும், அரசியல் விமர்சகர்களும், சர்வதேச சிந்தனையாளர்களும், புக்கு கண்காட்சிய பொறுத்தவரைக்கும் அமுக்கித்தான் வாசிப்பாங்க! 
காரணம், புக்கு ஏவாரம் தான். கண்காட்சிங்குற பேர்ல நடக்குற பகல் கொள்ளைல ஒரு பங்கு இருக்குறது தான் அவங்க அமைதிக்கு முக்கிய காரணம். 
ஆங்கில- தமிழ் அகராதிங்குற பேர்ல நெறய குப்பை இருக்குது. வெவரம் தெரியாம பல நூறு பணம் குடுத்து நெறயப்பேரு குப்பைய வாங்கீட்டுப்போறாங்க. அஞ்சு லட்சம், பத்து லட்சம்னு குவிஞ்சு கெடக்குற குப்பையில நல்ல புக்கு கண்டுபிடிச்சு வாங்குறது அப்பாவிகளுக்கு சாத்தியம் தானா? மக்களே சிந்திச்சுப்பாருங்க.
வானத்துக்கு மேலயும் சரி, கீழயும் சரி எதப்பத்தியும் கருத்து சொல்ற எழுத்தாளர்கள் ஒருத்தர் கூட, இந்தக் கொள்ளையப்பத்தி வாயே தெறக்கலியேங்குறது என்னோட வருத்தம். 
பதிப்பகத்துக்காரன் கோச்சுக்குவானேங்குற பயமா இருக்குமோ? இல்ல, ராயல்டி வாங்குறதுல  பிரச்னை வந்துரும்னு கவலையாருக்குமோ? 
(அப்புறம், புக்கு வெலைக்கு லேபர் காஸ்ட் எல்லாம் காரணம் சொல்றாங்க. எழுத மட்டும் தெரிஞ்சாலே  எழுத்தாளர்னா புக்கு வெல ஏறத்தான செய்யும்? 
அந்தக்காலத்துல நடிக்க வாரவுங்க பாட்டு, டேன்ஸ், கம்புச்சண்டை எல்லாம் கத்துக்கிட்டு வந்தாப்புல, எழுதுறவுங்களும், இன்டிசைன், கோரல்,  போட்டோஷாப் குவார்க் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். அட்டை முதல் பக்கம் வரைக்கும் அவங்களே ரெடி பண்ணனும். அப்பத்தான் லேபர் காஸ்ட் கொறயும்)  
‘மக்கள் கூட்டம் கூட்டமா வரத்தான செய்யுறாங்க, படிச்சுப்பாத்து தான வாங்குறாங்க’ அப்டின்னு யாராச்சும் கேக்கலாம்! 
‘அய்யா, மக்கள் கூட்டத்துக்கும், தரத்துக்கும் சம்மந்தமே இல்ல.  நாட்டுல நடுத்தர வர்க்கம் பெருகிப்போச்சு. பொழுதான வீட்டுல இருந்து கெளம்பிப்போகணும், பயன்படுதோ இல்லையோ, எதையாச்சும் வாங்கணும்னு எண்ணம் கொண்டவங்கஅதிகமாயிட்டாங்க.
அவுங்க அன்னாடும் கூட, கண்காட்சிக்கு வருவாங்க. புக்கும் வாங்குவாங்க. அதெல்லாம், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்ககிட்ட பெரும பேச மட்டும் தான்! படிப்பாங்களான்னா, சந்தேகம் தான்! 
இப்புடிப்பட்ட வாசகர்களோட வாங்கும் தெறமைய குறி வெச்சுத்தான் புக்கு வெலய தாறுமாறா ஏத்தி ஒவ்வொரு வருசமும் கன கச்சிதமா கூட்டுக்கொள்ளை நடக்குது.
இதுனால பாதிக்கப்படுறது யார்னு பாத்தா, இலக்கிய ஆர்வம் இருக்குற, ஆன்மிகத்துல ஈடுபாடு இருக்குறவுங்க, அகராதி வாங்கியே தீரணும்னு அடம் புடிக்குற பசங்களோட அப்பா, அம்மா இவுங்க தான்! வேற வழியில்லாம பொலம்பிட்டே புக்கு வாங்கீட்டு போறாங்க. 
வெளிநாட்டுல இருந்தும் கூட, எழுத்தாளர்களும் புக் வாங்குறவுங்களும், வாராங்களாம்! தாராளாமா வரட்டும். இவுங்களும் தாராளமா விக்கட்டும். 
ஆனா, மொழிய வளர்க்குறோம், அறிவக் குடுக்கறோம், ஆளாக்குறோம் அழகுபாக்குறோம்னு பீத்திக்குறத ஏத்துக்கவே முடியாது. இவுங்க செய்யுறது வியாபாரம், பொழுதுபோக்கு, கொள்ளையோ கொள்ளை! அதுல என்ன பெரும வேண்டிக்கெடக்குதுங்குறேன்?
 
