மொய்யெனப்படுவது…!

Posted: 08/12/2013 in கட்டுரை

ஒவ்வொரு சுபமுகூர்த்த தினத்துக்கும், நான்கைந்து சுபநிகழ்ச்சிகளுக்காவது சென்று வருவது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது. அப்படி செல்லுமுன், ‘அவுங்க எத்தன வெச்சுருக்காங்கனு நம்மு முய் நோட்டுல பாரு’ என்று, குடும்பத்தார் கூடியோ, தனித்தனியாகவோ, தேடிப்பார்ப்பது வாடிக்கை.
‘அவர்கள் வைத்த மொய்யை விட குறைவாக வைத்து விட்டால், சொல்லிக்காட்டுவர்; மானம் போகும்’ என்ற முன்னெச்சரிக்கை ஒரு பக்கம். ‘அவனே100 தான் வெச்சுருக்கான், நாம எதுக்கு 500 வெச்சுட்டு, 101 வெச்சாப்போதும்’ என்கிற எண்ணம் மறுபக்கம். ஆகவே தான், காலண்டர் காகிதங்கள் மட்டுமின்றி, மொய் நோட்டுக்காகிதங்களும் ஆண்டு முழுவதும் புரட்டப்படுகின்றன.
பங்காளி முறை உறவினர் வீட்டு சுபகாரியங்களுக்கு செல்வதென்றால், இப்போதெல்லாம் நெஞ்சில் திகிலோடு தான் செல்ல வேண்டியிருக்கிறது. மொய் வைப்பதல்ல பிரச்னை; எழுதுவதே பிரச்னை. பங்காளி வீட்டு நிகழ்ச்சிகளில், அவரது பங்காளிகளே மொய் எழுதவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
இந்த இம்சையில் இருந்து தப்பிக்க, மண்டபத்தினுள் புகுந்த உடனேயே பதுங்கு குழிகளை தேடுவர், பங்காளிகள். சமையற்கூடமும், பந்தி பரிமாறும் கூடமும் தான், பெரும்பாலும் பதுங்குகுழிகளாக பயன்படுத்தப்படும். இந்த விஷயத்தில் முன்அனுபவம் இல்லாத படித்த பங்காளிகள் பாடு திண்டாட்டம் தான்.
சரியாக முதல் பந்தி முடியும் தருவாயில் மொய் எழுதும் திருப்பணியை தொடங்க உத்தரவு வரும். எழுதுவதற்கு ஒருவர், பணம் எண்ணி வாங்க ஒருவர் என குறைந்தபட்சம் இருவர் தேவை. இந்த இரு வேலைகளையும் திறம்படச்செய்ய வேண்டுமானால், வெறும் கலைக்கல்லூரி படிப்பெல்லாம் போதாது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் ராக்கெட்டை வழிநடத்தும் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
முதல் பந்தியில் சாப்பிட்ட அத்தனை பேரும். மொய் எழுதுபவரை சுற்றி நின்று, முற்றுகையிடுவர். ரூபாய் நோட்டை நீட்டிக்கொண்டே, தங்கள் பெயரையும் கூறுவர். யாரிடம் முதலில் பணம் வாங்குவது எனத்தெரியாமல் எழுதுபவர் குழம்புவார். அவர்களில் நெருங்கிய உறவினர் யாரேனும் இருந்து நீண்ட நேரம் காக்க வைத்து விட்டால், மொய் எழுதுபவரின் பரம்பரைக்கே ஏழேழு ஜென்மத்துக்கும் நீங்காப்பழி வந்து விடும்.
ஆகவே யாரும் முகம் சுளிக்காத வண்ணம், இன்முகம் காட்டிக் கொண்டே, அதிவிரைவாக, அதுவும் பிழையின்றி, அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவதே மொய் எழுதுவதற்கான அடிப்படைத்தகுதி.
பிழையுடனோ, அடித்தல் திருத்தலுமாகவோ எழுதி வைத்தால், ஒவ்வொரு முறை சந்தேகம் வரும்போதும், திருமண வீட்டுக்காரர், மொய் எழுதியவர் வீட்டுக்கு படையெடுப்பார். இது வாழ்நாள் முழுவதும் தொடரும் இம்சை என்பதால், ஏதோ டாக்டர், தனக்கும், நர்சுக்கும் மாத்திரமே புரியுமளவில் எழுதக்கூடிய மருந்துச்சீட்டு போல் எழுதி வைத்து விட்டு தப்பி தலைமறைவாக முடியாது என்பதையும் நினைவில் கொள்க.
இப்படியாகப்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள முடியாமல் தான், துப்பாக்கிப்பிரயோகம் நடக்கும் இடத்திலிருந்து தப்பியோடும் அப்பாவிக்கூட்டத்தினரைப்போல, பின்னங்கால் பிடரியில் அடிக்க பறந்தடித்து ஓடுவது பங்காளிகள் வழக்கம்.
தப்பிக்க வழியின்றி சிக்கிக்கொள்ளும் பங்காளிகள் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே! எண்ணெய் குடித்து விட்டு கழிவறைக்கதவை திறந்து வைத்து காத்திருப்பவர் போல, செய்யாத தவறுக்கு பெஞ்சு மேல் நிறுத்தப்பட்ட பள்ளிச்சிறுவனைப்போல, புலம்பலும் சிணுங்கலும் அஷ்டகோணலுமாய், பார்க்கவே பரிதாபமாய் இருக்கும். எழுத ஆரம்பிக்கும்போதே, ‘இன்னொரு கல்யாணத்துக்கும் போகணும்’ என்று இழுப்பார், பங்காளி