***
நண்பர்களே, புத்தக கண்காட்சி தொடர்பான மாற்றுக்கருத்து இது. எதிர்க்கருத்துக்களையும் மனமுவந்து வரவேற்கிறேன். நன்றி! 
 
 

 கழுதைக்கு தெரியுமா, கற்பூர வாசனை என்பதும், ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பதும், ‘சோம்பேறிக்கழுதை’ என்பதும், சமகால தமிழர்களின் நாவில் அன்றாடம் புழங்கும்  வசவுகளில் சில. 

இத்தகைய ‘சிறப்பு’க்குரிய கழுதைகள், இன்று ஏறக்குறைய காணாமலே போய் விட்டன. அவற்றைப்பார்த்தே இராத, எப்படியிருக்கும் என்றே அறியாத தலைமுறையும் கூட வந்து விட்டது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரிடம், ‘கழுதையை பார்த்ததுண்டா’ என்று கேட்டுப்பாருங்கள். ‘ஆம்’ என்பவர் சதவீதம் குறைவாகவே இருக்கும்.புறத்தோற்றமே மதிக்கப்பெறும் இன்றைய உலகில், கழுதைகள் காணாமல் போனதில் ஆச்சர்யமில்லை தான்.                                                                                                           
நாட்டில் நிறையப்பேர் கவிதை எழுத ஆரம்பித்து விட்டதை துப்புத்துலக்கி அறிந்து கொண்ட கழுதைகள், ‘இனியும் இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என்றெண்ணி தப்பித்து தூர தேசத்துக்கு ஓடி விட்டவிட்டனவோ  என்று கூட எனக்கு சந்தேகம்.
ஒரு காலத்தில், அங்கிங்கெனாதபடி நகரம், கிராமம், காடு மேடுகளில் எல்லாம் சுற்றித்திரிந்த கழுதைக்கூட்டம், இப்போது  மொத்தமாய் காணாமல் போயிருப்பதை பார்த்தால், உப்புமா கவிஞரின் சந்தேகத்தில் உள்ளபடியே நியாயம் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
எங்கள் ஊரில், என் பள்ளிப்பருவத்தில்  கழுதைகள், கூட்டம் கூட்டமாக திரிவதை கண்டிருக்கிறேன். துணி மூட்டைகளை முதுகில் ஏற்றி ஆற்றுக்கு அழைத்துச்செல்வர். ஒவ்வொரு டோபியின் குடும்பத்துக்கும் நான்கைந்து கழுதைகளாவது இருக்கும்.
இப்போதும் அந்த டோபி குடும்பத்தினர் ஊரில் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் கழுதைகள் இல்லை. என்ன ஆயின, எங்கே போயின, சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க மனம் ஒப்பவில்லை.
விசாரித்தவரையில், கழுதைகளின் உரிமையாளர்களே அவற்றை சாகடித்து விட்டனர் அல்லது சாக விட்டு விட்டனர். 
விளைவு, சுற்று வட்டாரப்பகுதிகளில் எங்குமே கழுதைகளைக் காணாத நிலை ஏற்பட்டு விட்டது. கழுதைகளையும் மிருகக்காட்சி சாலையில் சென்று பார்த்துத்தான் எதிர்கால தலைமுறைகள் அறிந்து கொள்ளுமோ என்னவோ?
உணவுச்சங்கிலியில் கழுதைகளுக்கும் பங்கு இருக்கிறதா  எனத்தெரியவில்லை.அவை கவனிப்பாரின்றி போனதற்கு, அழகியல் அம்சங்கள் பொருந்தி வராததே முக்கியக்காரணம். 
கழுதைகள் சலியா உழைப்பாளிகள். பராமரிப்பு அவசியமில்லை. பாலைவனத்திலும், கரடு முரடான மலைப்பகுதிகளிலும் பல மணி நேரம் பாரம் சுமக்கும் திறன் கொண்டவை. அவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. ‘ஈக்கஸ் அசினஸ்’ என்ற விலங்கியல் பெயர் கொண்ட கழுதைகள், பிழைப்புக்காக புலம் பெயர்ந்தவர்களால் இந்திய நிலப்பரப்புக்கு வந்திருக்கக்கூடும் என்பது கூகுளார் தேடி வழங்கிய கருத்து. 
தானாக இறந்தவை, விஷம் வைத்து கொல்லப்பட்டவை போக, மிச்சம் மீதியாக இருக்கும் கழுதைகளும் பால் உற்பத்திக்கு பழகி  விட்டன. 
‘வயிற்று வலி, தலை வலி, சளி, காய்ச்சல் சரும நோய்கள், அல்சர், கேன்சர், எய்ட்ஸ் எல்லாம் தீர்க்கும்’ என்று ஊருக்குள் கூவிக்கூவி விற்கின்றனர், கழுதைப்பால் வியாபாரிகள். இப்போதைய மார்க்கெட் விவரம் படி 100 ரூபாய்.
எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று  தேடி அலைவோர், வாராது வந்த மாமணியாய், யாருக்கும் கிடைக்காத தேவலோகத்து அமிர்தம் கிடைத்து விட்டதாய், எண்ணி கழுதைப்பால் குடித்து பூரிக்கின்றனர். 
நிருபராக குப்பை கொட்டிய காலத்தில், எனக்கும் இது பற்றி சந்தேகம் வந்தது. குழந்தைவேல் என்ற பிரபல டாக்டரிடம் (நாமக்கல்)  கேட்டேன். அவர், ‘கழுதைப்பாலுக்கு நோய் நீக்கும் சக்தியெல்லாம் இல்லை. குடித்தால் வயிற்றுப்போக்கு தான் ஏற்படும்’ என்று அடித்துக்கூறி விட்டார்.
பாவம் தான்   எனத்தோன்றியது. யார் பாவம்?  பால் சுரக்கும் கழுதைகளா? கறக்கும் கழுதைகளா? குடிக்கும் கழுதைகளா? 
ஜம்மு காஷ்மீரில் லடாக் பிரதேசத்தில் கழுதைகள் காப்பகம் கூட இருக்கிறதாம்.
 ‘பாவப்பட்ட கழுதைகளை பரிதாபப்பட்டு பாதுகாக்கிறோம் ஸ்பான்சர் செய்யுங்கள்’ என கேட்கின்றனர். அதிகமில்லை. ஒரு கழுதைக்கு ஆண்டுக்கு 200 டாலர் தான் கட்டணமாம். காலம் காலமாக கல்லடியும் சொல்லடியும் பட்டாலும், கழுதைகள் தம்மை நம்பி இருப்பவரை வாழ்விக்கவே செய்கின்றன என்றுதான் தோன்றியது.
எனவே, வழியில் எங்கேனும் கழுதைகளைப் பார்க்க நேரிட்டால், பரிதாபம் காட்டுங்கள்! அது, உங்கள் ஊரின் கடைசி கழுதையாகவும் இருக்கக்கூடும்.
 