. ”அட கொஞ்ச நேரம் எழுதுப்பா, அதுக்குள்ள வேற ஆளப்புடிச்சறலாம்,” என்பார், மாட்டி விட்டவர். அவ்வளவு தான், அதன்பிறகு அந்தப்பக்கமே வரமாட்டார். மாட்டிக்கொண்டவரோ, ‘யாராவது ஆபத்பாந்தவன் வந்து நம்மை காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்துடனேயே எழுதிக்கொண்டிருப்பார். அவர் சாப்பிடப்போகவும் முடியாது; பாத்ரூம் போகவும் முடியாது.
இத்தகைய இக்கட்டில் சிக்கி தவிப்பவரிடம், ”உங்கு மாமன் பேர்ல 501 எழுது கண்ணு” என்று, ஒரு அக்கா பணத்தை நீட்டும். ‘உறவுக்காரர் சரி, பேர் தெரியாதே, கேட்டால் தப்பாகி விடுமே’ என்ன செய்வதென தெரியாமல் மண்டை காயும்.
”பெரீப்பன் பேர்ல 101” என்று ஒரு பெரியம்மா சொல்லும். ‘கணவன் பெயர் சொல்லாத மனைவிமார்கள் இன்னும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்’ என்கிற சரித்திர உண்மையெல்லாம் மொய் எழுதும்போது தான் விளங்கும்.
இன்னும் சிலர் எதுவுமே சொல்லாமல் பணத்தை மட்டுமே நீட்டுவர். எழுதுபவர் தான் அடையாளம் கண்டறிந்து ஊர் பேர் எழுதிக்கொள்ள வேண்டும். சில பேர் தங்கள் பேர் சொல்லும் வித்தை இருக்கிறதே! அப்பப்பா… ”தோட்டத்துப்பேர் எழுதுனாத்தான் எல்லாருக்கும் தெரியும்” என்று கூறிக்கொண்டு, முப்பாட்டனார் காலத்தில் பண்ணையம் செய்த தோட்டத்து பெயரை அடம் பிடித்து மொய்நோட்டில் எழுதச்சொல்வர். அந்த தோட்டமே இப்போது இருக்காது. ‘நிஜத்தில் இல்லாத தோட்டம், மொய்நோட்டிலாவது இருக்கட்டுமே’ என்பது அவர்கள் எண்ணமாக இருக்கக்கூடும்.
தாங்கள் பணிபுரியும் நிறுவனம் அலுவலகத்தின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து மொய் எழுதுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்குச்சென்று வந்தவர் எல்லாம், பெயருக்கு முன்னால் ‘துபாய்’ என்று மொய்நோட்டில் எழுதச்சொல்லும் அழிச்சாட்டியத்தையும், பல்லாண்டு காலமாக பங்காளிகள் உலகம் எப்படித்தான் சகித்துக்கொள்கிறதோ!
சரி விஷயத்துக்கு வருவோம். எப்படியோ ஒரு வழியாக மொய் எழுதி முடித்தாகி விட்டது.பங்காளியின் தலைவலி அதோடு தீர்ந்து விடாது. கணக்கை சரிபார்க்க வேண்டும். பக்கத்துக்கு பக்கம் கூட்டி அதை அப்படியே மொத்தமாகவும் கூட்டி, ஆயிரம் எவ்வளவு, ஐநூறு எவ்வளவு, நூறு எவ்வளவு என்று பார்த்தால், கணக்கில் கொஞ்சம் இடிக்கும். ஒவ்வொரு முறை கூட்டும்போதும் ஒவ்வொரு விதமான கூட்டுத்தொகை வந்து தொலைக்கும். நோட்டில் இருக்கும் கணக்கை காட்டிலும் கூடுதல் தொகை கையில் இருந்தால் பரவாயில்லை. கணக்கை காட்டிலும் குறைவான தொகை இருந்து விட்டால், சத்திய சோதனை தான். திருமண வீட்டுக்காரரை அழைத்து, ‘நோட்டு, பணம் எல்லாம் இருக்குது நீங்களே கூட்டிப்பாத்துக்குங்க என்று சொல்லி விடலாம் தான். அவர் ஒப்புக்கொள்ள வேண்டுமே! ‘அட உக்காரப்பா, கணக்கெல்லாம் பாத்துட்டுப் போய்டலாம்’ என்று உரிமையோடு உத்தரவு போட்டு விடுவர். அப்புறம் என்ன! மொய் எழுதிய பங்காளி, நோட்டும், பணமுமாகவே அன்று முழுவதும் அலைய வேண்டியதுதான்! சமையல்காரன், பாத்திரக்காரன், மண்டப வாடகை, சீரியல் செட் வாடகை என ஒவ்வொருவராக கணக்கு முடிக்கும்போதும், மொய் எழுதிய பங்காளியை கூப்பிடுவர். எல்லாம் பார்த்து முடிந்து புறப்படும்போது, இருட்டுக்கட்டி விடும்.
திருமண வீட்டுக்காரர், தன் மனைவி வழி உறவினரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். ”எங்கு பங்காளி மகந்தானுங்.இவிய அப்பனோடஅப்பாரு, எங்கப்பாரு, எல்லாஅண்ணந்தம்பீக.ஏதோ, இந்தப்பய்யன் இருந்ததுனால பரவால்லீங்க. இல்லீனா சிரமந்தேன். அடுத்த மாசம், எங்கு அண்ணனூடு புண்ணியார்ச்சன வருது. அதுலயும் இந்தப்பய்யனைவே எழுத வெச்சுருலாம்!”
புண்ணியார்ச்சனைக்கு, போய்டுவாரா நம்ம பங்காளி?