 

மழை வானில் மின்னல் ஒரு கவிதை!
மடை திறந்த வெள்ளம் ஒரு கவிதை!
மயிலொன்று நின்றாலே கவிதை!
மான் கூட்டம் நடந்தாலும் கவிதை!

புல்வெளியில் பனிப்போர்வை கவிதை!
பனி பொழியும் அதிகாலை கவிதை!
காலைத்துயில் எழுப்பும்
கதிரொளியும் கவிதை!

மண்ணில் மறைந்திருக்கும்
மரக்கூட்டம் கவிதை!
கண்ணில் ஒளிந்திருக்கும்
காதல் ஒரு கவிதை!

நல்ல காதலுக்காய் நாளும் காத்திருத்தல் கவிதை!
சொல்லத்தவித்திருக்கும் காதல் ஒரு கவிதை!
வெல்லமாய் இனித்திருக்கும் வாழ்வும் ஒரு கவிதை!
செல்லமாய் வந்து போகும் ஊடல் ஒரு கவிதை!
இரவு நிலவொளியில் உண்மை உரைத்திருத்தல் கவிதை!
உறவுக்கொட்டடியில் உண்டு களித்திருத்தல் கவிதை!

கூவும் குயிலோசை கவிதை!
கோவில் மணியோசை கவிதை!
காலைப்பனிப்பொழிவில் காலாற நடந்தபடி
கற்பனையில் மிதப்பதுவும் கவிதை!

கள்ளச்சிரிப்புடன்
பிள்ளை அடிப்பது கவிதை!
கண்களில் பாசம்; கருத்தினில் நேசம்
அன்னை அணைப்பதுவும் கவிதை!

பூச்சூடும் மழலை ஒரு கவிதை!
பொக்கை வாய் திறந்த சிரிப்பதுவும் கவிதை!
பூப்பூத்த மரமும் ஒரு கவிதை!
மணம் இல்லாப்பூவும் தான் கவிதை!

தனிமை ஒரு கவிதை!
தாயன்பும் கவிதை!
அழியாத நினைவுகளும் கவிதை!
அழுதழுத பிரிவுகளும் கவிதை!

மாலையும் கவிதை!
காலையும் கவிதை!
கண்ணில் காண்பதுவும் கவிதை!
காதில் கேட்பதுவும் கவிதை!

கை வலிக்க எழுதுவதா கவிதை?
கற்பனைக்கும் எட்டாத சித்திரத்தை
கண் கொண்டு எழுதுவதே கவிதை!

அடைமழையாய் பொழிந்தது மோனை!
அணை கடந்த வெள்ளமென எதுகை!
அடடா, எனக்கும் தான் வந்து விட்டதோ கவிதை!
அடைந்து விட்டேன் நானும், ஆனந்தம், பேருவகை!