பின்னூட்டங்கள்
 1. பாலா சொல்கிறார்:

  மொய் எழுதறமாதிரி வெறும் கவரும் வெக்கிறவகளும் இருக்காங்க…

  Like

  • aarumugamayyasamy சொல்கிறார்:

   Bala:உண்மை தான் சார். வெறும் கவர் தருபவர்கள் மட்டுமல்ல, கவரில் அதிக தொகை குறிப்பிட்டு விட்டு உள்ளே குறைவாக வைப்பவர்களும் இருக்கின்றனர்.

   Like

 2. chitrasundar5 சொல்கிறார்:

  நான் சொல்ல வந்த கருத்தை மேலே சொல்லிவிட்டார். சில ஊர்களில் ஒலி பெருக்கி வைத்து மொய்யை ஊர் முழுவதும் கேட்கச் செய்வதுமுண்டு !

  Like

  • aarumugamayyasamy சொல்கிறார்:

   சித்ராசுந்தர்: தங்கள் வருகைக்கு நன்றி. ‘விருந்து சாப்பிட்ட அனைவரும் கட்டாயம் மொய் எழுதிச்செல்லும்படி’ அன்போடு மைக்செட்டில் ஒலி பரப்பி, வேண்டுவதை சிறு வயதில் கேட்டிருக்கிறேன். Some communities, still practice ‘moi virundhu’

   Like

 3. chitrasundar5 சொல்கிறார்:

  ஒருசிலர் வரிசை(மொய்)வைக்கும் தொகையை பெய‌ருடன் ஒலி பெருக்கியில் ஒலிக்க வைத்து உறவுகளை அலற வைத்துவிடுவர். எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்றெண்ணி கூடுதல் தொகையை அழுதுவிட்டு வருவார்கள். அதை சொன்னேன்.

  Like

 4. ranjani135 சொல்கிறார்:

  மொய் வைப்பதில் இத்தனை இருக்கிறதா? வியப்பாக இருக்கிறது. எங்கள் வீட்டுத் திருமணங்கள் எல்லாவற்றிலும் என் சின்ன மைத்துனர் தான் மொய் எழுத உட்காருவார். இப்போது அடுத்த தலைமுறையினரின் திருமணங்களுக்கும் இது தொடருவதால் அவரை நாங்கள் ‘மொய்காப்பாளர்’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்.

  நல்ல பதிவு, தொடர்ந்து எழுதுங்கள்.
  வாழ்த்துக்கள்!

  Like

 5. C Thangaraj சொல்கிறார்:

  ”தோட்டத்துப்பேர் எழுதுனாத்தான் எல்லாருக்கும் தெரியும்” என்று கூறிக்கொண்டு, முப்பாட்டனார் காலத்தில் பண்ணையம் செய்த தோட்டத்து பெயரை அடம் பிடித்து மொய்நோட்டில் எழுதச்சொல்வர். அந்த தோட்டமே இப்போது இருக்காது. ‘நிஜத்தில் இல்லாத தோட்டம், மொய்நோட்டிலாவது இருக்கட்டுமே’ என்பது அவர்கள் எண்ணமாக இருக்கக்கூடும்.

  // எங்கேயோ இடிக்குதே மச்சான்…

  Like

  • aarumugamayyasamy சொல்கிறார்:

   ரொம்ப புகழாதீங்க மாப்ளே, மச்சானுக்கு உடம்புக்கு சேராது. ஆனா இந்த மேட்டர்ல உங்க அப்ரோச் ரொம்ப புடிச்சுருக்கு மாப்ள. மேட்டர வெளியில பேசி, ஏதாவது கலவரம், துப்பாக்கிச்சூடு நடந்தா நான் பொறுப்பில்ல, தெரிஞ்சுக்குங்க மாப்ளேய்!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s